திவ்ய தேசம் 58: திருநின்றவூர்
பகவானுக்கும் பக்தனுக்கும் பக்தி விஷயமாக அடிக்கடி பனிப்போர் மூள்வதுண்டு. கடைசியில் பக்தனின் பக்திக்கு பகவான் இறங்கி சேவகனாகவே செயல்பட்டு விடுவார் என்பது திருமாலைப் பற்றி பல வரலாறுகள் உண்டு. பாசுரம் பாடும் விஷயத்தில் தாயாரே பக்தனிடம் போராடிப் பெற்ற ஒரு விசித்திர சம்பவமும், நடந்திருக்கிறது. இதில் தாயாரை சமாதானப்படுத்த பெருமாள், என்ன பாடு பட்டிருக்கிறார் என்பதைப் பார்க்கும் பொழுது திருமால் பெருமை நம்மை பக்திப் பெருமிதத்தில் மூழ்க வைத்து விடுகிறது.
சென்னைக்கு மேற்கே 29 கி.மீட்டர் தொலைவில் ஷீர நதிக்கரையில் உள்ளது தின்னனூர். ஐந்து நிலை ராஜ கோபுரம். இரண்டு பிராகாரங்கள் உடைய கோயில் இது
மூலவர் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்.
தாயார் “என்னைப் பெற்ற தாயார்”
தீர்த்தம் வருண புஷ்கரிணி,
விமானம் ஸ்ரீநிவாச விமானம்.
இராமபிரானுக்கும் ஒரு தனிக்கோயில் உண்டு. மதுராந்தகம் ஏரிகாத்த இராமரைப் போல ஆறடி உயரத்தில் சீதா லெஷ்மண சமேதராய் காட்சியளிக்கிறார்.
மகாலெஷ்மியின் தந்தையான சமுத்திரராஜன் மகாலெஷ்மியைப் பார்க்க நினைத்தார். ஆனால் மகாலெஷ்மி அவர் கண்ணில் படவே இல்லை. கடைசியாக பூலோகத்தில் தேடியபொழுது திருநின்றவூரில் திருமகளைக் கண்டு ஆனந்தத்தில் ‘என்னைப் பெற்றத் தாயே’ – என்று அழைத்தாராம். இதனால் அந்தப் பெயர் இங்குள்ள தாயாருக்கு நிலைத்தது.
திருமங்கையாழ்வார் – இந்த ஊர் தலத்திற்கு வந்தபோது இறைவன் திருமங்கையாழ்வாரைக் கவனிக்கத் தவறிவிட்டார். ஆழ்வார் சிறிது நேரம்பொறுத்துப் பார்த்துவிட்டு – பாசுரம் பாடாமலே கிளம்பிவிட்டார். ஆழ்வார் சென்ற பிறகுதான் பெருமாளுக்கும் தாயாருக்கும் ஆழ்வார் காத்திருந்து சென்றுவிட்டது தெரிய வந்தது. உடனே ஆழ்வாரைத் தேடி பெருமாள் மாமல்லபுரம் சென்றார். அங்கு ஆழ்வாரைக் கண்டார். பெருமாளே தன்னைத் தேடி வந்திருப்பதைக் கண்டு திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரம் பாடிக் கொடுத்தார். பெருமாள் அந்த ஒரு பாசுரத்தை எடுத்துக் கொண்டு தாயாரிடம் கொடுத்தபோது – ஒரே ஒரு பாசுரம்தானா? என்று கோபத்தோடு பெருமாளிடம் கேட்க, பகவான் மறுபடியும் ஆழ்வாரைத் தேடிக் கொண்டு போனார்.
திருமங்கையாழ்வார் அப்போது திருக்கண்ண மங்கையில் இருந்தார். அவரிடம் பெருமாள், ‘தாயாரின் கோபத்தைச் சொல்லிய போது, ஆழ்வார் இன்னொரு பாசுரம் பாடி – அதை பெருமானிடம் கொடுத்தார். தாயாரிடம் அந்த இரண்டாவது பாசுரத்தை பெருமாள் கொடுத்த பின்புதான் தாயார் மகிழ்ச்சி அடைந்தாளாம்.
பரிகாரம்:
காணாமல் போன பொருளைக் கண்டு பிடிப்பதற்கும் – ஆட்களைத் தேடிப் பிடிப்பதற்கும், அநியாயமாக சொத்தைப் பிடுங்கிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து இழந்த சொத்தை முறைப்படி மீட்பதற்கும் இழந்த பதவியை மீண்டும் பெறுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் பகவானது அருட்பார்வை நம்மீது படர்வதற்கும் வேலை கிடைப்பதற்கும் வியாபாரத்தில் இழந்த நஷ்டத்தை மீண்டும் இலாபமாக மாற்றுவதற்கும் பெரியவர்கள் செய்யாமல் போன பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கும் தின்னனூர் வந்து ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளை மனமார பிரார்த்தனை செய்தால் நல்லபலனை உடனே அடையலாம்.