ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026
கும்பம்
சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேலும் ஜூன் மாதத்திற்கு பிறகு உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்திற்கு குரு பகவான் பெயர்ச்சி ஆகி வர இருக்கிறார். வருடத்தின் கடைசியில் ராகுவும்-கேதுவும் முறையே உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடம், ஆறாம் இடங்களுக்கு வர இருக்கிறார்கள். இந்த அமைப்பின்படி இது உங்கள் வாழ்க்கையில் சீரான நன்மைகள் வரக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதே சமயத்தில் எதிலும் நிதானமும் பொறுமையும் அவசியம்.
வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமை உணரப்பட்டு பொறுப்பு உயரும். அதை முழுமையாக திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். எந்த சமயத்திலும் அவசரமும், அலட்சியமும் கூடாது. பொறுப்புச் சுமையை புலம்பாமல் ஏற்றுக் கொண்டால் உங்கள் பெருமை நிச்சயம் உயரும். பணி சார்ந்த பயணங்கள் அதிகரித்தாலும் ஆதாயமே தரும். பழைய அனுபவங்களை பாடமாக வைத்துக் கொள்ளுங்கள்.
குடும்பத்தில் நன்மைகள் அதிகரிக்கும். குதர்க்கமும் குத்தல் பேச்சும் தவிர்த்தால் இனிமை நிரந்தரமாக இடம்பிடிக்கும். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்துப் போவது அவசியம். பூர்வீக சொத்தில் வீண்படிவாதம் வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். கொடுக்கல், வாங்கல் எதையும் உடனுக்குடன் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தருவதோ பெறுவதோ கூடாது.
அரசு மற்றும் அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு செல்வாக்கு நிலைக்க வேண்டும் என்றால் சொல்வாக்கில் கவனம் அவசியம். சின்ன சின்ன பொறுப்புகளாக இருந்தாலும் உங்கள் செயல்கள் மேலிடத்தால் கவனிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கலை மற்றும் படைப்பு துறையினருக்கு இந்த வருடத்தில் வாய்ப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரத் தொடங்கும். சின்ன வாய்ப்புகள் என்றாலும் அதை பயன்படுத்தி முன்னேற பாருங்கள், பெரிய வாய்ப்புகளுக்காக சின்ன வாய்ப்புகளை உதாசீனப்படுத்த வேண்டாம்.
பெண்களுக்கு வளமும் நலமும் ஏற்படக்கூடிய காலகட்டம். அதேசமயம் பிறரை நம்பி ஏமாறாமல் இருக்க உங்கள் மேல் உண்மையான அக்கறை உள்ளவர்கள் சொல்வதை கேளுங்கள். வீடு, மனை பத்திரங்களை முழுமையாக படித்து பார்த்து கையெழுத்திடுங்கள். ஆடை, ஆபரணம், வாகனம் எல்லாமே உங்கள் தகுதிக்கு ஏற்ப சேரும். வீடு புதுப்பிக்க சந்தர்ப்பம் அமையும். தடைபட்ட மணப்பேறும், மகப்பேறும் நிச்சயம் கைகூடும். பணிபுரியும் பெண்கள் அலுவலகத்தில் வெட்டிப் பேச்சு பேசும் இடத்தில் இருப்பது கூடாது.
உடல் நலத்தில் அடிவயிறு, தோள்பட்டை, கழுத்து, முதுகு, தலைவலி, சுவாச உபாதைகள் வரலாம் கவனம்.
நரசிம்மர் தரிசனம் உங்களுக்கு வாழ்வில் அளப்பற்ற நன்மைகளை கொண்டு வந்து சேர்க்கும். ஆகையால் இந்த வருடம் முழுவதும் நரசிம்மர் வழிபாடை தொடர்ச்சியாக செய்து வாருங்கள்.







