திவ்ய தேசம் 60:திருவல்லிக்கேணி
கைங்கர்யத்திற்கு மறுபெயர் கிருஷ்ணர், துன்பம் வரும்பொழுது தோள் கொடுத்து காப்பாற்றுவார் என்பது அசாத்திய நம்பிக்கை. அகங்காரம் இல்லாமல் தன்னை ஒரு சாரதியாகவே மாற்றிக் கொண்டு பாண்டவர்களுக்கு செய்த உதவியால் கெடுதல் கூட்டமான துரியோதனன் சந்ததி காணாமல் போயிற்று. அப்படிப்பட்ட தேரோட்டிக் கண்ணனாக முறுக்கு மீசையோடு முகத்தில் புன்னகை சிந்தி அருள்பாலிக்கும் ஆனந்தமான திருக்கோயில்தான் சென்னையிலுள்ள பார்த்தசாரதி திருக்கோயில்
சென்னை கடற்கரைக்கு அருகே நகரின் நடுவே உள்ளது இந்த திருக்கோயில் பிருந்தாரண்யம் அல்லிக்குளம் என்று வேறு பெயர்களும் உண்டு. அல்லிமலர்கள் நிரம்பிய இந்த குளத்தை உடைய ஊர் என்பதால் திருஅல்லிக்கேணி என்று பெயர் பெற்றது. ஐந்து நிலை ராஜகோபுரம் இரண்டு பிராகாரம் கொண்டது.
மூலவர் வேங்கட கிருஷ்ணன். அருகில் ருக்மணி, பலராமன், ஸாத்யகி அநிருத்தர், பிரத்யும்னர் இவர்களோடு சேர்ந்து காட்சி.
ஆனந்த, பிரணவ, புஷ்ப, சேஷ, தைவீக விமானம்
தீர்த்தம் கைரவினி தீர்த்தம். அதோடு இந்திர ஸோம மீன அக்கினி விஷ்ணு தீர்த்தங்களும் உண்டு.
இக்குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை என்பது ஆச்சரியம்.
ருக்மணி, பலராமர், மார்க்கண்டேயர், அர்ச்சுனன், பிருகு, அத்திரி, மரிசி, சுமதி, ஸப்தரோமா, ஜாபலி, தொண்டமான் போன்றோர் வழிபட்டதாக ஐதீகம். அத்திரி முனிவருக்கு அழகிய சிருங்கராகவும், மதுமான் முனிவருக்கு இராமர் பட்டாபிஷேக கோலத்தையும் இங்கு காட்டியதாக வரலாறு. சப்தரோமா முனிவருக்கு கஜேந்திர வரதராக கருடவாகனத்தில் காட்சியும் உண்டு.
திருமகள், வைகுண்டத்திலிருந்து இங்கு வந்து பிருகு முனிவரின் குடிசைக்கருகில் குழந்தையாக உருவாகி நிற்க அவளுக்கு வேதவல்லி என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தார். பிருகுமுனிவர் பின்பு திருமால் இளவரசர் வேடம் பூண்டு வேதவல்லியை மணம் முடித்ததாக வரலாறு. குருக்ஷேத்திர போரில் பீஷ்மரின் வில்லால் கண்ணனுக்கு ஏற்பட்ட காயங்களை இன்றைக்கும் உத்ஸவ மூர்த்தியின் திருஉருவத்தில் காணலாம்.
கிருஷ்ணர் குடும்ப ஸமேதராக எழுந்தருளி இருப்பதும். பார்த்தசாரதியாக பெரிய மீசையுடன் காணப்படுவதும் இங்குதான். இக்கோவில் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. திருமங்கையாழ்வார்பேயாழ்வார். திருமழிசை யாழ்வரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. 108 திவ்விய தேசங்களில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
பரிகாரம்:
எதிரிகளை வெல்வதற்கும் எத்தகையப் பிரச்சனைகள் வந்தாலும் அதை தீர்ப்பதற்கும் பகவானுடைய கருணை வேண்டும். அதை பக்தியால் பெற்று விட முடியும். அத்தகைய பாக்கியத்தை மிகவும் சுலபமாக பெற்றுதரும் ஸ்தலம்தான் இந்த பார்த்தசாரதி ஸ்தலம். பகவானுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் அனைத்து வேண்டுதலையும் பகவான் நிறைவேற்றி வைப்பார். மனநிம்மதிக்கும். மோட்சத்தை அடைய விரும்புபவர்களுக்கும் ஏற்ற மிக அருமையான புனித ஸ்தலம்.