மாந்திதோஷம்
சோழவள நன்நாட்டில் கோயில் நகரமாகும் குடந்தைக்கு தென்பால் தொடர்வண்டி நிலையம் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம்-திருவாரூர் முதன்மை சாலையில் காவேரியின் உபநதியான அரசலாறு மற்றும் திருமலைராஜன் ஆற்றில் இடையில் திருமங்கை ஆழ்வார் மங்களாசனம் செய்யப்பெற்ற 108 திருப்பதிகளில் ஒன்றான ‘நாச்சியார் கோயில்‘ அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலுக்கும், திருநரையூர் ‘சித்தீஸ்வரம்’ அருள்மிகு ‘சித்தநாத ஸ்வாமி’ திருக்கோயிலுக்கும் இடையே இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
தலச்சிறப்பு
இத்திருக்கோயில் ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் அமைப்பு சிறப்பை போன்றே உள்ளது. மூலவர் “அருள்மிகு இராமநாதசுவாமி” ,“அம்பிகை அருள்மிகு பர்வதவர்த்தனி” ஆகும். இத்திருக்கோயிலில் தனி சன்னதியில் தன் இரு மனைவி இரு மகன்களுடன் குடும்ப சமேதராய் “அருள்மிகு சனீஸ்வர பகவான்” அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். “அருள்மிகு சனிதோஷ பரிகார திருத்தலமாக இத்தலம் உள்ளது”.ஸ்ரீ ராமர் போருக்கு செல்லும் முன் வணங்கி சென்றது ராமேஸ்வரம் ஆகும். போரில் வெற்றி பெற்ற பிறகு வெற்றி ராமனாக திரும்பிய போது இங்கு வந்து இவ்வூர் அருள்மிகு இராமநாத சுவாமியை தரிசனம் செய்ததாக ஐதீகம். இனி இத்திருக்கோயில் சிறப்பை காண்போம்.
திருக்கோயிலின் வாயில் வழியாக உள்ளே செல்லும்போது கிழக்கு நோக்கிய இத்திருக்கோவில் நடையில் அதிகார நந்தியும், பலிபீடமும் அமைந்துள்ளது. இவர்களை தரிசித்து பிரதான வாயில் எனும் நுழைந்து உள்ளே சென்றார் மூலவர் ‘இராமநாதசுவாமி’ உள்ளார்.
அருள்மிகு இராமநாதசுவாமி (மூலவர்)
இராமபிரான் ராவணயுத்தம் முடித்து நாடு திரும்புகையில் தன் தந்தை தசரதர் வழிபட்ட இத்தலத்தில் ‘இராம தீர்த்தம்’ என்ற குளம் ஏற்படுத்தி அதில் சீதை மற்றும் லட்சுமணருடன் நீராடி அங்கே சிவனையும், பார்வதியையும் பிரதிஷ்டை செய்து தான் ராவண வதம் செய்ததால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு தான் ராமேஸ்வரத்தில் வழிபட்ட இடத்திற்கு இட்ட பெயரையே திருக்கோயிலுக்குமிட்டு மூலவருக்கு “இராமநாத சுவாமி” என பெயரிட்டு வழிபடச் செய்ய அனுமாரும் இத்தலத்து எம்பெருமானை வணங்கி ஆலய கோஷ்டத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுமந்த லிங்கம் என பெயரிட்டார்.
சூரிய சந்திர வழிபாடு
ஒவ்வொரு ஆண்டும் ஆவணித்திங்கள் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை வழிபடுகிறார். அதுபோலவே சந்திரனும் ஒவ்வொரு ஆண்டும் ‘சித்ரா பௌர்ணமி’ அன்று தன் ஒளிக்கதிர்களால் வழிபடுகின்றார்.
இத்திருக்கோயிலுக்கு வந்து சுவாமியை ஒவ்வொரு முறை திங்கட்கிழமை தோறும் வழிபடுவதன் மூலம் பக்தர்களுக்கு எல்லையில்லா பலனை அளிக்கிறார்.
அருள்மிகு பர்வதவர்தினி அம்பாள் (இறைவி )
சுவாமி சன்னதியின் வலது புறம் தெற்கு நோக்கி அலங்காரசொரூபியாக நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் ‘பர்வதவர்த்தினி அம்பாள்’ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவரது சந்நிதியில் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யும்போது அஷ்டலட்சுமி அனுக்கிரகம் கிடைப்பது நிச்சயம்.
சனீஸ்வர பகவானும் – ரோகிணி சகடபேதமும்
சனி பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் 12 வருட காலம் வாசம் செய்து வெளியேறினால் உலகில் ‘ரோகிணி சகட பேதம்’ என்ற பஞ்சம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று சிவபெருமான் சொல்ல, நாரதர் அச்செய்தியை வசிஷ்டரிடம் கொண்டு சேர்க்கிறார். இச்செய்தியை தசரதிடம் கொண்டு சேர்த்த வசிஷ்டர் அதனை தடுக்க வழி ஏதும் இல்லை எனக் கூறுகிறார்.
இதனை கேள்வியுற்ற தசரதன் சனீஸ்வர பகவானை ரோகிணியை விட்டு கடக்கும் முன் தடுத்து நிறுத்த போரிட தயாராகும் தச தசரதரைப் பார்த்த சனீஸ்வர பகவான் நகைத்து மானிட அரசே உன் வீரத்தை பாராட்டுகின்றேன். அதில் உள்ள உனது குடிமக்கள் நலத்தையும் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இருந்தாலும் என்னால் செய்வதற்கில்லை வழி விடு என்கிறார். மன ஒப்பாத தசரதர் அவரை நோக்கி ஸ்தோத்திரம் செய்கிறார்.(தசரத ஸ்லோகம்) தசரத ஸ்தோத்திரத்தில் மன மகிழ்ச்சி அடைந்த சனீஸ்வர பகவான் திருநறையூரில் தான் குடும்பத்தோடு அமர்ந்து மங்கள சனீஸ்வர பகவானாக காட்சி கொடுத்து யாரும் யாருக்கும் கொடுக்க முடியாத வரத்தை தருகிறேன் வா என அழைக்க, தசரதர் இத்தலத்திற்கு வந்து இத்தலத்தில் உள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வணங்க அவருக்கு கல்யாண கோலத்தோடு காட்சி தந்து இரு வரங்களை சனீஸ்வர பகவான் தந்த அருளினார்.
இத்திருத்தலத்தில் மட்டும் சார்ந்த சொரூபமாக இருப்பதால் நீல நிற ஆடை அணிந்து தனது திசையான மேற்கு நோக்கி தனது உலோகமான இரும்பு கொடி மரத்தோடு காட்சியளிப்பதோடு மட்டுமல்லாமல் அபிஷேகம் செய்யும்போது பால் நீல நிறமாக மாறி தன்னுடைய நீல வண்ணத்தை பக்தர்கள் கண்களுக்கு அருமருந்தாய் காட்டி அருளுகிறார். சனிக்கிழமை தோறும் சிறப்பு அர்ச்சனைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. சனிப்பெயர்ச்சி தோறும் சிறப்பு ஹோமங்கள் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன.
அருள்மிகு சனீஸ்வர பகவானை வணங்குவோரின் சனி தோஷம் நீங்கி திருமணம் நடைபெற பிரார்த்தனையின் பேரில் சனி பகவானுக்கு திருக்கல்யாண உற்சவம் செய்திக்கப்படுகிறது சனிப்பெயர்ச்சி காலங்களிலும் திருக்கல்யாண உற்சவம் செய்திக்கப்படுகிறது அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு திருக்கல்யாணமும் திருவீதி உலாவும் சனிப்பெயர்ச்சி தோறும் நடைபெற்று வருவது இத்தளத்தின் தனி சிறப்பாகும்.
சனீஸ்வரபகவான் திருக்கல்யாணம்
இத்திருக்கோயிலுள்ள சனீஸ்வர பகவான் குடும்பத்தோடு மனைவி மற்றும் குழந்தைகளோடு அருள் பெற மங்கள சனீஸ்வர பகவானாக உலகில் வேறு எங்கும் காணக் கிடைக்காத அரிய காட்சியாக திருக்கோயிலில் காட்சி தருகிறார். எனவே பிற மாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்களும் திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
அருள்மிகு சனீஸ்வர பகவான் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு மட்டுமே எல்லா தோஷங்களுக்கும் பரிகாரம் செய்பவராக இருப்பதால் இக்திருக்கோயில் சனிதோஷ பரிகாரத்தலமாக விளங்குகிறது.
பூஜை முறைகள்
இத்திருக்கோயிலில் நாள்தோறும் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆலயம் தினமும் காலை 07:30 மணி முதல் 12:30 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் 08:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, தமிழ் புத்தாண்டு, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, மாதப்பிரதோஷம், மற்றும் அஷ்டமி திதி கூறும் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகிய உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன.
கோவில் இருப்பிடம்