குரு பெயர்ச்சி பலன்கள் -மேஷம்-2021-2022
உங்கள் ராசிக்கு பத்தாம் இடமான மகரத்தில் இதுவரைக்கும் இருந்து வந்த குரு பகவான் இப்போது 11-ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.
அவருடைய விசேஷ பார்வைகளான 5 ,7, 9-ஆம் பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே 3,5,7-மிடத்தில் பதியும்.
மேஷ ராசியின் அருமையான இடங்களை குரு பார்ப்பதால் உங்களுக்கு திருமணம் தொழில் என ‘ஓஹோ’ வாழ்க்கைதான். குறிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒரு மனிதருக்கு வாழ்வில் எவையென அவசிய தேவையோ அவையும் கிடைத்து அதற்கு மேலும் கிடைக்கும். வேறென்ன வேண்டும்? மேஷராசியினருக்கு ஒன்றே ஒன்றுதான் சற்று சிந்திக்க வைக்கிறது. மூன்றாமிடம் எனும் ஸ்தானத்தை குரு பார்க்கும் பொழுது சிலருக்கு சற்று சபல எண்ணம் அதிகரிக்கும். எனினும் குருவின் பார்வை என்பதால் அதனை அவ்வப்போது தடுத்து விடுவார்.
குரு மேஷ ராசிக்கு 75/100 நற்பலன்களை தருவார்.
மேஷ ராசியினர் கோப குணம் உள்ளவர்கள். முணுக்கென்று முன் கோபம் ஏற்படும். மலைகளில் அலைவதில் ஈர்ப்பும் விருப்பம் உண்டு. இவர்களது குடும்பத்தினர் அலங்கரித்துக் கொள்வதில் மட்டுமல்ல; உணவு விஷயத்திலும் ரசனை கொண்டவர்கள். இவருடைய இளைய சகோதரர் சற்று குறும்பு பிடித்தவராக இருப்பார். தாயார் அமைதி, அன்பு கொண்டவர். குலதெய்வம் முன்னிலை கொண்ட-வீரமான தெய்வமாக இருக்கும். தாய்மாமன் வெகு ஜாலியாக இருப்பார். வாழ்க்கை துணை அழகு ரசனையோடும், வியாபார யுத்தியோடும் இருப்பார்.
- இந்த கும்ப குரு உங்கள் முதலீடுகளை பெருக்குவார்.
- மேலும் முன்பு செய்திருந்த முதலீடுகள் லாபம் தரும்.
- தந்தையின் சொத்து சிலருக்கு கிடைக்கும்.
- சிலருக்கு அரசியல்வாதியான தந்தையின் உதவி மூலம் இவரும் அரசியலில் குதித்து உடனே ஒரு பதவியையும் பெற்றுவிடுவார்.
- வேலையில் பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும்.
- திருமணம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தம் பெருகும்.
- மூத்த சகோதரர்களுக்கு மறைமுகமான வருமானத்திற்கு ஆவன செய்வார்.
- தந்தைவழி சித்தப்பாவின் சொத்துக்கள் உங்களை வந்தடையும்.
- தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள்.
- ஓவியம் வரைவதை தொழிலாக கொண்டவர்கள் மேன்மையும் லாபமும் பெறுவர்.
- இந்த குரு பெயர்ச்சி உங்களது சில அடங்கா எதிரிகளையும் நட்பு வளையத்திற்குள் கொண்டு வந்து மாயம் நிகழ்த்தும்.
- மனை வாங்கும் யோகம் உண்டு. சிலர் பாதி மனைகளை மனைகளை சட்டத்திற்கு உட்பட்டும், மீதி மனைகளை சட்ட புறம்பாகவும் வாங்கி குவிப்பார்கள்.
இனி குருவின் பார்வை பலனை காண்போம்
குருவின் 5ம் பார்வை பலன்:
மேஷ ராசிக்கு கும்ப குரு தனது ஐந்தாம் பார்வையாக 3-ஆம் இடத்தைப் பார்க்கிறார்.
- கைபேசி மிக நன்மை தரும். அதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என பிறருக்குச் சொல்லிக் கொடுப்பீர்கள்.
- குழந்தைகள் கல்வி விஷயமாக வீடு மாறக்கூடும். அல்லது வீட்டை விட்டு இன்னொரு வீடு வாங்குவீர்கள்.
- இளைய சகோதரர் கல்விக்கு உதவி வேண்டி வரும்.
- இளைய சகோதரருக்கு திருமணம் நடக்கும்.
- உங்களில் பலர் வானொலி தொலைக்காட்சி சம்பந்தமான வேலைகளில் சேர்வீர்கள்.
- கைபேசி பழுது நீக்கும் கடை தொடங்குவீர்கள். அல்லது கைபேசி கடையில் முதலீடு செய்வீர்கள்.
- பத்திரிகைத் தொழில் புரிவோர் பரிமளிப்பீர்கள்.
- 3-ஆம் இடம் என்பது வீரிய ஸ்தானம் இந்த காலகட்டத்தில் சிலருக்கு சில்மிஷம் செய்ய ஆசை வரும். ஆனால் அந்த ஸ்தானத்தைப் பார்க்கும் குரு அதெல்லாம் தவறு என்று அதட்டி அடக்கி விடுவார். பிறகு என்ன? ஜாதகர் நல்ல பிள்ளையாக மாறி விடுவார்.
குருவின் 7ம் பார்வை பலன்:
குரு தனது ஏழாம் பார்வையால் மேஷ ராசியின் 5-ஆம் இடத்தைப் பார்க்கிறார் 5-ஆம் இடம் என்பது புத்திர ஸ்தானம். இந்த ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மிக நன்மை விளையும். இவ்வளவு நாளாக பிள்ளை பேறுக்காக தவித்தவர்களுக்கு குரு குலம் தழைக்க செய்வார். மிக முக்கியமாக அரசியல்வாதிகள் குறிப்பாக பரம்பரை அரசியல்வாதிகள் எந்த மந்திரி பதவிக்காக காத்திருந்தார்கள் அது நிச்சயம் கிடைக்கும்.
- ஆரோக்கியம் மேம்படும். இவ்வளவு நாளும் தோல் வியாதி, கழுத்துவலி, ஒவ்வாமை போன்ற இம்சைகளை அனுபவித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதியும் நல்ல சுகம் பெறுவீர்கள்.
- குலதெய்வ வழிபாடு அதிகரிக்கும். குலதெய்வத்திற்கு விளக்கு, வெளிச்சம், அன்னதானம், நித்திய பூஜை, மந்திர உபாசனை போன்றவை நடைபெற பெரு முயற்சியும், செலவும் செய்து அவற்றை நிறைவேற்ற ஆவன செய்வீர்கள்.
குருவின் 9ம் பார்வை பலன்:
கும்ப குரு தனது 9ம் பார்வையால் மேஷ ராசியின் 7-ஆம் இடத்தைப் பார்க்கிறார். ஏழாமிடம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திருமணம் தான். இப்போது திருமண வயதில் உள்ள மேஷ ராசிக்கு திருமணம் செய்து வைத்து விட்டு தான் அடுத்த வேலையை பார்க்க செல்வார். வெளியூர், வெளிநாட்டில் வேலை செய்யும் சில வரன்கள் அமையும். சில வரன்கள் வெளிநாடு சம்பந்தமான வியாபாரம் செய்யும் குடும்பத்தில் அமைவர்.
- மேஷராசியினரின் வியாபாரம் மிக முன்னேற்றம் காணும்.
- நல்ல பங்குதாரர் கிடைப்பர்.
- மேலும் குரு 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் நல்ல உழைப்பாளியான வேலையாட்கள் கிடைப்பர்.
- இதனால் உங்கள் வியாபாரத்தில் நீங்கள் ஒரு கையெழுத்துப் போட்டால் நூறு கையெழுத்து போட்டது போல தொழில் பல்கிப் பெருகும்.
பரிகாரம்:
ஒரு முறை பிள்ளையார் பட்டி சென்று கற்பக கணபதியை வணங்கி விட்டு வாங்க.செவ்வாய் கிழமைகளில் துர்க்கையை துதித்து ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்க ..
குரு பெயர்ச்சி உங்களுக்கு கோலாகல நன்மையை தரும்….
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …