அமாவாசை என்றால் என்ன?
சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் நெருங்கி நிற்பதை ‘அமாவாசை’ என்கிறோம்.
அமாவாசையன்று சந்திரன், தன் ஒளியை முற்றிலும் இழந்து விடும். அதனால் சூரியனும் பாதிக்கப்படும். பொதுவாக அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியனும், சந்திரனும் பலமிழப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
சூரியனும், சந்திரனும் எந்த ஜாதகருக்கும் மிகவும் முக்கியமான கோள்கள் ஆகும். எனவே அவை கெடுவது நல்லதல்ல என்பது பொது விதி.சிலர் அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகள் திருடர்களாவார்கள் என்று சொல்வார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையின் அனுகூலம் குறைவாக இருக்கலாம். அல்லது அவர்கள் பாதிக்கப்படலாம். இவை பொதுப் பலன்கள்தான். மற்ற கிரக நிலைகள் பார்த்த பின்தான் பாதிப்பு பற்றியும், பாதிப்பின் அளவைப் பற்றியும் அறிய முடியும்.
தந்தையின் பாதிப்பு பற்றி அறிய ஒன்பதாம் வீட்டையும், ஒன்பதாம் வீட்டதிபதி நிலையும் கவனிக்க வேண்டும். தாயைப் பற்றி அறிய நான்காம் வீட்டையும், நான்காம் வீட்டதிபதியின் நிலையையும் அறிய வேண்டும்.
இதற்கு நிவர்த்தி உண்டா? நிச்சயம் உண்டு. பொதுவாக சுக்கிரன், சூரியனுடன் பயணிக்கும் கிரகம் என்பதால் அமாவாசையன்று பிறந்த சிலருக்கு சூரியன், சந்திரனுடன் சுக்கிரன் இணைந்திருக்க வாய்ப்புண்டு. சுக்கிரன் இணைவு, தோஷத்தைப் போக்கும். சந்திரன் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறும்.
சுக்கிரனின் பலம் மற்றும் நெருக்கம் பொருத்து நிவர்த்தியின் அளவு இருக்கும்.
அது மட்டுமல்ல. குரு சூரியன், சந்திரனை பார்த்தாலும் தோஷம் நீங்கும்.
மேலும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் வீடு கொடுத்த கிரகம் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் தோஷம் குறையும். மேலும் சூரியனும், சந்திரனும் நவாம்சத்தில் சுபர்களின் வீடுகளில் இருந்தால் தோஷம் குறையும் எனலாம்.