திருவிக்ரமப் பெருமாள் கோவில்
சீர்காழிக்குப் பெருமை தரும் வகையில் நகரின் நடுப்புறத்தே அமைந்த அழகுமிக்கத் திருக்கோயில் திருக்காழிச் சீராம விண்ணகரம் இதற்கு பாடலீகவனம் , உத்தம சோடித்திரம் என்று வேறு சிறப்பான பெயர்களும் உண்டு.
உப்பனாற்றின் வடகரைப் பகுதிக்கும் , கொள்ளிடம் ஆற்றின் தென்கரைப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில் மூன்று நிலை இராஜ கோபுரத்துடன் , இரண்டு பிராகாரம்.
மூலவர் தாடாளன் நின்ற திருக்கோலம்
தாயார் ஸ்ரீலோக நாயகி.
உற்சவர் திருவிக்ரமன்
தாயார் மட்டவிழ்குழலி
தீர்த்தம் சங்க புஷ்கரிணி , சக்ரதீர்த்தம்
விமானம் புஷ்கலாவர்த்த விமானம்.
மணவாள மாமுனிகள் இந்த திருக்கோயிலைப் பற்றி பதிகம் பாடியிருக்கிறார்.
அஷ்டகோண மகரிஷிக்கு பெருமாள் தரிசனம் தந்த காட்சி இந்த ஸ்தலத்தில் நடந்தது. பெரிய முனிவர் என்று அழைக்கப்படும் உரோமச முனிவர் பெருமாளிடம் , ” இடது காலால் முன்பு விண்ணை அளந்தீர்களே?அந்த அற்புதக் காட்சியை எனக்கு இப்பொழுது காட்ட வேண்டும் ” என்று ஆசைப்பட்டார். பெருமாளும் , முனிவரின் வேண்டுகோளைப் பூர்த்தி செய்ய இடதுகாலைத் தூக்கி விண்ணை அளந்து காட்டினார். இதேபோல் பிரம்மதேவனுக்கு தன் ஆயுளைப் பற்றி கர்வம் கொண்ட பொழுது ‘ ரோமச முனிவர் ‘ உன் ஆயுளும் என் ஒரு ரோமமும் சமம் ‘ என்று சொல்லி பிரம்மனுடைய கர்வத்தை அடக்கிய ஸ்தலம் இது.
ஒருசமயம் திருஞான சம்பந்தருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் கடும் வாதம் ஏற்பட்டது. இந்த வாதத்தில் திருமங்கை ஆழ்வார் வெற்றி பெற்றார். அதற்குப் பரிசாக சம்பந்தர் தன்னுடைய வேலைப் பரிசாகக் கொடுத்தார்.இதனால் திருமங்கை ஆழ்வாருக்கு ‘ நாலுகவிப் பெருமாள் ‘ என்ற விருதும் கிடைத்த ஸ்தலம் இது.
மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரிகாரம் :
அதிகார துஷ்பிரயோகத்தால் கஷ்டப்படுகிறவர்கள் , அடிமையாக தொழிற்சாலைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்தப் பெருமாளை நினைத்து காணிக்கையை அனுப்பி வைத்தால் அவர்களுக்கு மறுபடி சுதந்திரமான வாழ்க்கை அமையும் . போட்டியில் தோற்று கொண்டிருப்பவர்கள் , செய்து கொண்ட வியாபார ஒப்பந்தத்தை சரிவர செயல்பட முடியாமல் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் , உறவினர்களது பகையிலிருந்து மீள வேண்டும் என்று துடிப்பவர்கள் அனைவரும் இங்கு வந்து புஷ்கரணியில் நீராடி – பெருமாளை சேவித்தால் நினைத்ததை சீக்கிரமே அடையலாம் . எஞ்சிய நாட்களை மனநிம்மதியோடும் கழிக்கலாம்.