சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – மகர ராசி
(உத்ராடம் 2,3,4 ம் பாதம்,திருவோணம்,அவிட்டம் 1,2,3ம் பாதம்)
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மகர ராசி
இதன் அதிபதி: சனி
உருவம்:முதலை
வகை:சர ராசி
நிறம்:வெளிர் சிவப்பு நிறம்
கடவுள்: ராஜ ராஜேஸ்வரி
குறிப்பு : செவ்வாய் உச்சம் ,குரு நீசம்
மகர ராசியும் சனியும்
மகர ராசிக்கு சனி பகவான் ராசி அதிபதி மற்றும் 2-ஆம் அதிபதி ஆவார். இவர் இவ்வளவு காலமும், ராசியின் இரண்டாம் வீட்டில் இருந்தார். இப்போதைய கோட்சார மாற்றத்தில், 3-ஆமிடத்திற்கு வந்து அமர்கிறார்.
மகர ராசிக்கு சனி அமர்ந்த பலன்
மகர ராசியின், 3-ஆமிடத்தில் சனி அமர்கிறார். இந்த 3-ஆமிடம் என்பது தைரிய வீர்ய ஸ்தானம். எனவே சனிபகவான், தான் இருந்த இடத்தில் 3-ஆமிட காரக சம்பந்த பலன்களையே வழங்குவார். 3-ஆமிடம் என்பது சிறு தூரப் பயணம் மற்றும் பணியாளர்களையும் குறிக்கும். இளைய சகோதரனைக் குறிப்பதும் இவ்விடமே ஆகும்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
இந்நாட்களில் சனி, பூரட்டாதி நட்சத்திரம் மூலம் பலன்களை வழங்குவார். இந்த ராசி குழந்தைகளுக்கு, இளைய சகோதரம் கிடைப்பதால், இந்தக் குழந்தைகள் தன் பாட்டி வீடு அல்லது அம்மாவிடம் அதிக நேரம் இருக்க முடியாமல் போய்விடும். வீடு விற்றுப் பணம் வந்தால், அதனை அப்படியே கையில் வைத்திராமல், உடனே வேறு இடத்தில் முதலீடு செய்துவிடுவீர்கள்.
உங்கள் குடும்பம் வேறு இடத்தில் இருக்கிற சூழ்நிலை ஏற்படும். விளம்பரங்களுக்கு டப்பிங் கொடுக்கும் வாய்ப்பு வரும். சில சுற்றுலா பயண ஒப்பந்தம் ஏற்பாடு செய்வீர்கள். ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு வழிகாட்டியாக அமைவீர்கள். பேருந்து, சிற்றுந்து சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும். அன்னதானக் கூடங்களில் ஒப்பந்தம் பெறுவீர்கள். விலை உயர்ந்த படுக்கை சார்ந்த டீலர்ஷிப் பெறுவீர்கள்.சிலர் பழைய பொருட்களை, புதுப் பொருளாக மாற்றிக்கொடுக்கும் அலைச்சலைப் பெறுவீர்கள். பெரிய பயண விஷயங்களையும். கைபேசிமூலம் குறுகிய தூரப் பயண மாக மாற்றிக்கொள்வீர்கள்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இப்போதில் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வார் இப்போது உங்களுக்கு வீரதீரம் பொங்கிப் பெருகும். அதுவும் காக விஷயத்தில் ரொம்ப பந்தா காண்பிப்பீர்கள். இந்த வீட்டை வாங்கட்டுமா, இந்தத் தெருவை வாங்கட் டுமா, இந்தஊரை வாங்கட்டுமா, இந்த மாதில், நாட்டை வாங்கட்டுமா, அட பக்கத்துல இருக்கிற இலங்கையை எதுக்கும் வாங்கி வச்சுப்போம், அவசரத்துக்கு உதவும் என பெரிய சவுண்ட் விடுவீர்கள். பேச்சும் சும்மா அதிர்கிற மாதிரி அமையும் வீட்டில் இந்த துரும்பைத் தூக்கி அந்தாண்டை போட மாட்டேன் எல்லாத்துக்கும் வேலையாள்தான் என்று ஜபர்தஸ்து காண்பிப்பீர்கள்.
காதில் ஒரு கம்மல் அணிந்தால் என்ன பெருமை காது முழுக்கத் துளையிட்டு, வரிசையாக கம்மல் மாட்டிக் கொள்வீர்கள் ராசிநாதன் சனி இருப்பது 3-ஆம் வீட்டில் எனவே கொஞ்சம் ஜல்சா விஷயமும் நடக்கும். ஆனால் இருப்பது குரு வீடு அதனால் அவர் மிகவும் கட்டுப் படுத்தி ஜாதகரை ஓரளவிற்கு ஒழுங்காகக் காப்பாற்றிவிடுவார்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இந்தக் காலகட்டத்தில், சனிபகவான் ரேவதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார் இதனால் ஒரு வேலை கிடைத்துவிடும். அது வங்கி சார்ந்த நிதி நிறுவனமாக இருக்கும். தகவல் தொடர்புத் துறையாக அமையும். போக்குவரத்து பணிமனை பணியாக இருக்கும். மருத்துவமனையில் மருந்துச் சீட்டு கொடுக்கும் வேலை அல்லது ஆம்புலன்ஸ் டிரைவர் வேலையாக இருக்கும். கொடுத்த கடனுக்கு, வட்டி வசூலிக்கும் பணியாக இருக்கும். சுகாதாரத் துறையில், மனிதர்களை வேலை வாங்கும் ஒப்பந்தம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையில், கட்டடதொழிலாளர்களை மேற்பார்வை பார்க்கும் பணியோ, ஒப்பந்தமோ கிடைக்கும்.
பள்ளி, கல்லூரிகளை தூய்மைப்படுத்தும் டெண்டர் எடுப்பீர்கள் தோட்டக்கலை சார்ந்த டெண்டர் கிடைக்கும். செய்தித்தாள்களை விநியோகிக்கும், விநியோகஸ்தர் ஆகி விடலாம். கைபேசி பழுது பார்க்கும் வேலை கிடைக்கும். அல்லது குறிப்பிட்ட கைபேசி கம்பெனியின் சர்வீஸ் செண்டர் ஒப்பந்தம் கிடைக்கும். 6-ஆம் அதிபதி சாரத்தில் செல்லும் சனி, ஜாதகரை ஏதோ ஒரு வேலையில் உட்கார்த்திவிடுவார்.
சனி பார்வை பலன்
சனி 3, 7, 10-ஆம் பார்வை நோக்கு கொண்டவர்.
சனியின் 3-ஆம் பார்வை பலன்
சனி தனது 3-ஆம் பார்வையால், மகர ராசியின் 5-ஆம் வீட்டை பார்க்கிறார் 5-ஆம் வீடு என்பது முதலில் வாரிசைக் குறிக்கும். எனவே உங்கள் வாரிசு உப்பு பெறாத விஷயத்திற்கும் உங்களிடம் கோபம் கொள்வார். காதல் விஷயம் கஷ்டம்தான். இதுவரையில் இருந்த காதல், இந்த கனி எண்டர் ஆகியவுடன், எக்ஸிட் ஆகிவிடும். நிறைய சினிமா கலைஞர்கள், ஏதோ, ஒரு காரணத்தால் ஒழுங்காக வுட்டிங் போக முடியாமல் ஆகிவிடும். பங்கு வர்த்தகம் உங்களை அழ வைத்துவிடும்.
மந்திரி பதவியை மறந்துவிட வேண்டியதுதான். சுவாமி மந்திர பாராயணம்போது, இடை இடையே மறந்துவிடும். விரதம் ஒழுங்காக இருக்க இயலாது. குலதெய்வக் கோவிலுக்குப் போவது நிறைய தடைகளை சந்திக்கும் உங்கள் யோசனை, எதிர்மறையாக நடக்கும் விளையாட்டு வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும் உங்களின் முயற்சிகள் அது சார்ந்த முன்னேற்றம் பின்னடைவை சந்திக்கும் ஆக, 5-ஆமிடத்தைப் பார்த்த சனி, அதனை தாறுமாறு ஆக்குகிறார்.
சனியின் 7-ஆம் பார்வை பலன்
சனி தனது ஏழாம் பார்வையால், மகர ராசியின் 9-ஆமிடத்தை எட்டிப் பார்க்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி ஆனவுடன், மகர ராசியினரின் தந்தையின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டும். கோவில் போகும்போது தடைகள் ஏற்படும். உயர் கல்வி தடுமாறும் மருத்துவக் கல்வி மாணவர்கள், சட்டத்துறை, வனப்பயிற்சி மாணவர்கள், வேதம் பயிலும் மாணவர்கள் புதியவை சுண்டுபிடிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள், இன்ஷ்யூரன்ஸ் பயிற்சியாளர், பிரேத பரிசோதனை செய்யும் துறை சார்ந்தோர், மக்கள் தொடர்பு மாணவர்கள், அரசியல் படிக்கும் மாணவர்கள், வேளாண்துறை மாணவர்கள், விஞ்ஞானிகள் என இவர்கள் கல்வியில் தடுமாற்றமும் தடையும் காண்பர் தவறுகள் மிக சகஜமாக ஏற்படும்.
நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் பெண்டிங் நிலை ஆகிவிடும். உயர்கல்வி சம்பந்த, வெளிநாட்டு பயண டிக்கெட்டில் தவறு கண்டுபிடிக்கப்படும். சனி, 9-ஆம் வீட்டை பார்க்கும்போது. மாணவர்களை எப்படி படிப்பை முடிக்கிறாய். நானும் ஒரு கை பார்த்து விடுகிறேன் எனும் ரேஞ்சில் முறைத்து பார்க்கிறார்.
சனியின் 10-ஆம் பார்வை பலன்கள்
சனி, தனது 10-ஆம் பார்வையால், மகர ராசியின் 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12-ஆமிடம் என்பது அயன, சயன ஸ்தானம். அதாவது ரொம்ப அலைவது, தூங்குவது என அர்த்தம் சனி பார்த்தால் சும்மா இருப் பாரா. முதல்ல அலைறத நிறுத்து என ஸ்டாப் போர்டு வைத்துவிடுவார். வீண் செலவைக் குறைத்துவிடுவார். அதுவும் தர்மம், கோவில் என்று வந்தால், நானே சாமிக்கு நேரிடையா கொடுத்துக்கொள்வேன் என்று கூறி விடுவீர்கள். நினைச்ச பொருளை எல்லாம் வாங்கமாட்டீர்கள். இது தேவையா என மல்லாந்து படுத்து சிந்தித்து, பின் தேவை யில்லை என பர்ஸை மூடிவிடுவீர்கள்.
உங்கள் தாயார் கேட்டாலும், அப்புறமா தருகிறேன் எனக் கூறிவிட்டு, கொடுக்காமல் இருந்துவிடுவீர்கள் அவ்வளவு ஏன் போலீஸில் மாட்டிக்கொண்டு, ஃபைன் கட்ட வேண்டுமானாலும், வீட்டிற்கு போய் எடுத்துத் தருகிறேன் என்பீர்கள். அரசியல்வாதி எவ்வளவு கில்லாடியாக இருப்பினும், அவருக்கும் இதே பே, பே தான் 12-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, செலவை மட்டுமல்ல, மனதையும் சுருக்கிவிடுகிறார்.
மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் நண்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த கயிறு எங்கே போனது என்று தெரியாத அளவுக்கு நிவாரணம் அதிகமாக இருக்கும்
மனதை மிகவும் அழுத்திக் கொண்டிருந்த மனத் துயரங்கள் எல்லாம் விலகி ஓடிவிடும்
அதிகம் தோல்விகளைச் சந்தித்தவர்கள் அதை ஈடு கட்டும் விதமாக வெற்றியைச் சந்திப்பார்கள். இதுவரை பலமுறை தட்டிப் போன பதவி உயர்வு கைக்கு கிடைக்க வேண்டிய அதிகாரம் யாரிடமும் பறி கொடுத்துவிட்ட அங்கீகாரம் இவை அனைத்தும் தானாக தேடி ஓடி வந்து உங்கள் கைகளில் தஞ்சமடையும்
திருமணத்திற்கு முயற்சியே செய்யாமல் இருந்தாலும் திடீரென நல்ல வாழ்க்கை துணை தேடி வந்து அமைந்து திருமண வாய்ப்புகள் கைகூடி வரும்
திட்டத்திலேயே இல்லாத படிப்புகள் கல்வி மேம்பாடு இவற்றின் மீது திடீரென ஆர்வம் உண்டாகி அவற்றை நோக்கி முயற்சிகள் நகரும்; வெற்றியும் கிடைக்கும்
இனிமேல் கிடைக்கவே போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த வசூலாகாத கடல்கள் தானாக வசூலாக தொடங்கும் .எதிர்பார்த்து காத்திருந்த கடன் உதவிகள் தானாக கைக்கு வந்து சேரும்.
நீண்ட நாட்களாக தொந்தரவு செய்து கொண்டிருந்த உடல் நலம் சீராகி மிகவும் நல்ல நிலைக்கு மேம்படும். மருத்துவ சிகிச்சை இல்லை என்ற நிலைக்கு கைவிடப்பட்ட சிலருக்கு அது அப்படி இல்லை என்று அதிசயமாக எதிர்பாராத இடத்திலிருந்து சிகிச்சை உதவி கிடைத்து போய் முற்றிலும் குணமாகும்
சொத்து மற்றும் கடன் தொடர்பான வழக்கு வில்லங்கங்கள் அனைத்தும் தீர்ந்து போய் சாதகமான நிலை உருவாகும். இதன் காரணமாக புதிய சொத்துகள் வாங்கவும் புதிய முதலீடுகள் செய்வதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரம் மிக்க பதவிகள் பொறுப்புகள் தேடி வரும்.மிக நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். பொருள் ஆபரணங்கள் வாங்குவீர்கள். இதுவரை இல்லாத மன நிம்மதியான காலமாக இந்த காலம் அமைந்திருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம் .புதிய திட்டங்களை நீங்களாகவே யோசித்து செயல்படுத்த தொடங்குவீர்கள்.

மகர ராசி திருவோணம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
உங்கள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி அமைக்கக்கூடிய சனி பெயர்ச்சி காலம். அதிக நன்மைகளைச் சந்திப்பீர்கள். வசதி உள்ளவர்களின் தோழமை கிடைத்து அவர்கள் உங்களுக்காக பணம் முதலீடு செய்வார்கள். இவர்களை நம்பலாமா வேண்டாமா என்ற அளவில் பலரைக் குறித்து இருந்த சந்தேகங்கள் விலகி யாரை நம்பலாம் யாரை நம்ப வேண்டாம் என்ற தெளிவு கிடைத்து அதற்கு ஏற்ப முடிவு எடுப்பீர்கள்.
விளையாட்டு, கலை, கேளிக்கை இவற்றை தொழிலாக கொண்டவர்கள் மகர ராசியாக இருந்து அதிலும் திருவோண நட்சத்திரமாக இருந்தால் அதிக லாபம் அடைவார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டுத்தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அனுகூலமான காலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஏற்றும் தொழிலில் ஈடுபடுவீர்கள் அல்லது புத்தியை பயன்படுத்தி முதலீடு குறைவாக இருந்து அதிக லாபம் ஈட்டும் கன்சல்டிங் போன்ற தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் லாபகரமான காலம் இது .
சிக்கலாக இழுத்தடித்துக் கொண்டிருந்த வழக்குகள் சீக்கிரமாக முடிவுக்கு வரும். முடிவும் உங்களுக்கு சாதகமாகஇருக்கும். திருமண தடை நீங்கும் திருமண பாக்கியம் கைகூடும்
சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது எதிர்ப்புகளும் சவால்களும் தோன்றும் சமாளிக்க முடியாத அளவுக்கு சங்கடங்கள் உருவாகும், கவனக் குறைவாக இருந்தால் கடன் தொல்லை மிகுதியாக தொந்தரவு செய்யும். அதுவரை லாபமாக நடந்து கொண்டிருந்த விஷயங்கள் திடீரென நஷ்டத்தை நோக்கி திசை திரும்பி மனத்தூயரை அதிகரிக்கும்.
உறவுகளின் திடீரென்று திருப்புங்கள் சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது உருவாகும். இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சனி உத்திரட்டாதி சாரத்தில் இருக்கும்போது குழப்பங்கள் அதிகரித்து தேவையில்லாத செலவுகளை உருவாக்கி அல்லது லாபம் இல்லாத முதலீடுகளில் ஈடுபடத் தூண்டுவார்
சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மகர ராசி திருவோணம் நட்சத்திரம் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அமைதியை காக்க வேண்டும். அதேநேரம் தகுதியான நேரத்தில் சமயம் பார்த்து பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இருக்கும், தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை காணப்படுகிறது.
மொத்த சனி பெயர்ச்சி காலத்திலும் மாணவர்கள் ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். போட்டி பொறாமை இருந்தாலும் வெற்றி நிச்சயம்
எதிர்பார்க்காத வெளிநாட்டு பயணம் அமையும். அது தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். அரசாங்கம் வரி அதிகாரிகள் தொடர்பாக தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டிய காலம்.
மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் முதலாம் பாதம் மற்றும் இரண்டாம் பாதத்தில் பிறந்த நண்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
மழை நின்று விட்டது ஆனால் தூவானம் விடவில்லை என்று சொல்லுவது போல் முற்றிலும் துன்பங்கள் தொலைந்து போய்விடவில்லை, அவை கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டிக் கொண்டே இருக்கும் காலகட்டம். சொந்த வாழ்க்கையில் உறவினர்கள் நச்சரிப்பு அதிகமாக இருக்கும் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உருவாகி அடிக்கடி பிரிவினை தோன்றும்.
கணவன் மனைவி உறவு கசப்புடன் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்தை ஒட்டி அடிக்கடி சங்கடமான சண்டைகள் வீட்டில் வரும். பெரியவர்களுக்கு இருப்பதைக் காட்டிலும் வயதில் சிறியவர்களுக்கு குறிப்பாக மாணவர்களுக்கு கஷ்டங்கள் குறைவாகவே இருக்கும் மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படலாம் அவர்களுக்கு முன்னேற்றமான காலம் என்று சொல்ல வேண்டும்
வேலை பார்க்கும் இடத்தில் பொறாமை இருக்கும். பகை உணர்வு கொண்டவர்கள் உங்களை சிக்கலில் மாட்டி விடுவார்கள், அதில் இருந்து மீண்டு வருவதற்கு அதிகம் செலவு அல்லது சிக்கல்களை சந்தித்து பிறகு வெளியில் வர வேண்டி இருக்கும். அதிகம் விரையம் ஆகும்
சனி உத்திரட்டாதி சாரம் அடையும்போது நிலைமை மாறிவிடும். சாதகமான காலமாக மாறிவிடும் இழப்புகளை சரிகட்டும் அளவிற்கு வருமானம் உயர்ந்து விடும் பதவி உயர்வு கிடைக்கும். அங்கீகாரம் கிடைக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும்
உடல் நலத்தில் முன்னேற்றம் இருக்கும். ஆனாலும் மருத்துவ செலவுகள் அதிகமாக இருக்கும். இடப்பெயர்ச்சி உத்தியோகம் மாற்றம், ஊர் விட்டு ஊர் மாற்றமடைதல் டிரான்ஸ்பர் போன்றவை எதிர்பார்க்கலாம். இந்த மாற்றம் அனுகூலமான பலன்களை கொண்டு வந்து சேர்ப்பதாகவும் இருக்கும்.
பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சிறிய அளவில் முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஆதாயமான காலம் என்று சொல்லலாம்
சீருடை பணியாளர்களான காவல்துறை அல்லது ஊர்க்காவல் படை அல்லது தீயணைப்புத்துறை அல்லது ராணுவம் அல்லது ஏனைய படை பிரிவுகளில் வேலை செய் பார்க்கும் நண்பர்களுக்கு அதாவது அவிட்ட நட்சத்திரம் முதல் 2 பாதத்தில் பிறந்த இந்த நண்பர்களுக்கு எதிர்பாராத இடங்களில் வேலை பார்க்க அவசியம் உருவாகும்; அது சவால்களை அதிகமாக கொண்டு வந்து சேர்க்கும். விருப்ப ஓய்வு பெற்று விடலாமா என்று யோசிக்க வைக்கும். தானாக முன்வந்து பணி ஓய்வு பெறும் வாலண்டரி ரிட்டயர்மென்ட் போன்ற விஷயங்களை மனதில் யோசிக்கலாம். ஆனால் செயல்படுத்தாதீர்கள்
இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நன்மையும் தீமையும் கலந்த அளவில் அனுபவிப்பவர்கள் மகர ராசி அவிட்டம் நட்சத்திர நண்பர்கள்.

சனியின் மொத்த பலன்
மகர ராசியின் 3-ஆமிடத்தில் அமர்ந்த சனி, இருக்கும் இட பலன்களை நன்மை யாகவும், பார்க்கும் இட பலன்களை மிகக் குறைத்தும் தருகிறார். இதனால் ஜாதகரை, மிகத் துள்ளாட்டம் போடாமல்,ஒரு சமநிலையில் வைத்திருக்கிறார். பார்க்குமிட பலன்களை, கவனித்தில் கொண்டு, சற்று கவனமாக எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமானது.
வக்ர சனி பலன்கள்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் பெறுவார். ரொம்ப குதிக்க, துள்ளாட்டம் போடாமல் அமைதி காக்க வேண்டியிருக்கும்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆகிறார். அப்போது உங்கள் வேலையில் சற்று பின்ன டைவை சந்திக்க நேரிடும். ஆஞ்சனேயரை விளக்கேற்றி வணங்கவும்.
வக்ர சனிக்கு திருக்குவளை ஸ்தல கோளிலிநாதரை வணங்கவேண்டும்.
பரிகாரங்கள்
திருநெல்வேலி மாவட்டம் சுயத்தாறு திருவாறைத்தலம் எனும் கோவில் சென்று வணங்கவும் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் ஸ்ரீ அபயஹஸ்த ஆஞ்சனேயர் தரிசனம் சிறப்பு. அருகிலுள்ள சனி சந்நிதிக்கு விளக் கேற்றி வணங்கவும் சனீஸ்வர சந்நிதி அர்ச்சகருக்கு, நல்லெண்ணெய் வாங்கிக் கொடுக்கவும். ரொம்ப கஷ்ட தசையில் உள்ளவர்களின் இரு சக்கர வாகன பழுது நீக்கும் செலவை ஏற்றுக்கொள்ளவும்