ஐப்பசி அன்னாபிஷேகம்
அபிஷேகப் பிரியனான சிவபெருமானை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நிறைமதி நாளன்று ஒவ்வொரு நட்சத்திரத்துக்குரிய பொருட்களால் அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், சித்திரையில் மரிக்கொழுந்து, வைகாசியில சந்தனம், ஆனி மாதத்தில் காராம் பசுவின் பால், ஆவணியில் வெல்லம், புரட்டாசியில் கோதுமை மற்றும் பசுநெய் கலந்த வெல்ல அப்பம், கார்த்திகை மாதத்தில் பசுநெய் மற்றும் தாமரை தீபம், தைமாதத்தில் கருப்பஞ் சாறு மார்கழியில் பசுநெய் மற்றும் நறுமணப்பன்னீர் ஆகியவற்றை பகவானுக்குச் சமர்ப்பித்து வழிபடுவது சிறப்பு என்பார்கள்.
அந்த வகையில், ஐப்பசி மாதத்தில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். அன்னாபிஷேகம் செய் வது, இறைவனது பிரசாதம் சிற்றுயிர்முதற் கொண்டு அனைத்து ஜீவ ராசிகளுக்கும்சென்றடைய வேண்டும் என்பதே!
‘சாம வேதத்தில் ஓர் இடத்தில் ‘அஹ மன்னம்’ அஹமன்னம், அஹேமன்னதோ’ என்று கூறப்பட்டுள்ளது. அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்ன வடிவில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இறைவனின் அருவுருவமான லிங்கமூர்த் திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் தினமே ஐப்பசி பௌர்ணமி நாள். அன்னாபிஷேக நாளாகப் போற்றப்படுகிறது.
பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையாக விளங்குகிறான். அன்று அவனது கலை அமிர்தக் கலையாகும். ஐப்பசிப் பௌர்ணமியன்று புது நெல்லைக்கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தைத் தரவல்லதாகும்.
சிவன் பிரம்ம ரூபி. அவரது மெய்யன்பர்கள் பிரதிபிம்ப ரூபிகள் பிம்பம் திருப்தி அடைந் தால் பிரதிபிம்பமும் திருப்தி பெறும் அனைவருக்கும் அன்னம்பாலிக்கும் அந்த அன்னபூரணியை, தன் வாம பாகத்தில் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உல கில் பஞ்சம் வராது என்பது உண்மை.
தில்லையில் அனுதினமும் காலை பதினோரு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு, அந்தஅன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிர சாதமாக வழங்கப்படுகிறது. எனவேதான் இந்தத் தலத்தை அப்பர் பெருமான்,
“அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம் பலம் பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற இன்னம் பலிக்கும்மோ இப்பிறவியே!” -என்று சிறப்பித்துப் பாடினார்.
அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியில் சாற்றப்படும் ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம். எனவே, அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்குச் சமம். அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.