தசா பலன்கள்
வேதம் மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகள் என்கிறது. இந்த காலத்தை 9 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு கிரகத்துக்கும் உரிய காலமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆண்டுகள் வகுக்கப்பட்டன அதுவே தசா காலம் ஆகும்.
தசா காலத்தில் உட்பிரிவாக புக்தி என்னும் அந்தர தசையிலும் கிரகங்கள் வரிசைப் படுத்தப் படுகின்றன. ஒருவரின் தசா காலம் அவருடைய பிறந்த நேரம், ஊர், தேதி ஆகியவற்றின் அடிப்படையில் அவரின் ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு அமையும்.
இனி தசா கால கிரக வரிசையை அறிவோமா?
கேது- 7 வருடங்கள்
சுக்கிரன்-20 வருடங்கள்
சூரியன்-6 வருடங்கள்
சந்திரன்-10 வருடங்கள்
செவ்வாய்-7 வருடங்கள்
ராகு-18 வருடங்கள்
குரு-16 வருடங்கள்
சனி-19 வருடங்கள்
புதன்-17 வருடங்கள்
இவைதான் கிரகங்களின் தசா காலவரிசை. தசா கால வரிசையும் வருடங்களும் மாறாதவை. குறிப்பிட்ட கிரகங்களுக்கான தசா காலங்கள் நடக்கும்பொழுது குறிப்பிட்ட பலன்கள் விளையும் என்பது ஜோதிட கிரகந்தகளின் கூற்று.
ஜாதகப்படி கிரகங்களின் நிலைப்பாடுகளையும் நடப்பு தசா காலத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்து செயல்பட்டால் காரிய வெற்றி பெறலாம், பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்பது ஜோதிட ஆன்றோர் தரும் அறிவுரை.
சரி பிறக்கும் போது ஒருவரின் தசா காலம் எந்த கிரகத்திற்கானது. நடப்பு தசா காலம் என்ன என்பது எங்ஙனம் அறிந்து கொள்வது?
தசா காலம் கணக்கிடும் முறை
ஜாதகத்தில் குறிப்பிட்ட ஜாதகரின் பிறப்பு நேர கால இருப்பு விவரங்கள் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும். அதை பார்த்து நடப்பு தசா கால விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
27 நட்சத்திரங்களையும் 9 என்ற எண்ணிக்கையில் மூன்று பிரிவுகளாக்கி ஒவ்வொரு பிரிவிலும் உள்ள முதல் மூன்று நட்சத்திரங்களுக்கு ஒரு கிரகம். அடுத்த மூன்று வேறு ஒரு கிரகம் என தசா காலம் கணக்கிடப்படும். அந்த அடிப்படையில் உங்கள் ஜென்ம நட்சத்திரப்படி நீங்கள் எந்த தசா காலத்தில் பிறந்துள்ளீர்கள் என்று அறியலாம். அந்த விவரம்
அசுவினி,மகம், மூலம்-கேது
பரணி,பூரம்,பூராடம்-சுக்கிரன்
கார்த்திகை, உத்திரம், உத்திராடம்-சூரியன்
ரோகிணி, அஸ்தம், திருவோணம்-சந்திரன்
மிருகசீரிஷம்,சித்திரை,அவிட்டம்-செவ்வாய்
திருவாதிரை,சுவாதி,சதயம்-ராகு
புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி-குரு
பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி-சனி
ஆயில்யம்,கேட்டை,ரேவதி-புதன்
உதாரணமாக ஒருவர் அஸ்வினி நட்சத்திரக்காரர் எனில் அவர் கேது தசை நடக்கும் காலத்தில் பிறந்திருக்கிறார் என்று கணக்கிடலாம். கேது திசை 7 வருடங்கள்
இதில் ஜாதகர் கேது தசை காலத்தின் மூன்றாவது வருடத்தில் மத்திய பாகத்தில் பிறந்துள்ளார் எனில் அவர் பிறக்கும் போது கேது தசா கால இருப்பு நான்கு வருடங்கள் ஆறு மாதம் என கணக்கிடுவார்கள். இருப்பு காலம் முதல் அடுத்த தசா கால வருடங்களை கூட்டி நடப்பு தசா காலம் என என்பதை அறியலாம்
இனி குறிப்பிட்ட காலத்தில் என்னென்ன பலன்கள் விளையும் என்பதை சுருக்கமாக அறிந்து கொள்வோமா?
கேது தசை
ஜாதகருக்கு கேது தசை நடைபெறுகிறது எனில் வெளிநாட்டுப் பயணம் வாய்க்கும், ஜாதகத்தில் மற்ற கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து அந்தப் பயணத்தால் லாபம் பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
இந்த காலத்தில் கொஞ்சம் கவனத்துடன் செயல்படவேண்டும் அரசு, எதிரிகளால் துன்பம் நேரிடலாம். ஆயுதத்தால் காயத்தால் நோய்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு. மற்றவருக்கு எவ்வித தீங்கும் செய்யாத போதும் அவர்களால் கெட்டபெயர் ஏற்படலாம். பெண்களால் துன்பமும் ,இழப்பும் நேரலாம், செல்வ இழப்பு நேரிடும் ஆகவே புது தொழிலில் இறங்குவது பங்குச்சந்தை முதலீடுகள் ஆகியவற்றில் கவனம் தேவை
சுக்கிரதசை
ஜாதகர் கேளிக்கைகள் மற்றும் மகிழ்ச்சிக்கு உரிய விஷயங்களை அடைவார். நல்ல வாகனங்கள், கால்நடை செல்வங்கள், விலை உயர்ந்த ஆபரணங்கள் சேர்க்கை அமையும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கைகூடும்.
கடற் பயணம் அமையும், அறிவார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள், அரசாங்க விருதுகளும்,பரிசுகளும் கிடைக்கும். பொதுவாக சுக்கிர தசையில் திருமண பாக்கியம் கைகூடும். செல்வ வளம் அதிகரிக்கும். அதே நேரம் வீண் பதற்றம், மனக்கவலைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
சூரிய திசை
சூரியன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரின் தசா காலத்தில் நல்ல பலன்களை அருள்வார். பயணங்கள் கைகூடும், அசாத்தியமான காரியங்களால் செல்வம் சேரும், வியாபாரத்தில் லாபம், கடமையில் ஈடுபாடு கூடும்.
மகிழ்ச்சி அதிகரிக்கும், சூரியன் பலமற்று இருந்தால் நெருப்பு மற்றும் விலங்குகளால் ஆபத்து நேரிடும். மனைவி மக்களுக்கு துன்பம், சொத்து அழிவு ஆகியவை ஏற்படலாம்.
சந்திர திசை
சந்திர தசையில் மன அமைதி, வியாபாரத்தில் வெற்றி, நல்ல உணவு, மணப்பேறு, நகை ஆடைகள் சேர்க்கை, நவரத்தின கற்களால் லாபம், நிலச் சேர்க்கை ஆகியன அமையும்.
சந்திரதசை பலன்கள் அறிய சந்திரனின் வலிமையை காணவேண்டும். சுக்லபட்சம் ஆரம்பம் முதல் தசமி வரையிலும் மத்திம பலனும் அதன்பிறகு வரும் கிருஷ்ணபட்சம் பஞ்சமியில் வரை பூரண பலனும் அடுத்து வரும் அமாவாசை வரையிலும் அதம பலன்களும் வாய்க்கும் இந்த காலத்தில் வேத மந்திரங்கள், தெய்வங்கள், அரசுவெகுமானம் மூலம் செல்வம் சேரும். பெண்களால் சொத்து செரவும் வாய்ப்பு உண்டு.
செவ்வாய் தசை
நெருப்பு,மருத்துவம் மூலம் செல்வம் சேர வாய்ப்பு உண்டு. இந்த காலத்தின் நிறைவில் வழக்கு, நிலம், கால்நடைகள் மூலம் பணம் சேரும். சகோதரர்களுடன் வீண் சச்சரவுகள் ஏற்படலாம் தீய பெண்களுடனான சகவாசத்தை தவிர்க்க வேண்டும். உடல் நிலையைப் பொறுத்த வரையிலும் காய்ச்சல் பாதிப்பு பித்த கோளாறுகள் ஏற்படலாம்
ராகு தசை
ராகு சுப கிரகங்களுடன் சேர்ந்து சுபர் வீட்டில் இருக்க இந்த தசா காலம் சிறப்பான பலன்களை அளிக்கும். ராகு கன்னி, மீனம், விருச்சகத்தில் இருக்க நன்மைகள் உண்டாகும்
இந்த காலகட்டத்தில் ஜாதகர் இனம் கண்டறிய முடியாத நோயால் பாதிப்படைய வாய்ப்பு உண்டு, இடமாறுதல், பணியில் பிரச்சனைகள், கண்களிலும் தலையிலும் பாதிப்பு, உறவினர் இழப்பு, வியாபார நஷ்டம், மன சஞ்சலம் ஆகியவை உண்டாகும். ஜாதகத்தை ஆராய்ந்து உரிய பரிகாரங்களை செய்து பயன்பெறலாம்.
குரு தசை
நற்காரியங்களைச் செய்வார். குழந்தை பிறப்பு, அரசாங்கம், அறிஞர்களின் பாராட்டு, வாகன சேர்க்கை, அனைத்து விருப்பங்களும் நிறைவேறுதல் ஆகிய பலன்கள் ஏற்படும். புதிய ஆடைகள், நல்ல வேலையாட்கள் அமைவது,சமுதாயத்தில் அந்தஸ்து, பேச்சாற்றலால் புகழ் ஆகியவை கிடைக்கும்.
குரு சரியாக இல்லையெனில் காது நோய்களும், கப நோய்களும் ஏற்படலாம். மூத்தோரை பிரிய நேரிடும்.
சனிதசை
இந்த காலத்தில் சற்று சிரமங்கள் ஏற்படவே செய்யும். மனைவி குழந்தைகள் வாத நோயால் அவதியுறும், நெருங்கிய உறவினர்களுக்கு திடீர் கஷ்டங்கள் ஏற்படும். செல்வம் எதிர்பாராத வகையில் கரையை வாய்ப்பு உண்டு
உஷ்ணம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். அதேநேரம் சனி தசா காலத்தில் யுத்தம் மூலம் செல்வம் சேரும் வேறு வசிப்பிடங்களுக்கு மாறுவீர்கள். ஜாதகத்தை ஆராய்ந்து தக்க பரிகாரங்களை செய்து தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்துவிட்டால் பாதிப்புகள் குறையும்.
புதன் தசை
நண்பர்களைச் சந்தித்தல் கற்றவர்களால் புகழப்படுதல்,வசதியான வாழ்வு பெரியோர்களின் ஆதரவு ஆகியவை உண்டாகும். மகிழ்ச்சியான மண வாழ்வு அமையும் உறவினர்கள் குழந்தைகளுக்கு உங்களால் மகிழ்ச்சி உண்டாகும். அந்தணரின் ஆசியும் அதன்மூலம் செல்வச் சேர்க்கையும் ஏற்படும்
இறைவழிபாடுகள் உங்கள் பலத்தை அதிகரிக்கும். இறையருளால் லட்சியத்தை எட்டிப்பிடிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
ஒருவரது வாழ்நாளில் அனைத்து தசைகளையும் ஜாதகர் சந்திக்கும் வாய்ப்பு அமையாது. குறிப்பிட்ட காலங்களில் ஜாதகத்தில் கிரக நிலைகள் தரும் பலன்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். குறிப்பிட்ட கிரகங்கள் சாதகமான நிலையில் இருந்தால் அந்த கிரகத்துக்குரிய தசா காலங்களில் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனைப் சிக்கென பற்றிக் கொள்ளுங்கள். தெய்வபலம் நம் வாழ்வை மலரச் செய்யும்.