சகல சௌபாக்கியங்களையும் அருளும் சக்திவேல்
கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வேல் வேம்பநாடு எனும் உள்நாட்டு பிரிவில் விநோத சதுர்வேதிமங்கலம் என்ற பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டது.
வேதம் கற்ற அந்தணர்களுக்கு உரிமையாக இவ்வூர் வழங்கப்பட்ட காரணத்தால் அன்று தொடங்கி இன்றுவரை வேதபாட சாலை ஒன்று இங்கு செம்மையாக நடந்து வருகிறது.
பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் தன் மகளான சித்தவல்லி என்பவருக்கு சீதனமாக இப்பகுதி வழங்கப்பட்டதால் ஆரம்பத்தில் அந்த இளவரசியின் பெயரால் இவ்வூர் அழைக்கப்பட்டு காலப்போக்கில் பெயர் மருவி இன்றைக்கு சுத்தமல்லி என மாறிவிட்டது.
கருவறையில் மூலவராக மயில் வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சக்திவேல் தாங்கிய வண்ணம் சுப்பிரமணியசுவாமி சக்திமிக்க தெய்வமாக எழுந்தருளியுள்ளார். சகல சவுபாக்கியங்களையும் அருளும் இவரிடம் குறிப்பாக சந்தான பாக்கியம் கோரி வரும் பக்தர்களே அதிகம். மழலைப்பேறு கிட்டியதும் இங்கு வந்து முருகப் பெருமானுக்கு மனம் குளிர பாலாபிஷேகம் செய்து மகிழ்கின்றனர்.
உள்சுற்றில் கன்னிமூலை கணபதி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாதேவர், நவகிரக சன்னதிகள் அமைந்துள்ளன.
ஆண்டு முழுவதும் சித்திரை தமிழ் வருட பிறப்பு, பவுர்ணமி, கார்த்திகை, சஷ்டி நாட்களில் சிறப்பு வழிபாடு, வைகாசி விசாகம், ஆனி உத்திர நன்னாளில் வருஷாபிஷேகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, கார்த்திகை மகா தீபம், மார்கழி முப்பது நாட்கள், திருப்பள்ளியெழுச்சி, தைப்பொங்கல், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம், உள்ளிட்ட அநேக உற்சவங்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுகின்றன.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ருத்ர ஏகாதசி ஹோமம் தொடர்ந்து அன்னதானம் நடைபெறும். திருக்கார்த்திகை அன்று சுவாமி புறப்பாடாகி திருவீதி எழுந்தருளும் வைபவம் நடைபெறும்.
தினமும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. இத்தலத்து முருகனை சுற்றுவட்டாரத்தில் பலர் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
தலவிருட்சம் வில்வம்
அழகுக்கே இலக்கணமாய் திகழும் இத்தலத்திற்கு நீங்களும் ஒரு முறை சென்று அவனது பேரருளைப் பெற்று வாருங்கள்.
வழித்தடம்:
திருநெல்வேலி, ஜங்ஷன் ஆகிய இடங்களில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது பயண தூரம் 8 கிலோமீட்டர் பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உள்ளது.