குரோதி வருட பலன்கள் 2024-துலாம்
சுக்கிரனை ஆட்சி வீடாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! நிதானமும் நேரடி கவனமும் அவசியம் தேவைப்படும் வருடம். பணி செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கலாம். புலம்பாமல் ஏற்று செய்வது தான் புத்திசாலித்தனம். உழைக்க தயங்காமல் இருந்தால் உங்கள் திறமைக்கு உரிய ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கரம் நீளும். வீண் பழி சுமந்த நிலை மாறும். மாற்றம் எதையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டால் அலுவலகத்தில் அனுகூலம் அதிகரிக்கும்.
உங்கள் வாழ்க்கையில் வசந்த காலம் வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கி விடும். குத்தல், குதர்க்கல் தவித்தால் குதூகலம் நிலைக்கும். உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வரவு சீராகும். வாரிசுகளால் பெருமை சேரும். சுபகாரிய தடைகள் சீக்கிரமே விலகும். வீடு, வாகனம் மாற்றப் புதுப்பிக்க நேரம் அமையும். குடும்பத்தில் பெரியவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள்.
குரோதி வருட கிரகநிலைகள்
சுப காரியங்களில் ஆடம்பரத்தை தவிருங்கள். எந்த சமயத்திலும் உங்கள் வார்த்தைதான் உங்கள் வாழ்க்கையில் இனிமை சேர்க்கும் மறந்து விடாதீர்கள். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். நேரான கவனமும் நேர்மையான செயல்களும் இருந்தால் லாபம் நிலைக்கும். பிற மொழி மனிதர்களை நம்பி தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம்.
குரோதி வருட குரு பார்வை
அரசு, அரசியல் துறை சார்ந்தவர்கள் உடன் இருப்பவரை அரவணைத்து அன்பு காட்டினால் உங்கள் உயர்வுகள் உத்தரவாதமாக இருக்கும். கோப்புகளில் கையெழுத்திடும்போது கவனமாக இருங்கள். பொது இடத்தில் வாக்குறுதிகள் ஏதும் தருவதற்கு முன் யோசித்து செயல்படுங்கள்.
கலை ,படைப்பு துறையினருக்கு திறமைக்கு உரிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். உங்கள் படைப்புகள் சார்ந்த ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உடல் நலத்தில் அடிவயிறு, பாதம், கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம். கர்ப்பிணி பெண்கள் தொடர் சிகிச்சையில் கவனமாக இருங்கள்.
பரிகாரம்
இந்த வருடம் முழுக்க உங்களுக்கு பிடித்த அம்மனை தரிசித்து வாருங்கள் வாழ்க்கை வசந்தமாக இருக்கும்