தட்சிணாமூர்த்தி-பிரகஸ்பதி
நவ கிரகங்களில் குரு என்பவர் வடக்கு திசை பார்த்தபடி நமக்குக் காட்சி தருபவர். அவர் தேவர்களின் குரு. பிரகஸ்பதியாகிய இவர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தார் என போற்றி வணங்குகிறோம்.
தட்சிணாமூர்த்தியோ சிவாம்சம். சிவ மூர்த்திகளில் ஒருவர்.தெற்கு திசை பார்த்தபடி அருள்பவர். குருவுக்கும் குருவானவர். சனகாதி முனிவர்களுக்கு பேசாமல் மௌனமாக இருந்தே பேருண்மையை உபதேசித்து அருளினார் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
அறியாமையை இருட்டுக்கு அப்பால் எந்த ஒரு பொய் தோற்றமும் இன்றி, குறையே இல்லாத பரிசுத்தமானதும், மனதுக்கும் சொல்லுக்கும் எட்டாது அறிவும் ஆனந்த உருவும் கொண்டவர் ஞானம் அளிக்கும் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.
இதேபோல் தேவகுரு பிரகஸ்பதியும் வணங்குதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர். அங்கீரஸரின் மைந்தன். அற்புத வல்லமை கொண்டவர்.ஸ்வாரோசிஷ மன்வந்திரத்தில் சப்தரிஷிகளில் முக்கியமானவர்.விஷ்ணு பகவான் வாமன அவதாரத்தின் போது பிரகஸ்பதியிடம் இருந்தும் வேதங்களையும் அதன் அங்கங்கள் 6, சாஸ்திரங்கள்,ஸ்மிருதி மற்றும் ஆகமம் அனைத்தையும் கற்றறிந்தார் என்கிறது ப்ருஹத் புராணம்.
உலக வாழ்வில் அனைத்திலும் வெற்றிபெற, அருள்நிதியும், அறிவு நிதியும் அள்ளித் தரும் பிரகஸ்பதியை அனுதினமும் வழிபட்டுப் பேரானந்தம் அடையலாம்.
பூச நட்சத்திர நாளில் அவரை ஜெபம் செய்து அர்ச்சித்து ஹோமங்கள் நடத்தி வணங்கினால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களையும் பெறலாம். ஒருவரது ஜாதகத்தில் குருபகவான் எங்கிருந்தாலும் அதற்காக கவலைப்படாமல் கலங்காமல் மாதம்தோறும் பூச நட்சத்திர நாளில் வழிபட்டால் குரு பகவானின் அருளைப் பெறலாம்.
அதேபோல் வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் ஒருசேர வருகிற நாளில் குரு பகவானை வழிபட்டால் இழந்த பதவி மற்றும் செல்வங்களைப் பெற்று வாழலாம்.
பூச நட்சத்திரத்தில் ஜனித்த போதே அனைவராலும் விரும்பத்தக்க வராக இருந்த பிரகஸ்பதி தேவர்களின் முதன்மையானவராக அனைத்து தடைகளையும் வெற்றி கொள்பவராகவும் இருப்பவர். எனவே அவர் அனைத்து திசைகளிலும் இருந்து காக்கட்டும்! பூச நட்சத்திரம் குறித்தும் பிரகஸ்பதி குறித்தும் வேதங்கள் இவ்வாறு விளக்குகின்றன. இங்கனம் வேதங்கள் போற்றும் குருபகவானின் நாமும் தொழுவோம் குருவருள் பெறுவோம்.
குரு பகவான் காயத்ரீ மந்திரம் :
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்
குரு பகவான் ஸ்லோகம்:
தேவனாம் ச ரிஷிணாம் ச
குரும் காஞ்சந சந்நிபம்
புத்தி பூதம் திரிலோகஸ்ய
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்