சந்திரன் தோஷம் நீக்கும் பரிகாரம்
🧡சந்திரனை மாத்ரு காரகன் என்கின்றன ஜோதிட சாஸ்திரங்கள். தாய் வழி உறவுகளுடனான ஒற்றுமைக்கு ஒருவரின் ஜாதகத்தில் உள்ள சந்திரனின் அமைப்பே
காரணம். அதோடு சந்திரனே மனோகாரகன் என்றும் சொகின்றன ஜோதிட நூல்கள். சந்திரனுக்கே மதி என்றொரு பெயரும் இருக்கிறது , தெரியும்தானே ? )
🧡ஒருவரது மன நிலை நன்கு இருக்கவோ அல்லது குழப்பங்களுடன் இருக்கவோ சந்திரனின் அமைப்பே காரணம். ( சந்திராஷ்டம தினங்களில் மனக் குழப்பம் வரலாம் என்பதால்தான் முக்கியமான செயல்களை தவிர்க்கச் சொல்வார்கள் ! )
🧡அறிவுக்கு , அழகுக்கு , தாய்வழி உறவுகளுடனான ஒற்றுமைக்கு என்று அனைத்துக்கும் காரணமான சந்திரனின் அமைப்பு ஒருவரது ஜாதகத்தில் தோஷம் அடைந்திருந்தால் , எப்போதும் ஏதாவது ஒரு மன உளைச்சல் , வீண் சந்தேகக் குழப்பம் , எதையோ இழந்ததுபோன்ற உணர்வு , தாய்வழி உறவுகளுடன் பிரச்னை , தாயாரின் உடல்நலத்தில் அடிக்கடி சீர்கேடுகள் , தோற்றத்தில் மாற்றங்கள் என்றெல்லாம் பலவித பிரச்னைகள் வரலாம். இவை கோசாரத்தில் ஏற்படும் சந்திரனின் மாற்றத்தாலும் ஏற்படக் கூடும் .
🧡சந்திரன் மதி காரகனாக இருந்தாலும் அவனது மதியே கெட்டு , சில சாபங்களைப் பெற்றான் . அதனால் வருந்தியவன் , சிவபெருமானையும் பார்வதியையும் கும்பிட்டே சாபம் நீங்கப் பெற்றான். ஈசன் திருமுடியில் பிறையாக குறையாகவே இருந்தான் சந்திரன். அம்பிகை ஈசனுடன் இணைந்தபோது அவள் திருமுடியில் இருந்த சந்திரனின் மற்றொரு பிறையும் இணைந்த பிறகே இரு பிறைகளும் இணைந்து முழு நிலவு ஆகியது.
🧡அதனால் , சந்திரன் தோஷம் உள்ளவர்கள் , அன்னை பார்வதியை ஆராதிப்பது மிக விசேஷமான நற்பலனைத் தரும் . குறிப்பாக மாலை நேரத்தில் சந்திரன் உதயத்திற்குப் பிறகு பார்வதி தேவி முன் நெய்விளக்கு ஏற்றிவைத்துக் கும்பிடுவதும் , பார்வதியின் காயத்ரியைச் சொல்வதும் கூடுதல் நன்மை தரும்.
🧡சந்திரனுக்கு அதிதேவதை பார்வதிதேவியே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மனதில் தேவையற்ற குழப்பங்கள் உருவாகலாம் என்பதால் , இயன்றவரை தியானம் , யோகா அல்லது மனதுக்குப் பிடித்த ஓவியம் , பாட்டு , நடனம் என கலைகள் எதையாவது கற்றுக்கொள்வது மனதை ஒருநிலைப்படச் செய்யும்.
🧡சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் இருப்பார் . பன்னிரண்டு ராசிகளையும் ஒரு மாதத்தில் வலம் வந்துவிடுவார் . ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கும் நாளே சந்திராஷ்டமம் எனப்படுகிறது. சந்திரன் ஜன்மத்தில் இருக்கும்போதும் , அஷ்டமம் எனும் எட்டாமிடத்தில் இருக்கும் சமயத்திலும் தெய்வ நினைவுடன் இருப்பது நல்லது.
🧡சந்திரனுக்கு உரிய தானியம் நெல் என்றாலும் , வெண்மை நிறம் உடைய அரிசி , அவல் , பொரி போன்றவையும் சந்திரனுக்கு உகந்தவையே. அதோடு பால் கலந்த உணவுகளும் விசேஷமே .
🧡திங்கட்கிழமைகளில் சிவாலயம் சென்று அம்பிகைக்கு மல்லிகை மலர் தந்து ஆராதிப்பது விசேஷமான நற்பலன் தரும் . மாதம் ஒரு திங்கட்கிழமையில் வெண்பொங்கல் , பால்சாதம் , அவல்கலந்த உணவு போன்றவற்றுள் இயன்றதை தானம் அளிப்பது சிறப்பு . அன்றைய தினம் அசைவம் தவிர்ப்பது நன்று.