திவ்ய தேசம் 57:திருப்புட்குழி
மனிதர்களுக்கு மட்டும்தான் பகவான் இரங்குவாரா? வாய் பேசத் தெரியாத மற்ற ஜீவன்களின் கஷ்டத்தை அறிந்து, உதவ மாட்டாரா? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. மனிதர்கள் இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்வதால் அது பகவானுக்கு கேட்கிறது. மற்றவைகள் எப்படி பிரார்த்தனை செய்ய முடியும்? என்ற சந்தேகத்தை இராமபிரான் மூலம் தீர்த்து வைத்த சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அப்படிப்பட்ட இந்த புண்ணிய க்ஷேத்திரம் ‘திருப்புட்குழி’ எனும் பெயருடையது. காஞ்சிபுரத்திலிருந்து வடமேற்காக பன்னிரண்டு கி.மீ தூரத்தில், வேகவதி நதிக்கரையோரம் சத்திய விரத க்ஷேத்திரம். மூன்று நிலை கொண்ட இராஜ கோபுரம், இரண்டு பிராகாரங்களுடைய இந்த கோவிலின்
மூலவர்:விஜயராகவப் பெருமாள்.
தாயார்: ஸ்ரீ மரகதவல்லித் தாயார்.
விமானம்:விஜயகோடி
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம்.
கல்வெட்டுகளில் இந்தக் கோயிலுக்கு போரேற்றுப் பெருமாள் கோவில் என்று குறிப்பிட்டிருக்கிறது.
சீதையை இராவணன் சிறையெடுத்துச் சென்றபோது ராவணனுடன் சண்டை போட்டு, தன் இறக்கையை இழந்த கழுகு அரசனான ஜடாயு இந்த இடத்தில் வீழ்ந்து கிடந்த போது, இராமபிரான் ஜடாயுவைப் பார்க்க நேரிட்டது. இராமனிடம் எல்லா விவரங்களையும் சொல்லி உயிர் நீத்த ‘ஜடாயு’ இராமபிரான் கையாலேயே அந்திமக் கடன் செய்கின்ற பாக்கியத்தை அடைந்தது. இதனால் ஜடாயுக்கு மோட்சம் கிடைத்தது. அதனால்தான் இந்த தலத்திற்கு திருபுட்குழி என்று பெயர் வந்தது. ஜடாயுக்கென்று இராமபிரான் ஏற்படுத்திய தீர்த்தம்தான் கோயிலுக்கு எதிரே உள்ளது! மூலவர் தமது தொடையில் ஜடாயுவை வைத்துக் கொண்டிருக்க திருமகளும் பூமி தேவியும் இடவலமாறி காட்சி கொடுக்கின்றனர். பெருமாளின் திருவீதிப் புறப்பாடு நடக்கும் பொழுதெல்லாம் ஜடாயுக்கும் அதே மரியாதை தரப்படுகிறது.
ஜடாயுக்கென்று ஒரு தனி சன்னதி இங்குண்டு. திருமங்கையாழ்வார். ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் பலமுறை இத்தலத்தில் மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள். நம்பிள்ளையின் சீடர் பின்பழகிய பெருமாள் ஜீயர் அவதரித்த ஸ்தலம் இங்குள்ள கல் குதிரை வாகனம் உண்மையானக் குதிரையைப் போலவே அசையும் உறுப்புகளைக் கொண்டது.
பரிகாரம்:
குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து ஜடாயு தீர்த்தத்தில் நீராடி – இரவில், வறுத்த பயிரை மடியில் கட்டிக் கொண்டு சன்னதியில் படுக்க மறுநாள் காலையில் அப்பயிறு முளைத்திருந்தால் அவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டு. மூதாதையர்களுக்குச் செய்ய வேண்டிய கடன் ஏதாவது பாக்கியிருந்தால் அதை இத்தலத்தில் செய்யலாம். குடும்பப் பிரச்சனை தாம்பத்திய பிரச்சனை சொத்து சுகம் சம்பந்தமான பிரச்சனை கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்தால் அந்தப் பிரச்னை ஆகியவை சாதகமாக மாறி சௌபாக்கியம் பெறுவதற்கு இத்தலம் வேண்டிய வாய்ப்பினை உருவாக்கும். மனம் நிம்மதியடைய இத்தலப் பெருமாளை வணங்குவது நல்லது.