அயோத்தி
ராமர் பிறந்த இடமான ‘அயோத்தி’ “ராமஜென்ம பூமி”யில் ஸ்ரீ ராமபிரானுக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டு 22.01.2024 திங்கள்கிழமை பகல் 12:20-12:30 மணிக்குள் வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதற்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக ‘அயோத்தி’ ரயில் நிலையம் மறு சீரமைக்கப்பட்டு புது பொலிவுடன் காட்சி தருகிறது. அதன் பெயரும் ‘அயோத்தி தான் சந்திப்பு ‘என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் முதன்முறையாக விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. ‘அயோத்தி’ ராமர் ஆலயம் பற்றிய அரிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- சப்தபுரிகள் என அயோத்தியா(அயோத்தி ), மதுரா, மாயா(ஹரித்துவார்), காசி, காஞ்சி அவந்திகா(உஜ்ஜயினி) மற்றும் துவாரகா ஆகிய ஏழு நகரங்கள் புண்ணிய பூமிகளாக போற்றப்படுகின்றன. அவற்றில் முதன்மையானதாகவும், அதிக புராதனமாகவும் அயோத்தியே கருதப்படுகிறது. ரிக் வேதத்திலும், அதர்வண வேதத்திலும், அயோத்தியாவை பற்றிய குறிப்புகள் உள்ளன. அதர்வண வேதம் அதை ‘தேவர்கள் நகரம்’ என்றே சொல்கிறது.
- ஆதியில் மனு தனது அரசுக்காக ஒரு நகரை நிர்மாணம் செய்ய விரும்பி அதற்காக பிரம்ம தேவரை அணுகினான். பிரம்மா மனுவை விஷ்ணுவிடம் அழைத்துச் சென்றார். ராம அவதாரம் நிகழ வேண்டிய அவசியத்தை உணர்ந்த விஷ்ணு, ரிஷி வசிஷ்டரயும், விஷ்வகர்மாவையும் உடனே அவர்களுடன் அனுப்பினார். சரயு நதிக்கரையில் விஸ்வகர்மா ‘அயோத்தி’ நகரை நிர்மாணித்தார்.
- அயோத்தி முக்தி தரும் ஏழு புண்ணிய நகரங்களில் ஒன்று. சூரிய குல திலகனான ஸ்ரீராமர் அவதரித்த பூமி. இங்கு ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோடி சூரிய பிரகாசமாக தோன்றினார் என்கிறது இராமாயணம். சிறு பாலகனாக ஸ்ரீராமன் விளையாடியதும், வில்வித்தை கற்றதும் அந்த மண்ணில் தான். அவரின் திவ்ய சரிதத்தை சொல்லும் இதிகாசமே “ராமாயணம்”.
- ரகு வம்ச அரசர்களின் தலைநகராக விளங்கிய நகரம் ‘அயோத்திய’ வைவஸ்த மனுவின் புத்திரனான இஷ்வாகு முதலில் இந்த வம்சத்தில் ஆட்சி செய்யத் தொடங்கினார். பிறகு ஹரிச்சந்திரன், பகீரதன் போன்றவர்களும் இங்கு ஆட்சி செய்தனர். அதன்பின்னர் தசரதன், பரதன், ஸ்ரீராமர், குசன் என அநேகரது ஆட்சியில் தலைநகராக இருந்த புண்ணிய பூமி ‘அயோத்தி’. இஷ்வாகு பரம்பரையில் சூரிய வம்சத்தில் வந்த வழித்தோன்றலில் முக்கியமானவர்கள் தசரதன், பரதன், ஸ்ரீராமன் ஆகியோர்.
- ஒரு கதையாக நின்று விடாமல் இந்திய மக்களின் உணர்வுகளில் உடாடிக் கொண்டிருக்கும் ஒரு உன்னத பண்பாட்டு காவியம் ‘இராமாயணம்’. நேபாளம் தொடங்கி இலங்கை வரை நீண்ட பயணமாக விரிந்து ஒற்றுமைப்படுத்தும் இந்தியக் காவியம் அது. அதன் நாயகனகத் திகழும் ஸ்ரீராமன், இந்திய பண்பாட்டின் அடையாளம், ஒழுக்க நெறியின் சிகரம், அவர் சகல கல்யாண குணங்களையும் பெற்று திகழ்ந்ததால் “கல்யாணராமர்” என்னும் திருநாமம் பெற்றவர் என்கின்றனர் ஞான நூல்கள்.
- அயோத்தி ராமர் கோயிலுக்கான அசல் வடிவமைப்பு 1988 ஆம் ஆண்டு அகமதாபாத் சேர்ந்த சோம்புரா குடும்பத்தின் சந்திரகாந்த் சோம்புராவால் தயாரிக்கப்பட்டது. இந்த குடும்பத்தினர் 15 தலைமுறைகளாக கோயில் கட்டுமான தொழில் செய்பவர்கள். இவர்களே இந்திய விடுதலைக்குப் பின்னர் சோமநாதர் கோயிலையும், உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கட்டியுள்ளனர். அதில் புகழ்பெற்றது டில்லி அக்ஷர்தம் கோயில் ஆகும்.
- அசல் கட்டுமான வரைபடத்தில் இருந்து சில மாற்றங்களுடன் புதிய வடிவமைப்பு வாஸ்து சாஸ்திரம் மற்றும் சிற்ப சாஸ்திரங்களின்படி 2020 ஆம் ஆண்டு சோம்புரா குடும்பத்தினரால் அயோத்தி ராமர் கோயில் கட்டட வரைபடம் தயாரிக்கப்பட்டது.
- அயோத்தி ராமர் கோயிலில் 235 அடி அகலமும் 360 அடி நீளமும் 161 அடி உயரமும் கொண்டதாக அமையும். கோயில் கட்டுமான பணி முழுமை அடைந்தவுடன் ராமர் கோயில் உலகில் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும்.
- ஸ்ரீ ராம சரிதத்தை மனித குலம் உள்ளவரை மறக்கவோ, மாற்றவோ, மறுக்கவோ முடியாது. அப்படிப்பட்ட ஸ்ரீ ராமரின் திருப்பாதம் பெற்ற புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் இருந்தாலும் அதன் தொடக்கப்புள்ளி என்னும் அளவில் பெருமைக்குரிய தளமாக திகழ்கிறது ‘அயோத்தி’.
- ராமாயணத்தின் முக்கிய பகுதி இலங்கையில் நடந்தது ‘சீதா எலியா’ என்ற இன்றைய இடமே அன்றைய அசோகவனம். புனிதமாக கருதப்படும் அந்த இடத்திலிருந்து இலங்கையையும் ராம் மந்திர் கட்டுமானத்திற்காக கற்களை வழங்கி உள்ளது.
- அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு தாய்லாந்து அங்கிருந்து மண்ணை அனுப்பி உள்ளது. முன்னதாக அந்த நாடு அங்குள்ள இரண்டு புதிய நதிகளில் இருந்து தீர்த்தத்தையும் அனுப்பி இருந்தது.
- நமது அண்டை நாடான நேபாளத்தில் கண்டகி ஆற்றங்கரை பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சாளகிராமக் கற்கள் ஏற்கனவே அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு நேபாள நாட்டின் சார்பில் ஆபரணங்கள், உடைகள், இனிப்புகள் மற்றும் நினைவு பரிசுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கான ஜானக்பூர்தாம் – அயோத்தி தாம் ஆன்மீகப் பயணம் ஜனவரி 18-ம் தேதி நேபாளத்தின் ஜானகூரில் இருந்து பீகார், உத்திரப்பிரதேசம் வழியாக ஜனவரி 20ஆம் தேதி அயோத்தி வந்தடையும். அன்று நினைவு பரிசுகளை “ஸ்ரீராமஜென்ம பூமி” அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்படும் என ஜானகி கோயில் கூட்டு குழு தெரிவித்துள்ளது.
- கோயிலின் பிரதான அமைப்பு ஒரு உயர்ந்த மேடையில் கட்டப்பட்டு மூன்று மாடிகளை கொண்டிருக்கும். இதன் நடுவில் உள்ள கருவறையை சுற்றி ஐந்து மண்டபங்கள் இருக்கும். கருவறைக்கு மேல் 161 அடி உயர கோபுரம் இருக்கும். கட்டிடத்தில் மொத்தம் 366 நெடு வரிசைகள் இருக்கும். சிவனின் அவதாரங்கள், விஷ்ணுவின் தசாவதாரங்கள், 64 சௌசத் யோகினிகள் மற்றும் சரஸ்வதி தேவியின் 12 அவதாரங்கள் அடங்கிய பக்திகளில் தலா 16 சிலைகள் இருக்கும். படிக்கட்டுகளில் அகலம் 16 அடியாக இருக்கும்.
- கருவறை எண் கோண வடிவில் அமைந்திருக்கும். கோயில் 10 ஏக்கரில் கட்டப்பட்டு 57 ஏக்கர் நிலப்பரப்பில் ஒரு பிரார்த்தனை கூடம், விரிவுரை கூடம் ,கல்வி வசதி, அருங்காட்சியகம் மற்றும் சிற்றுண்டிச் சாலை போன்ற பிற வசதிகளுடன் கூடிய வளாகமாக உருவாக்கப்படுகிறது.
- அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறப்போகும் நாள் என்று வேறொரு முக்கியமான சம்பவமும் நடக்க உள்ளது. அயோத்தியை சுற்றியுள்ள 15 கிராமங்களில் வசிக்கும் 1,50,000 சூரிய வம்ச சத்திரியர்கள் 500 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக செருப்பு மற்றும் தலைப்பாகை அணிய உள்ளனர். அவர்கள் அந்நிய மத மன்னர் ஆட்சியில் “ராமஜென்ம பூமி” ஆலயம் இடிக்கப்பட்ட போது அதை காப்பாற்ற வீரமாக போரிட்டவர்கள். இருந்தாலும் கோயில் இடிக்கப்பட்டது. அதனால் மிகவும் மனம் வருந்தி அவர்கள் மீண்டும் இதே இடத்தில் ‘ராமர் கோயில்’ கட்டப்படும் வரை நாங்கள் தலைப்பாகை அணிய மாட்டோம், காலணிகள் அணிய மாட்டோம், குடை பயன்படுத்த மாட்டோம் என்று சபதம் செய்தனர். தங்கள் முன்னோர் போட்ட சபதத்தை மீறாமல் 500 நூற்றாண்டுகளாக அவர்கள் கல்யாணம் போன்ற விசேஷங்களில் கூட செருப்பு, தலைப்பாகை, குடை பயன்படுத்தாமல் வாழ்ந்து காட்டினர். இப்போது அனைத்து கிராமங்களிலும் சூரியவம்சம் சத்திரியர்களுக்கு ஜனவரி 22ஆம் தேதி அணிந்து கொள்வதற்காக புதிய தலைப்பாகை உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு கிராமம் கிராமமாக வழங்கப்பட்டு வருகிறது.
- அயோத்தி ராமர் கோயில் என்றென்றும் நிலைத்திருக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் சிமெண்ட் கலவை கிடையாது. எனவே பராமரி பராமரிப்பிற்கு அவசியம் இல்லை. வெறும் கற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
- ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள பன்சி கிராமத்தின் மலையை குடைந்து 60,000 கன அடி மணல் கற்களைக் கொண்டு கட்டுமான பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல மொழிகளில் ‘ஸ்ரீ ராமர்’ பெயர் பொறிக்கப்பட்ட ஏராளமான செங்கற்கள் வந்துள்ளன. இவை அடித்தளத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. கல் தொகுதிகளை இணைக்க பத்தாயிரம் செப்புத் தகடுகள் பயன்படுத்தப்பட்டன.
- ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து மங்களப் பொருட்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. ‘அகில பாரத இந்து மகா சபா’ சார்பில் எட்டு திருக்குடைகள் தயார் செய்யப்பட்டன. இந்த திருக்குடைகள் ஊர்வலமாக புறப்பட்டு ஜனவரி 19ஆம் தேதி அயோத்தி செல்கின்றன. இதற்கு கும்பகோணம் மகாமக குளக்கரையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருக்குடை ஊர்வலம் புறப்பட்டு ராமசாமி கோயிலை வந்தடைந்து. பின்னர் தஞ்சாவூருக்கு வந்த திருக்குடைகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கரந்தை ராமர் கோயிலில் திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்த குடைகள் ஜனவரி 19ஆம் தேதி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன.
- அயோத்தியாவில் புதிதாக கட்டப்படும் ராமர் கோயிலில் மூலவருக்கு சாத்துவதற்காக சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் பதித்த 2கிலோ வெள்ளி நெக்லஸை உருவாக்கியுள்ளார். நல்ல வேலைபாடு தெரிந்த 40 ஆசாரிகளை வைத்து 35 நாட்கள் பணியாற்றி இந்த நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெக்லஸில் நுட்பமான இராமாயண சித்தரிப்புகள், ராமர், ஆஞ்சநேயர், சீதை, லட்சுமணன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
- அயோத்தியாவில் புதிதாக கட்டப்பட்ட ராம மந்திர் என்கிற கோயிலில் 22.1.2024 அன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற இருப்பதை ஒட்டி ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ சுவாமிகள், பாரத நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்துக்கள் அனைவரும் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும், ஸ்ரீராமனின் அருளை பரிபூரணமாக பெறவும் தினமும் முடிந்த அளவுக்கு “ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராம” எனும் தாரக மந்திரத்தை ஜெபிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்ரீ சுவாமிகள் சொன்ன வண்ணம் ராம நாமத்தை ஜெபிப்போம். காரணம் கம்பர் சொன்னது போன்று
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்தும் தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம என்ற இரண்டு எழுத்தினால்
ராம நாமத்தை ஜெபிப்பதால் பலன்கள் பல நிச்சயம் கிட்டும் கூடவே திருவருளும் குருவருளும் கிட்டும்.
- கோயிலை உருவாக்க பாரம்பரிய நுட்பங்கள் துணை புரிகின்றன. 12 மீட்டர் ஆழமுள்ள அடித்தளத்திற்கு உபயோகப்படுத்தப்பட்ட மண் சில நாட்களில் கற்களாக மாறிவிடும். பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளை தாங்கும் அளவுக்கு அது வலுவாக இருக்கும்.
- மூன்று ராம விக்கிரகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒன்று வெள்ளைப் பளிங்குகள் மற்றவை இரண்டும் கிருஷ்ண சைல எனப்படும் கல்லில் வடிவமைக்கப்பட்டது. இவை சற்றே வெளிர் கருப்பு நிறத்தில் உள்ளது. பிரபல சிற்பக் கலைஞர்கள் கணேஷ் பட், அருண் யோகராஜ் மற்றும் சத்திய நாராயணன் பண்டிட் ஆகியோர் இந்த விக்கிரகங்களை தயார் செய்துள்ளனர்.
- மூன்று விக்கிரகங்களும் சுமார் 4 அடி உயரமானவை. கீழ்ப்புறம் உள்ள மேடையுடன் சேர்ந்து ஏழு அடி உயரத்தில் வில் அம்புடன் ராமர் காட்சி தருவார். சுமார் 25 அடி தூரத்தில் இருந்து பக்தர்கள் இறைவனை தரிசிக்கலாம்.
- இந்த மூன்றில் ஒன்று22.01.2024 அன்று பிராணப் பிரதிஷ்டை செய்யும் நேரத்தில் கருவறையில் நிறுவப்படும். மற்றவை கோயில் வளாகத்தில் வைக்கப்பட உள்ளன. பாலகர் ஷா தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கர்ப்பகிரகத்தின் கனவுகள் நேர்த்தியாகவும் வேலைப்பாடுகள் மிகுந்தும் உள்ளன. அதில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. 500 கிலோவிற்கு மேலான எடை கொண்ட அந்த கதவுகளில் யானைகள், மயில்கள், தேவதைகள், தாமரை மலர்கள் போன்ற சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ராமர் விக்கிரகத்திற்கு கீழ் வைக்கப்படும் எந்திரம் தெனாலியில் இருந்து அனுப்பப்படுகிறது.
- கோயிலில் மொத்தம் 44 கதவுகள் மூலவர் மற்றும் இலக்குவணன்,சீதா பிராட்டி, அனுமன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களின் கருவறை கதவுகளையும் செதுக்கியவர்கள் நமது மாமல்லபுரத்து சிற்பிகள் என்பது நமக்கெல்லாம் பெருமை. கர்ப்ப கிரகத்திற்கும் நுழைவாயிலுக்கும் இடையில் 5 மண்டபங்கள் அமைந்துள்ளன.
- தூத்துக்குடி மாவட்டம் ஏரலிலிருந்து கோவிலுக்கு 650 கிலோ கொண்ட வெண்கல மணி அனுப்பப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கு தேவைப்படும் 12 ஆலயமணிகளும், 36 பிடி மணிகளும் நாமக்கல்லில் தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.
- புனித நீரும், மண்ணும், கங்கை, காவிரி, துங்கபத்ரா, நர்மதை, யமுனை, சரஸ்வதி, பிரம்மபுத்திரா போன்ற 16 ஆற்று படுகையிலிருந்து எடுக்கப்பட்டு கலசங்களில் வைக்கப்பட்டு அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ஸ்ரீ ராம நவமி அன்று முதல் சூரியனின் கதிர் ராம விக்கிரகத்தில் விழும்படி ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது
- ராமவதாரம் எடுக்க விரும்பிய மகாவிஷ்ணு வைகுண்டத்தின் ஒரு பகுதியே அயோத்தியாக்கினார் என்றும் ஒரு கருத்து உண்டு. வேதம் இந்நகரை மண்ணுலக சொர்க்கம் என்கிறது. அயோத்தியில் பிறந்தால் முக்தி என்கின்றனர். குப்தர்கள் காலத்தில் பெரும் வணிக நகரமாக விளங்கிய அயோத்தி. புத்த ஜைனசமயத்தவர்களுக்கும் புனித நகரமாக விளங்கியது என்கிறது வரலாறு.
- மூன்று யுகங்களாக நிலைத்திருக்கும் நகரமாக திகழ்கிறது அயோத்தி. இங்கே ராமர் கோயிலுக்கு எதிரே இருக்கும் ஒரு ஆலயத்தில் சிரஞ்சீவினியான ஹனுமன் வாசம் செய்கிறார் என்றும். அனுதினமும் அவர் ஸ்ரீ ராமநாமத்தை ஜெபித்தபடி இருக்கிறார் என்றும் நம்புகிறார்கள் அயோத்தி வாசிகள்.
- ஸ்ரீ ராமருக்கு அயோத்தியில் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இருந்தன. 16ஆம் நூற்றாண்டு வரை ஸ்ரீ ராமரின் பிறந்த இடத்தில் அவருக்கான ஆலயம் இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்நாளில் அது அழிக்கப்பட தற்போது பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது. “ராம் லல்லா” என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
- இந்தியாவின் 2787 புனித இடங்களில் இருந்து மண்ணும், 155 புண்ணிய நதிகளில் இருந்து நீரும் கொண்டுவரப்பட்டு இங்கு பூஜக்கப்பட்டன.
- கிரக மண்டபம்,கீர்த்தனை மண்டபம் ,நிருத்ய மண்டபம் ,ரங் மண்டபம் ,சபா மண்டபம் என ஐந்து மண்டபங்கள் கோயிலில் இருக்கும்.
- கோயில் வளாகத்தில் நான்கு மூலைகளிலும் ஆதித்யன், பகவதி, விநாயகர் மற்றும் சிவபெருமான் ஆகியோருக்கு அர்ப்பணிக்க பட்ட கோயில்கள் உள்ளன. வடக்கு பகுதியில் அன்னபூரணிக்கும், தெற்கு பகுதியில் அனுமனுக்கும் ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
- மகரிஷிகளுக்கு உரிய மரியாதை தரப்பட்டுள்ளது வால்மீகி, வசிஷ்டர், அகத்தியர், நிஷாத் ராஜன், விசுவாமித்திரர், மாதா சபரி, தேவி அகலிகை ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.