புதன் தசா பலன்கள்(Budhan Dasa)
புதன் தசா மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். புதன் கல்வி, ஞானம், தாய்மாமன், கணக்கு, கம்பியூட்டர், கமிஷன்,ஏஜன்ஸி போன்றவற்றிற்கு காரகன் ஆகும். நல்ல ஞாபகசக்தி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரகம் வகிக்கும்.
புதன் சுப கிரக சேர்க்கைப் பெற்றால் சுபராகவும், பாவிகள் சேர்க்கை பெற்றால் பாவியாகவும் பலனளிக்கும்.புதன் சுபராக இருந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் மிகவும் சிறப்பு. அதுவே பாவியாக இருந்தால் 3, 6 ,10, 11 ஆகிய ஸ்தானங்களில் அமைந்திருந்தால் நற்பலன்களை தரும்.
- புதனுக்கு-சுக்கிரன், சனி நட்பு கிரகங்களாகும்.
புதன் நட்பு கிரக சேர்க்கையோ ,சாரமோ பெற்றிருந்தாலும், இக்கிரகங்களின் வீட்டில் இருந்தாலும், தனது வீட்டில் இருந்தாலும், புதன் தசா காலங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
சொந்தத் தொழில் யோகத்தை கொடுக்கும், நல்ல அறிவாற்றல், பேச்சுத் திறன், ஞாபக சக்தி, பலரை வழி நடத்தி செல்லும் ஆற்றல் உண்டாகும். பல லட்சங்கள் கோடிகளை குவிக்கும் யோகம் ஏற்படும்.
- புதன் பலமிழந்திருந்தால் மூட்டு வலி, கை கால் வலி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், ஆண்மை குறைவு, உடல் பலவீனம் உண்டாகும். தேவையற்ற வீண் பிரச்சினைகளும் தேடி வரும்.
- ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக வரும் புதன் பலமாக அமைந்து புதன் தசாவானது ஒருவருக்கு குழந்தை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், அழகான பேச்சு திறன் உண்டாகும்.
- இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் சாதனைகள் செய்யும் அமைப்பு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், பெரியோர்களின் ஆசி போன்ற யாவும் அமையும்.
- மத்திம வயதில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கௌரவமான பதவிகளை அடையும் வாய்ப்பு, பேச்சுத் திறனால் சமுதாயத்தில் கௌரவம், உயர்வு போன்றவை யாவும் உண்டாகும்.
- முதுமை பருவத்தில் நடைபெற்றால் கௌரவ பதவிகளை வகிக்கும் வாய்ப்பு, நல்ல ஞாபகசக்தி, மற்றவர்களை வழி நடத்திச் செல்லும் ஆற்றல், சுறுசுறுப்புடன் செயல்படும் திறன், உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேன்மை உண்டாகும்.
- புதன் பலமிழந்திருந்தோ, வக்கிரம் பெற்றோ குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் காதுகளில் கோளாறு, பேச்சில் தெளிவின்மை, மந்த நிலையை கொடுக்கும்.
- இளமை பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் தடை, உடல் பலவீனம், ஞாபக மறதி, நெருங்கியவர்களிடையே பகை, பேச்சில் நிதானமின்மை உண்டாகும்.
- மத்திம வயதில் நடைபெற்றால் மனக்குழப்பம், இல்லற வாழ்வில் ஈடுபாடு குறைவு, குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, தொழில் உத்தியோகத்தில் முன்னேற்றம் இன்மை, உற்றார் உறவினர்களிடையே பகை, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும்.
- முதுமைப் பருவத்தில் நடைபெற்றால் நரம்புத்தளர்ச்சி, ஞாபக மறதி, மூளையில் பாதிப்பு, உடல் பலஹீனம், பொருளாதார நெருக்கடி உண்டாகும்.
புதன் ஜென்ம லக்னத்திற்கு 12 வீடுகளில் இருந்தால் ஏற்படும் பலன்கள்
- ஜென்ம லக்னத்தில் புதன் அமையப் பெற்று தசா நடைபெற்றால் அரசாங்கத்தால் உயர்பதவி கிட்டும், தேக ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும். பெயர், புகழ் கூடும். ஆடை ஆபரணம் சேரும். உயர்வான கல்வி, தொழில், வியாபாரத்தில் சிறப்பான அனுகூலம் உண்டாகும்.
- புதன் 2-ல் அமையப்பெற்று தசா நடைபெற்றால் எதிர்பாராத பணவரவு, செல்வ சேர்க்கை, குடும்பத்தில் உள்ளவர்களை பாதுகாக்கின்ற அமைப்பு. மனதில் பூரிப்பு, சந்தோஷம் உண்டாகும். வியாதிகள் குணமாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி தரும்.
- புதன் 3-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, சங்கீதத்தில் ஈடுபாடு, கலைத்துறையில் உயர்வு, ஆடை ,ஆபரண சேர்க்கை, சகோதரர்களால் அனுகூலம், மனைவி புத்திரர்களால் உயர்வு, எதிரிகளை வெற்றி கொள்ளும் அமைப்பு உண்டாகும்.
- புதன் 4-ல் அமையப்பெற்று தசா நடைபெற்றால் உற்றார் உறவினர்களால் அனுகூலம். தாராள தன வரவுகள் உண்டாகும். புதுமையான வீடு அமையும். நடனம், சங்கீதம், வித்தைகள் போன்றவை கற்பதில் ஈடுபாடு கொடுக்கும். கணிதம், கம்ப்யூட்டர் துறையில் உயர்வுகளும், தொழில் வியாபார நிலையில் மேன்மைகள் உண்டாகும்.
- புதன் 5-ல் அமர்ந்து தசா நடைபெற்றால் குழந்தை பிறப்பு, குழந்தையால் மேன்மை, நல்ல ஞானம் பெறும் அமைப்பு. எல்லாம் உற்றார் உறவினர்களாலும் விரும்பப்படும் நிலை. மந்திரங்களை செபிக்கும் ஆற்றல், பண வரவுகளால் மகிழ்ச்சி, புதிய வீடு, மனை வாங்கும் யோகம். பூர்வீக வழி சொத்துக்கள் கிடைக்கும் அமைப்பு. சுகபோக வாழ்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
- புதன் 6-ல் அமையப்பெற்று தசா நடைபெற்றால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஞாபக சக்தி குறைவு ஏற்படும். பகைவர்கள் மற்றும் உறவினர்களால் தொல்லைகள் உண்டாகும். அரசாங்க வழியில் அனுகூலமற்ற நிலை, இடம் விட்டு இடம் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.
- புதன் 7-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால், நல்ல சுகமான வாழ்க்கை சுபகாரியங்கள் நடைபெறும் அமைப்பு உற்றார் உறவினர்களுடன் நல்ல ஒற்றுமை அழகிய வீடு கட்டும் அமைப்பு பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை போன்ற யாவும் உண்டாகும்
- புதன் 8-ல் அமையப்பெற்று தசா நடைபெற்றால் உற்றார் உறவினர்களுக்கு உடல் நிலையில் பாதிப்பு, அதிக கஷ்டம், மனதில் அமைதி குறைவு, நெருப்பினால் கண்டம், பகைவர்களால் போராட்டமான வாழ்க்கை உண்டாகும்.
- புதன் 9-லிருந்து தசா நடந்தால் தர்ம காரியங்கள் செய்யும் அமைப்பு. மிகுந்த அறிவாற்றல், எல்லா மக்களாலும் விரும்பப்படும் அமைப்பு, செல்வ சேர்க்கை, வீடு, மனை, வண்டி, வாகனம் மூலம் லாபம். ஆடை, ஆபரண சேர்க்கை, அரசாங்கம் மூலம் உயர்வு. மனைவி ,புத்திரர்களால் நன்மை. தந்தை வழியில் உதவி உண்டாகும்.
- புதன் 10-ல் அமையப்பெற்று தசா நடைபெற்றால் புகழ் பெருமை உண்டாகும். திருமணம் கைகூடும். சிறப்பான தனலாபம் சுகமான வாழ்க்கை உண்டாகும். செய்யும் தொழில் வியாபாரம் சிறக்கும். கணிதம், கம்ப்யூட்டர் துறையில் உயர்வு, நல்ல அறிவுக் கூர்மை ஏற்படும்.
- புதன் 11-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் தொழில் வியாபாரத்தில் லாபம். வீடு, மனை, பூமி சேர்க்கை. வண்டி, வாகன யோகம், உத்தியோகத்தில் உயர்வு, மனதில் பூரிப்பு, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.
- புதன் 12-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் இருக்கின்ற இடத்தில் பிரச்சனை, உறவினர் மற்றும் தாய்மாமன் போன்றவர்களிடம் விரோதம், உதவியற்ற நிலை, வண்டி வாகனத்தால் பாதிப்பு, அதிகமான கஷ்டங்களை அனுபவிக்கும் நிலை ஏற்படும். ஊர் விட்டு ஊர் சென்று சம்பாதிக்க நேரிடும்.
தொடர்ச்சி அடுத்த பதிவில்