திருவெம்பாவை பாடல் 4
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம்
அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப்
போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத
விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
பொருள்:
இந்தப் பாடலும் உரையாடலாகவே அமைந்திருக்கிறது. தோழியர் அனைவரும் ஒன்று கூடி வந்து விட்டனர். உறங்கும் தோழிக்கு, எழுந்து வர மனமில்லை. ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ தோழியர், ‘ஒளி வீசும் முத்தைப் போல புன்னகை செய்பவளே !! , உனக்கு இன்னமும் விடியவில்லையா?’என்று கேட்க,
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ-அதற்கு எழுப்பப்பட்டவள், ‘கிளி போல் அழகிய சொற்களைப் பேசும் நம் தோழியர் எல்லாரும் வந்து விட்டார்களா?’ என்று உள்ளிருந்தே குரல் கொடுக்கிறாள்.
“எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம்
அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப்
போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத
விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தென்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்
தோழியர், ‘நாங்கள் எண்ணிச் சொல்லுவோம், ஆனால் அத்துணை காலமும், நீ தூங்கி, காலத்தை வீணே கழிக்காதே (அளவுக்கு மீறிய உறக்கம் ஆபத்தே. உறக்கத்தை, ‘கெடு நீரார் காமக் கலன்’களுள் ஒன்றெனக் கூறுகிறார் வள்ளுவப் பெருந்தகை.). நாங்கள் எண்ணிச் சொல்வதையும் இப்போது செய்ய மாட்டோம் விண்ணில் வாழும் தேவர்களுக்கு இறவா நிலை தரும் மருந்தாகிய அமுதம் போன்றவனை, வேதத்தின் உண்மைப் பொருளை, கண்களுக்கு இனிமையாக காட்சி தருவானை மனமாரப் பாடி, உருகி, உள்ளம் நெகிழ்ந்து நின்றுகொண்டிருக்கிறோம். வேண்டுமானால், நீயே வந்து எண்ணிப் பார். எண்ணிக்கை குறைந்தால் மீண்டும் போய்த் தூங்குவாயாக’. என்று பதிலுரைக்கிறார்கள்.
மாணிக்க வாச பெருமான் மலரடிகள் போற்றி !!!!….