குரு பெயர்ச்சி பலன்கள்-மிதுனம்
புத்திசாதுர்யமும் , நிர்வாகத்திறமையும் , சாதுர்யமாக செயல்படும் ஆற்றலும் , எதையும் சாதித்துக் கொள்ளும் சக்தியும் படைத்த மிதுன ராசி நண்பர்களே !
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் இருந்த குரு பகவான் 13.04.2022 அன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீடான மீன ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார்.
ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது ஜீவனஸ் தானம் , ராஜ்ய ஸ்தானம் , கர்மஸ்தானம் என்பதாகும். இந்த இடத்தை வைத்துதான் தொழில் , வியாபாரம் , அரசியல் ஈடுபாடு , பட்டம் , பதவி பெறுதல் , வசதி வாய்ப்புகள் , புகழ் பெறுதல் , நிர்மாணப் பணிகளில் ஈடுபடுதலைத் தெரிந்து கொள்ளலாம்.
குரு பகவான் அவர் அமரும் இடத்திற்கு துர்பலன்களை வழங்குவார் என்பதால் , பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் செய்கின்ற தொழிலில் தேக்க நிலையை உண்டாக்குவார்.
- உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்னைகளை ஏற்படுத்துவார்.
- ஒரு சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு இடமாற்றமும் , அதனால் பாதிப்புகளையும் உண்டாக்குவார்.
- முதலாளியோ மேலதிகாரியோ இக்காலத்தில் அவர்களால் நெருக்கடிகள் அதிகரிக்கும் , பணியில் இறக்கத்தை ஏற்படுத்துவார். அதனால் பார்க்கும் வேலையை வேண்டாம் என்று வெளியேறும் நிலை சிலருக்கு உண்டாகும்.
- ஒரு சிலர் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். வேறு தொழில் தொடங்க நினைத்து முயற்சி மேற்கொள்ளலாம். ஆனால் , அவற்றில் வெற்றியை அடைய முடியாமல் போகும். தேவையற்ற முயற்சிகளால் அலைச்சல் அதிகரிக்கும் , அதேநேரத்தில் வருமானம் குறைவதால் டென்ஷன் அதிகமாகும்.
- வீட்டில் இருக்கும் பொன் பொருட்களை விற்க வேண்டி வரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நெருக்கடி உண்டாகும். கருத்து வேறுபாடு அதிகரிக்கும் , பெற்றோருடனும் , சகோதர சகோதரிகளுடனும் மன வருத்தம் உண்டாகும்.
- சொந்தஊரை விட்டு வெளியூர் சென்று வசிக்க வேண்டிய சூழலும் ஒரு சிலருக்கு உண்டாகும். அக்கம் பக்கத்தினரால் தொல்லைகள் உண்டாவ துடன் , நெருங்கிய உறவினர்களுக்கு கண்டமும் ஏற்படும்.
- பொதுவில் எல்லா வகையிலும் நெருக்கடியே இருக்கும் என்பதால் இக்காலத்தில் எச்சரிக்கையுடன் இருந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்கலாம்.
குருவின் 5ம் பார்வை பலன்
முதலில் தனது ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசிக்கு இரண்டாம் இடமாகிய தன , குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார் , இதை வாக்கு ஸ்தானம். நேத்திர ஸ்தானம் என்றும் சொல்லலாம். இதனால் உங்கள் ஆரோக்கியம் சீராகும். விலகிச் சென்ற நண்பர்களும் உறவினர்களும் மீண்டும் உங்களிடம் வருவார்கள். இதனால் மனம் நிம்மதியடையும் , பண வருவாய் பல வழிகளிலும் வரும் , குடும்பம் பிரச்சனைகள் இல்லாமல் செல்லும் , உங்கள் வாக்கிற்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கல்வி கற்போருக்கு மேன்மையுண்டாகும் . ஆசிரியர்கள் வம்பு வழக்குகள் தீர்ந்து திருப்திகரமான பலன் காண்பார்கள்.திருமண வயதினர்க்கு திருமணம் கூடி வரும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும்.
குருவின் 7ம் பார்வை பலன்
ஏழாம் பார்வையாக உங்கள் ராசிக்கு நான்காம் இடமாகிய , மாதுரு , சுக , வாகன ஸ்தானத்தின் மீது தனது பார்வையை பதிக்கும் குரு பகவான் , உங்கள் மனதில் இருந்த குழப்பத்தை அகற்றி நல்வழியை காட்டப் போகிறார். உறக்கமின்றி தவித்தவர்களுக்கு நிம்மதியான உறக்கத்தை வழங்க இருக்கிறார். வாழ்க்கைத் துணையின் வழியே சுகத்தையும் , சந்தோஷத்தையும் காணும் நிலை உருவாகும் , தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் தோன்றும் , தாய் வழி உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். கல்வியில் மேன்மையுண்டாகும்.புதையல் கிடைத்தது போல் திடீர் யோகம் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உங்களுக்கு உண்டு. புதிய சொத்து சேர்க்கை உண்டு.குலதெய்வ தரிசனம் உண்டு.
குருவின் 9ம் பார்வை பலன்
ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் இடமாகிய , ருண ரோக சத்ருஸ்தானத்தின் மீது தனது பார்வையை பதிக்கும் குரு பகவான் உங்கள் உடலில் தீராமல் இருந்த நோய்களை தீர்க்கப் போகிறார் , விரோதிகளால் உண்டான கெடுதல்களை , தொல்லைகளை இல்லையெனச் செய்து உங்கள் வாழ்வில் நிம்மதியை உண்டாக்கப் போகிறார்.
எதிர்பாலினரால் உண்டான அவதியை நீக்கி உங்கள் மனதில் இருந்த இனம் புரியாத பயத்தை அகற்றி தெளிவையும் துணிவையும் உங்களுக்கு வழங்கப் போகிறார். இவை யாவும் குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு உண்டாகப் போகும் நற்பலன்கள் . குரு பகவான் அவர் அமரும் ஒரு இடத்திற்கு கெடுபலனை வழங்கினாலும் அவர் பார்வையிடும் மூன்று இடங்களுக்கு நற்பலன்களை வழங்கி உங்களுக்கு நன்மையளிக்கப் போகிறார்.
பரிகாரம்
வியாழக் கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு முல்லைப் பூமாலை சூட்டி , மஞ்சள் நிற இனிப்பை வழங்கி அர்ச்சனை செய்து வாருங்கள் .சங்கடங்கள் விலகும் .