Homeஜோதிட தொடர்ஜோதிட தகவல்கள் : மருத்துவ துறையில் சிறப்பு பெற உதவும் கிரக நிலைகள்

ஜோதிட தகவல்கள் : மருத்துவ துறையில் சிறப்பு பெற உதவும் கிரக நிலைகள்

மருத்துவ துறையில் வெற்றி தரும் கிரக நிலைகள்!

பல பிறவிகளாய் உடலெடுத்து உயிர் சுமந்து துன்பக் கடலில் மிதந்து ‘இறைவா இனி பிறவாமை வேண்டும்’ என்று வேண்டுதல் வெளிப்படுத்திய ஞானிகளுக்கும், யோகிகளுக்கும், சித்தர்களுக்கும் பிறவிப் பிணியை நீக்கி முக்தி எனும் கனியை வழங்கும் இறைவனும் ஒரு மாபெரும் மருத்துவரே!

ஒருவன் மருத்துவ ஞானம் பெற்று மகத்தான சாதனை புரிய வேண்டுமெனில் அவனது ஜாதகத்தில் மருத்துவ கிரகங்களான சூரியன், செவ்வாய், கேது மூவரும் பலம் பெற வேண்டும். இவர்கள் பலவீனம் அடைய கூடாது. இவர்கள் மூவருக்கும் பவர் தரக்கூடிய சந்திர பகவான் பலம் பெற்று திகழ வேண்டும்.

ஒருவருக்கு மருத்துவ ஞானம் மட்டும் தரக்கூடிய கிரக நிலைகளையும் மருத்துவத்துறையில் தன் தொழிலாக, ஜீவனாக கருதி அதில் வெற்றி பெறுவதற்கு உரிய கிரக நிலைகளையும் காண்போம்:

மருத்துவ துறையில் வெற்றி தரும் கிரக நிலைகள்

மருத்துவ ஞானம் தரக்கூடிய கிரக நிலைகள் 

ஒருவரின் ஜாதகத்தில் சந்திர பகவான் லக்னத்திற்கு 3, 5 ,7 ,11 ஆகிய இடங்களில் நின்று அவர் ஆட்சியாகவோ அல்லது உச்சமாகவோ இருந்தால் அவருக்கு மருத்துவத்துறை ஞானம் சிறப்பாக வரும்.

மேலும் சந்திர பகவான் நின்ற வீட்டோனும் சந்திரனுக்கு வீடு தந்தவரும் பலம் பெற வேண்டும். மேற்படி குறிப்பிட்ட ஸ்தானங்களில் சந்திர பகவான் வலிமையாக அமர்ந்துவிட்டால் அந்த ஜாதகனுக்கு மருத்துவத் துறையில் நுழைவதற்கு மருத்துவ சீட் தகுதியின் அடிப்படையில் கிடைத்துவிடும்.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி ஆகவோ அல்லது உச்சமாகவோ அமர்ந்து இருக்க வேண்டும் அல்லது பத்தாம் இடத்தில் சூரிய பகவான் சாரம் பெற்று அமர்ந்து இருக்க வேண்டும் அல்லது கேது பகவான் சாரம் பெற்று அமர்ந்து இருக்க வேண்டும்.

மேலும் செவ்வாய் பகவானுடன் கேதுவும் சேர்ந்து பத்தாம் இடத்தில் இருக்கவேண்டும். பலம் பெற்ற செவ்வாய் பகவான் ஒருவருக்கு மருத்துவத் துறையில் பெரும் ஞானத்தை தருவார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை

ஒருவரின் ஜாதகத்தில் சூரிய பகவான் பத்தாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சமாக அமர்ந்து இருக்க வேண்டும். அல்லது பத்தாம் இடத்தில் செவ்வாய் சாரம் பெற்று அமர்ந்து இருக்க வேண்டும். அல்லது கேது பகவான் சாரம் பெற்று பத்தாம் வீட்டில் அமர்ந்து இருக்க வேண்டும்.

மேலும் சூரிய பகவான் கேதுவுடன் சேர்ந்து பத்தாம் இடத்தில் நிற்க வேண்டும் சூரிய பகவான் நீசம் பெறாமல் பலம் பெற்று அமர்ந்து அவருக்கு எந்த விதத்திலாவது கேது, செவ்வாய் தொடர்பு இருந்து விட்டால் ஒருவருக்கு மருத்துவத் துறையில் சிறந்த அறிவை அள்ளித் தருவார் என்பது அனுபவத்தில் உணர்ந்த ஆனித்தரமான உண்மை.

ஜாதகத்தில் கேது பகவான் பத்தாம் இடத்தில் அமர்ந்து அந்த வீட்டோன் சூரிய பகவானாகவோ அல்லது செவ்வாய் பகவானாகவோ இருக்க அவர்கள் ஆட்சி உச்சம் பெற்று லக்கினத்திற்கு 4ல் அமர்ந்து பத்தாம் இடத்தை பார்த்தால் அவருக்கு மருத்துவ ஞானம் வரும்.

மேலும் 10 ஆம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து அவர் நின்ற சாரம் சூரியபகவான் ஆக வந்தாலும் அல்லது செவ்வாய் பகவானாக வந்தாலும் அல்லது கேதுபகவான் தன் சுய சாரத்தில் அமர்ந்து அவரை சூரியன் செவ்வாய் பார்த்தாலும் ஒருவருக்கு மருத்துவ அறிவு மலைபோல் உயர்ந்து இருக்கும்

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி சுக்கிரன் ஆகவோ அல்லது புதனாகவோ வந்து பத்தில் அமர்ந்தால் அல்லது நாளில் அமர்ந்து பத்தாம் இடத்தைப் பார்த்தாலும் இவர்களுடன் சூரியன், செவ்வாய், கேது தொடர்பு எந்தவிதத்திலாவது இருந்துவிட்டால் அவருக்கு மருத்துவ ஞானம் வரும்

ஒருவரின் ஜாதகத்தில் பத்தாம் அதிபதி குருபகவான் அல்லது சனி பகவான் வந்து பத்தில் அமர்ந்தால் அல்லது 4-இல் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்த்தாலும் இவர்களுடன் சூரியன் செவ்வாய் கேது இணைவு அல்லது சாரம் இவை சம்பந்தப்பட்டால் அவருக்கு மருத்துவ அறிவு மிகுந்து இருக்கும்

ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் பத்தாம் அதிபதியும் ஒருவராக வந்து அவருடன் சூரியன் செவ்வாய் கேது தொடர்பு இருந்துவிட்டால் (பார்வை இணைவு சாரம்) அவருக்கு மருத்துவ ஞானம் இயற்கையாகவே இருக்கும்

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!