சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-கன்னி
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!! சித்திரை 8-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் குரு பகவான் அஷ்டம குருவாக இருக்கிறார்.
இந்த வருடம் முழுவதும் சனிபகவான் ஆறாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
ராகுவும்-கேதுவும் ஐப்பசி 13-ம் தேதி வரை 8 மற்றும் 2-ம் இடங்களிலும், பிறகு 7 மற்றும் 1-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இதனால் தொழில் துறையில் கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கொடுத்தால் திரும்ப கிடைப்பது கடினம். தாயின் சுகம் பாதிக்கும். உங்களுக்கு வயிற்றில் கோளாறு ஏற்படும். காரமான பொருள்களையும் அஜீரணம் ஏற்படுத்தும் பொருள்களையும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. மனைவியின் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு இடமாற்றம் நடக்கும். மேலதிகாரிகளின் நட்பு பாதிக்கும். போட்டியாளர்களை வெல்வீர்கள். பழைய பாக்கிகள் வசூல் ஆகும். ஆனால் வசூல் ஆன பணத்தை பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். நண்பர்கள் உறவினர்களுடன் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு சரியாகும். சிலருக்கு கூட்டு குடும்பத்தில் இருந்து விலகி தனி குடுத்தனம் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தினருடன் பேசும் போது தேவையில்லாமல் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.
மாணவர்கள் மிகவும் கருத்துடன் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெறுவர். ஐப்பசி 13-ம் தேதிக்கு பிறகு பிரச்சனைகள் படிப்படியாக குறைந்து நன்மைகள் ஏற்படும்.
பலன் தரும் பரிகாரம்
வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வாருங்கள். சித்திரை மாதம் ஒருமுறை அவசியம் குலதெய்வத்திற்கு பொங்கல் வைத்து பூஜை செய்யுங்கள். பலவிதமான சிரமங்களும் குறைந்து நன்மை பெறுவீர்கள்.