ஜோதிட குறிப்புகள்-பகுதி-12
- லக்கினாதிபதி எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுக்குரிய கிரகம் ஆட்சி அல்லது உச்சம் பெற்று ஜென்ம லக்னத்திலிருந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்குமானால் ஜாதகர் யோகம் உள்ளவராவார். அவருக்கு ஆற்றல் ஏற்படும். செல்வம் சேரும்,மதிப்பு உயரும், சொத்துக்களும் வந்து சேரும்.
- உச்ச சந்திரன் ஜென்ம லக்னத்தில் இருந்து சூரியன், குரு, சனி ஆகியோர் முறையே 4, 7, 10-ம் வீடுகளில் இருந்தால் ஜாதகருக்கு அரச யோகம் உண்டாகும்.
- மகரத்தில் சனி இருக்கப் பெற்று அதுவே ஜன்ம லக்னமாகி சந்திரன் மீனத்தில், செவ்வாய் மிதுனத்தில், புதன் கன்னியில், குரு தனுசில் இருந்தால் ஜாதகர் அரசு அந்தஸ்துள்ள யோகத்தை பெறுவார்.
- செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருக்க தனுசு ராசியில் குருவும், கன்னி ராசியில் புதனும் இருக்க பெற்று கன்னிராசி லக்னமாக அமைந்தாலும், சுக்கிரன் மீனத்தில் இருந்து மீன ராசி லக்னமாக அமைந்தாலும் அந்த ஜாதகர் அரசு அந்தஸ்தையும் பெரும் பதவியையும் பெறுவார்.
- உச்சம் பெற்ற குரு கடக லக்னத்தில் இருக்க, சந்திரன், புதன், சுக்கிரன் ஆகியோர் ரிஷப ராசியில் இருக்க, மேஷ ராசியில் சூரியன் இருக்கப் பெற்றால், அந்த ஜாதகர் தைரியசாலியாகவும், அரச பதவியை வகிப்பவராகவும் விளங்குவார்.
- மீன ராசி லக்னமாக அமைந்து சந்திரன் அதிலிருந்து செவ்வாய் மகர ராசியிலும், சனி கும்ப ராசியிலும், சூரியன் சிம்ம ராசியிலும் இருந்தால் ஜாதகர் நாடாளும் தகுதியை பெறுவார்.
- மேஷ ராசியில் செவ்வாய் இருக்க அதுவே லக்னமாக அமைந்து குருவானவர் கடக ராசியில் இருந்தால். அந்த ஜாதகர் உயர்ந்த தன்மைகள் நிறைந்த மன்னனாவார்.
- உச்சம் பெற்ற குருவானவர் லக்னத்திலிருந்து, 10-ம் வீடாகிய மேஷ ராசியில் செவ்வாய் இருந்தால் மேற்சொன்னவாறு யோகம் உண்டாகும்.
- மகரராசி லக்னமாகி அதில் சனி இருந்து, 4-ல் செவ்வாயும், 7-ல் சந்திரனும், 8-ல் சூரியனும், 9-ல் புதனும், 10-ல் சுக்கிரனும் இருந்தால் ஜாதகர் புகழ்பெற்ற அரசன் ஆவார்.
- கன்னி ராசி லக்னமாக அமைந்து அதில் புதன் இருந்து சூரியன் சிம்ம ராசியிலும், சுக்கிரன் மிதுன ராசியிலும், குரு-சந்திரன் ஆகியோர் ஒன்றுகூடி மீன ராசியிலும், செவ்வாயும் சனியும் ஒன்றுகூடி மகர ராசியிலும் இருந்தால், இத்தகைய கிரக அமைப்பு கொண்ட ஜாதகர் அரசு அந்தஸ்தை பெறுவார்.
- ஒரு ஜாதகத்தில் கர்மாதிபதி உச்சம் பெற்றால், அந்த ஜாதகர் அமைச்சராகவோ அல்லது அந்தப் பதவிக்கு நிகரானது ஒரு ஸ்தானம் உடையவராகவோ விளங்குவார்.
- கர்மாதிபதி தனது சொந்த வீட்டில் இருந்தாலும், தனது நட்பு கிரகத்தின் வீட்டில் இருந்தாலும், ஜாதகருக்கு உன்னதமான பதவியும், அந்த பதவியில் மேன்மையும் உண்டாகும்.
- ஜாதகத்தில் ஒரே ஒரு கிரகம் லக்னத்தில் உச்சம் பெற்று இருந்து, ஒரு நட்பு கிரகத்துடன் கூடி இருந்தாலும், அல்லது நட்பு கிரகத்தால் பார்க்கப்பட்டாலும் அந்த ஜாதகர் செல்வத்தை குவிப்பவராவார்.
- அரச குடும்பத்தில் பிறந்தவராக இருந்து மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் உச்சம் அல்லது ஆட்சி பெற்று கேந்திரத்தில் இருக்க பெரும் நிலையை அடைந்தாரானால் அவர் நிச்சயமாக அரசனாகும் தகுதி அடைவார்.
- ஐந்து கிரகங்கள், 5-க்கும் மேற்பட்ட கிரகங்கள் கேந்திரங்களில் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சி பெற்று இருந்தால், ஜாதகர் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனது வாழ்க்கையில் அரசு பதவியையோ அல்லது உயர்ந்த ஸ்தானம் ஒன்றையோ வகிக்க கூடும்.
- சந்திர லக்னத்தில் இருந்து 10-ம் இடத்தில் சுபகிரகங்கள் இருப்பார்களானால் அந்த ஜாதகர் நல்லொழுக்கமும், நல்லறிவும் பெற்றவராகி, செல்வமும் ,சுபிட்சமும் பெற்று வாழ்வில் உயர்வை அடைய தடை இராது.
- ஜென்ம லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் சுப கிரகங்கள் இருந்தாலும் மேற்சொன்ன நற்பலன்கள் உண்டாகும்
- புதன், குரு, சுக்கிரன் 1, 2, 4, 5 ,7, 9 அல்லது 10 ஆகிய இடங்களில் ஒன்றிலிருந்து குருவானவர் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சி பெற்று இருந்தாலும் அல்லது நட்பு கிரகத்தின் வீட்டில் இருந்தாலும் அந்த ஜாதகர் அறிவாற்றல் உடையவராகவும், சிறந்த கல்விமானாக வருவதுடன், புகழும் அதிர்ஷ்டமும் அடையப் பெறுவார். இவர் உன்னதமான ஒரு கவிஞராகவும் முடியும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …