மேஷ லக்னம்
ஒருவர் மேஷ லக்னத்தில் பிறந்திருந்தால் அவர் அரசாங்க உத்தியோகம் பார்ப்பவராகவும், உறுதியான உள்ளம் படைத்தவராகவும், எப்போதும் சிரித்து சிரித்து பேசுபவராகவும், மற்றவர்களிடம் பணிபுரிந்து பணம் சம்பாதிப்பவராகவும், எவ்வகையிலாவது திரண்ட செல்வத்தை சேர்ப்பவராகவும், எதிலும் தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்படுபவராகவும், ஒல்லியான தோற்றத்தை பெற்றவராகவும், சத்திய வழிகளை கடைபிடித்து பெருமை பெறுபவராகவும்,தர்மசாஸ்திரங்களை கற்பதில் ஆர்வம் நிறைந்தவராகவும், எப்போதும் உண்மை பேசுபவராகவும், நீண்ட கழுத்தைப் பெற்றவராகவும், முன் கோபம் கொண்டவராகவும் இருப்பார்.
அவருடைய ஐந்தாவது வயதில் நெருப்பினால் அச்சம் உண்டாகும். ஏழாவது வயதிலும், பத்தாவது வயதிலும் காய்ச்சலால் பாதிப்பு உண்டாகும். இருபதாவது வயதில் காது வாய் சம்பந்தப்பட்ட நோய்கள் தொல்லை கொடுக்கும். 22ஆவது வயதில் விஷத்தால் பாதிப்பு உண்டாகும். 25-வது வயதில் நீரினால் கண்டம் ஏற்படும். 28-வது வயதில் பிளவை கட்டியால் தொல்லை உண்டாகும். பொதுவாக இந்த ஜாதகர் 100 வயது வரை இப்பூவுலகில் வாழ்ந்திருப்பார்.
ரிஷப லக்னம்
ஒருவர் ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தால் அவர் சத்தியம் தவறாதவராகவும், சான்றோர்களை வணங்கி பூசிப்பவராகவும், குறைவாக உணவை புசிப்பவராகவும், நெறி தவறாதவராகவும்,தடித்த உடலை பெற்றவராகவும், மற்றவர்களுடைய வேலைகளையும் செய்து அவர்களுக்கு உதவி புரிபவராகவும், ஜோதிடக் கலையை கற்பதில் ஆர்வம் கொண்டவராகவும், ஆடை ஆபரணங்களை சேர்ப்பவராகவும், நுட்பமான அறிவை பெற்றவராகவும், மற்றவர்களுடன் நெருக்கமாக பழகி அவர்களுடைய செல்வத்தை கவர்பவராகவும், இருமல் நோயால் அடிக்கடி தொல்லைப்படுபவராகவும், புத்திர பாக்கியத்தை தாராளமாக பெற்றவராகவும், புளிப்பான பதார்த்தங்களை விரும்பி சாப்பிடுபவராகவும் இருப்பார்.
அவருடைய ஐந்தாவது வயதில் தீயால் ஆபத்து ஏற்படும். 16ஆம் வயதில் கழுத்து சம்பந்தப்பட்ட நோயால் தொல்லை உண்டாகும். 20 ஆம் வயதிலும், 27 ஆம் வயதிலும் காய்ச்சலால் பாதிப்பு உண்டாகும். இந்த லக்னத்தை சுப கிரகங்கள் பார்த்தால் இந்த ஜாதகர் 77 வயது வரை வாழ்ந்து இருப்பார் என்பது பொதுவான கருத்தாகும்.