திவ்யதேசம்-ஸ்ரீ ஜெகன்னாதர் பெருமாள்-நாதன் கோவில்
விண்ணிலேயும் சரி மண்ணிலேயும் சரி அபயஹஸ்தம் தருபவர் திருமால்தான் என்பதை ஏகப்பட்ட புராணங்கள் விளக்கிக் காட்டியிருக்கிறது. விண்ணிலே திருமால் எப்படியிருப்பார். என்பதை திருநந்திபுர விண்ணகரப் பெருமாளைத் தரிசித்தால் தெரிந்துவிடும்.
இந்த அருமையான திருக்கோயில் கும்பகோணத்திலிருந்து தெற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் கொற்கை அருகில் உள்ளது. நாதன் கோயில் என்றும் தட்சிண ஜகந்நாதம் என்றும் பெயர்கள் உண்டு. செண்பகாரண்யம் என்று இந்த தலத்திற்கு சிறப்பு பெயரும் இப்போது சொல்லப்படுகிறது.
மூலவர் : விண்ணகரப் பெருமாள் என்னும் ஜகந்நாதப் பெருமாள்.வீற்றிருந்த திருக்கோலம்.
தாயார்-செண்பகவல்லி.
தீர்த்தம்-நந்தி புஷ்கரணி.
விமானம்-மந்தார விமானம்.
பகவான் , நந்திதேவருக்கும் சிபி சக்கரவர்த்திக்கும் நேரிடையாக தரிசனம் கொடுத்து அருள்பாலித்த ஸ்தலம். இந்த சன்னதி தற்சமயம் வானமாமலை மடத்து ஆதினத்தின் நிர்வாகத்தின் கையில் இருக்கிறது. இறைவனுக்கு நந்திதாசன் என்றும் வரலாறு கூறுகிறது.
நந்திகேஸ்வரர் ஒரு சமயம் மிக அவசரமாக மகாவிஷ்ணுவைப் பார்க்க வேண்டியிருந்தது. வைகுண்டத்திற்குச் சென்ற நந்திதேவரை துவார பாலகர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் நந்திதேவரோ துவார பாலகர்களை மதிக்காமல் விஷ்ணுவைப் பார்க்க முயன்றார். இதனால் துவார பாலகர்கள் நந்திதேவருக்கு சாபமிட்டதோடு , விஷ்ணுவையும் பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். ஏமாற்றமும் அவமானமும் அடைந்த நந்திதேவர் நேராகசிவபெருமானிடம் சென்று முறையிட சிவபெருமான் இந்த செண்பகாரண்ய தலத்திற்குச் சென்று திருமாலை நோக்கித் தவம் செய். பகவான் உன்னைத் தேடி வந்து அருள்வார் ” என்றார். அதன்படியே நந்திதேவர் , இங்கு வந்து தவம் புரிய திருமால் பிரத்யக்ஷமாக நந்தி தேவருக்கு தரிசனம் கொடுத்து துவார பாலகர் தந்த சாபத்தையும் நீக்கினார். அதனால் இந்த ஸ்தலம் திருநந்திபுர விண்ணகரம் என்று பெயர் ஏற்பட்டது.
வைகானச ஆகமப்படி பெருமாள் கோயிலில் தெற்கில் நந்தி வைக்கப்பட்டிருக்கிறது. சிபி சக்கரவர்த்தி தன்னிடம் அடைக்கலம் அடைந்த புறாவிற்காக தானே புறாவின் எடைக்கு சமமாக எதிர் தட்டில் உட்கார்ந்து புறாவைத் துரத்திவந்த கழுகுக்கு தனதுதொடை சதையை வெட்டிக் கொடுத்தார். இந்த அற்புதக் காட்சியைக் காண திருமாலே இங்கு நேரில் வந்து வாழ்த்தி வந்ததாகச் செய்தியும் உண்டு. பெருமாள் கிழக்கே இருந்தார். சிபியின் , கருணை உள்ளத்தைக் காண எடைக்கு எடையாக தன் மாமிசத்தை வைத்ததைக் காண சட்டென்று மேற்கு திசையில் இடம் மாறினார் என்பது ஸ்தல பெருமாளைப் பற்றி வரலாறு.திருமங்கையாழ்வார் நந்திபுர பெருமாளை பற்றி பாடியிருக்கிறார்.
பரிகாரம் :
கோர்ட் வழக்குகள் சாதகமாக மாறுவதற்கும் , கோபப்பட்ட பெரியவர்களது உண்மையான சாபம் பலிக்காமல் போவதிற்கும் உயிருக்கு ஆபத்தான பணியில் இருப்பவர்கள் , தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவும் , அரசியல்வாதிகள் நல்லபடியாக ஜெயிக்கவும் , முக்கியமான அரசாங்கப் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தவித வில்லங்கத்திலும் மாட்டிக் கொள்ளாமல் நிம்மதியாகப் பணி புரியவும் இந்த க்ஷேத்திரத்திற்கு வந்து ஒருநாள் தங்கி பிரார்த்தனை செய்து கொண்டால் அத்தனைப் பிரச்சனைகளும் பஞ்சாகப் பறந்து விடும்.மேலும் உங்கள் ஜாதகத்தில் சந்திரனை பலம் பெற செய்யும் சக்தி மிக்க திவ்ய தேசம். ஆனந்தம் மட்டுமே என்றும் நிற்கும் .
கோவில் இருப்பிடம்