விநாயகர் அருள் பெற- வன்னி இலையும் ,மந்தாரை பூக்களும்
“வன்னி இலையாலும்” , “மந்தார மலராலும்” விநாயகரை அர்ச்சித்து வழிபட்டால் விசேஷ பலன்கள் கிடைக்கும். அதே போல் இந்த மரங்களின் கீழே அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தங்களை தரிசிப்பதும் சிறப்பு அப்படி என்ன சிறப்பு இந்த இரண்டு விருச்சங்களுக்கும் ??
‘ஒளரவ முனிவர்’- சுமேதை தம்பதியின் மகள் சமி.தெளமிய முனிவர் என்பவரின் மகன் மந்தாரன். இவன் செளனக முனிவரின் சீடனும் கூட ,பெற்றோர் விருப்பப்படி சமிக்கும் மந்தரனுக்கும் திருமணம் நடந்தேறியது. ஒருமுறை சமியும் மந்தாரனும் , தங்களின் உறைவிடத்திற்கு போகும் வழியில் விநாயகரின் அருளை பெற்ற “புருசுண்டி முனிவர்” எதிர்ப்பட்டார். இவர்கள் இருவரும் அவரை வணங்கவில்லை மாறாக அவரின் உருவத்தை கண்டு எள்ளி நகையாடினர்.
ஆம்! புருசுண்டி முனிவர் விநாயகரை போன்றே யானைமுகம் கொண்டவர். அவர்,தன்னை சமி- மந்தாரன் தம்பதி ஏளனம் செய்வதை கண்டு கோபம் கொண்டு, மரங்களாக மாறும்படி அவர்களை சபித்தார்.தங்கள் தவறை உணர்ந்த கணவன்-மனைவி இருவரும் சாப விமோசனம் அருளும்படி முனிவரிடம் வேண்டினர். விருட்சங்களாக திகழும் உங்கள் நிழலில் விநாயகர் குடி கொள்ளும் போது விமோசனம் கிடைக்கும் என்று கூறி சென்றார்.
முனிவர் சாபத்தின்படி மந்தாரன் ,மந்தார மரமாகவும் சமி வன்னி மரமாகும் மாறினர். இந்த நிலையில் தங்களின் பிள்ளைகளை காணாமல் தவித்த பெற்றோரும், மந்தாரனின் குருவான செளனகரும் அவர்களை எங்கெங்கோ தேடி அலைந்தனர். இறுதியில் ஞான திருஷ்டியின் மூலம் நடந்ததை அறிந்து வருந்தினர்.
செளனகர் அந்த மரங்களை கண்டடைந்தார் அவற்றின் கீழ் அமர்ந்து விநாயகரை எண்ணி 12 ஆண்டுகள் தவம் புரிந்தார். அதன் பலனாக விநாயகப் பெருமான் காட்சி தந்தார் அவரிடம் தன் மாணாக்கனுக்கும் , அவன் மனைவிக்கும் சாபவிமோசனம் அருளும்படி வேண்டினார் சௌனகர்.
உடனே விநாயகர் முனிவரே அடியவர்கள் இட்ட சாபத்தை எவராலும் போக்கை இயலாது .எனவே இவ்விருவரும் விருட்சங்களாக இருந்தபடியே முக்தியை பெறுவார்கள். நாம் இம் மரங்களின் நிழலில் எழுந்தருள்வோம் .வன்னி மற்றும் மந்தாரை மரங்களையும் அவற்றின் கீழ் இருக்கும் என்னையும் வழிபடுவோருக்கு சகல இடர்களும் நீங்கி அவர்களது விருப்பங்கள் யாவும் ஈடேறும். வன்னி மற்றும் மந்தார மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வரும் இன்னல்கள் நீங்கி இன்பம் அடைவர் என்று அருள்பாலித்தார். ஆகவே வன்னி இலைகளும் மந்தாரா புஷபங்களும் பிள்ளையாருக்கு உகந்தவை என்றாயின..