புரட்டாசி மாத ராசி பலன்கள்
மேஷம்
(அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் வரை)
சென்ற சுமார் 15 மாதங்களாக, ராகுவினால் பீடிக்கப்பட்ட உங்களுக்கு, அந்தச் சாயா கிரகம் ஜென்ம ராசியை விட்டு. புரட்டாசி 21ம் தேதி விலகுவதும், அதே தருணத்தில் மற்றொரு நிழல் கிரகமான கேது, கன்னி ராசியில் பிரவேசிப்பதும், மிக முக்கிய கிரக மாறுதல்களாகும்.
சூரியனும், அனுகூலமாக சஞ்சரிப்பதால், ஆரோக்கியத்தில் சிறந்த அபிவிருத்தியை நீங்கள் காண முடியும்.நிரந்தர நோய்களுக்காகவும், வயோதிகம் காரணமாகவும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் மேஷ ராசியினருக்கு, மிகச் சிறந்த குணம் ஏற்படுவதை அனுபவத்தில் காண முடியும். உடல் உபாதைகள் விலகும்.
சுக்கிரன் மற்றும் செவ்வாயும் சாதகமாக சஞ்சரிப்பதால், குடும்பச் சூழ்நிலை நல்லபடி இருக்கும், இம்மாதம் முழுவதும் ! குரு பகவான் அனுகூலமற்று சஞ்சரிப்பதால், குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். ஆயினும், தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள இயலாது.
திருமணம் சம்பந்தமான முயற்சிகளில், தாமதம் ஏற்படும். சில தருணங்களில், தவறான வரன்களை நிச்சயித்துவிடும் வாய்ப்பும் உள்ளதால், எதிலும் நிதானமாகவும், தீர விசாரித்தும் முடிவெடுப்பது நன்மையளிக்கும்.
கேது, அனுகூல நிலைக்கு மாறுவதால், கேதுவின் நிலையினால், பழைய கடன்கள் ஏதும் இருப்பின், அவற்றை எளிதில் தீர்ப்பதற்கு வழிபிறக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் தீர்ந்து, மனதில் அமைதி நிலவும்.
செவ்வாய், சுபபலம் பெற்று வலம் வருவதால், பலருக்கு, சொந்த வீடு அமையும் வாய்ப்பும் உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், பாடல் பெற்ற திருத்தல தரிசனம், மகான்களின் ஆசி ஆகியவை கிட்டும்.
பலன் தரும் பரிகாரம்
சனி பகவான் வக்கிர கதியில் நீடிப்பதால், சனிக்கிழமைகளில் அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ மூன்று நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
நன்மை தரும் தினங்கள்
புரட்டாசி : 1, 2, 6-10, 14-17, 21-23, 27, 28.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 3லிருந்து 5 பிற்பகல் வரை. மீண்டும் 30 பிற்பகல் முதல்.
ரிஷபம்
(கிருத்திகை 2ம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2ம் பாதம் வரை)
சென்ற ஒரு வருடத்திற்கும் மேலாகவே, உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய மேஷத்தில் சஞ்சரித்தராகு, தற்போது லாப ஸ்தானத்திற்கு மாறியிருப்பது. மிகச் சிறந்த கிரக மாறுதலாகும். இதே தருணத்தில், பாக்கிய ஸ்தானத்தில் வக்கிர கதியில் சனி பகவான் நிலைகொண்டிருப்பதும், பல நன்மைகள் ஏற்படவிருப்பதைக் குறிக்கிறது. உங்கள் ராசிநாதனான சுக்கிரனும், சுப பலம் பெற்று விளங்குகிறார். ஆதலால், இம்மாதம் முழுவதும் வருமானம் போதிய அளவிற்கு இருக்கும்.
வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். ஆரோக்கியத்தில் சிறந்த அபிவிருத்தியைக் காணலாம், குரு சிறிது அனுகூலமில்லாமல் இருப்பதால், குடும்பத்தில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். சில வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. உத்தியோகம் காரணமாகவோ, அல்லது பிரசவம், உறவினர்களின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளினால், கணவர்- மனைவி தற்காலிகமாக பிரிந்திருக்க நேரிடும். விவாகம் சம்பந்தமான முயற்சிகளில் தடங்கல்களும், சிறு குழப்பமும் ஏற்பட்டு அதன் பிறகே வரன் அமையும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம்.
பலன் தரும் பரிகாரம்
தொடர்ந்து கந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, மகாலட்சுமி, அஷ்டோத்ரம், மீனாட்சி பஞ்சரத்னம் ஆகிய சக்திவாய்ந்த ஸ்லோகங்களைச் சொல்லி வரவும். முடிந்தபோதெல்லாம், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில் தீபம் ஏற்றிவரவும்.கைமேல் பலன் கிட்டும்.
நன்மை தரும் தினங்கள்
புரட்டாசி:1-4, 8-10, 15-18, 22-24, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 5 பிற்பகல் முதல் 7 மாலை வரை.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை, புனர்பூசம் 3ம் பாதம் வரை)
குரு,சுக்கிரன் இருவரும் அனுகூலமாக சஞ்சரிப்பதால், பணப் பற்றாக்குறை இராது. வருமானம் திருப்திகரமாக இருக்கும். இதுவரை உங்களுக்குச் சாதகமாக சஞ்சரித்து வந்த ராகு, தற்போது, ஜீவன ஸ்தானமாகிய மீன ராசிக்கு மாறியிருக்கும் தருணத்தில், ஜீவன காரகரான சனியும், வக்கிர கதியில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். அதனால், மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீண் செலவுகளும் கட்டுகடங்காது இருக்கும். குடும்பத்தில், வீண் செலவுகளும் அதிகரிக்கும்.
சிறு விஷயங்களுக்குக்கூட, அதிகமாக அலைய வேண்டியிருக்கும். குருவின் சுப பலத்தினால், விவாகமுயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூர்ப் பயணங்களின்போது, விழிப்புடன் இருங்கள். ஏனெனில், பணம், பொருட்கள் களவுபோக வாய்ப்புள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.
பலன் தரும் பரிகாரம்
1. திருநள்ளாறு அல்லது திருக்காள ஹஸ்த்தி தரிசனம் நன்மை தரும்.
2. தினமும் கோளாறு பதிகம் படித்து வரவும்.
3. சனிக் கிழமைதோறும், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றில், எள் எண்ணெய் தீபம் ஏற்றி வரவும்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி: 4-6, 10-12, 15-17, 21-24, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி:7 மாலை முதல், 9 மாலை வரை.
கடகம்
(புனர்பூசம் 4ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் வரை)
சுக்கிரன், சூரியன். செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நால்வரும் உங்களுக்கு அனுகூலமாக நிலைகொண்டுள்ளனர்! வருமானம் போதியளவிற்கு அளித்து உதவுகிறார். சுக்கிரன்!! இருப்பினும், பாக்கிய ஸ்தானத்திற்கு ராகு மாறுவதால், வரவிற்கேற்ற செலவுகளும் ஏற்படும். களத்திர ஸ்தானத்தில் சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால், மனைவிக்கு சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும்.
திருமண முயற்சிகளில், தடங்கல்களும், குழப்பங்களும் ஏற்படும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீப்பினை எதிர்பார்க்கலாம். இதற்குக் காரணம், சுக்கிரனே!
ராகு,குருவின் ராசியான மீனத்திற்கு மாறிவிட்டால், செலவுகள் அனைத்தும் சுபச் செலவுகளாகவே இருக்குமென “ஜோதிட அலங்காரம்” எனும் புராதன ஜோதிட நூல் கூறுகிறது. வெளிநாட்டில் பணியாற்றும் பெண் அல்லது பிள்ளை ஒருவரின் வருகை, குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.”ராகுவைப் போல் கொடுப்பாரில்லை!” என்பது ஜோதிடக் கலையின் வாக்காகும். அவர் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திற்கு மாறியிருப்பதாலும், கடக ராசிக்கு, மீனம் பாக்கிய ஸ்தானமாக இருப்பதாலும், எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. பூர்வீகச் சொத்தில் சிறு பாகம் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது, பலருக்கு!!
பலன் தரும் பரிகாரம்
அருகிலுள்ள திருக்கோயிலொன்றில் தீபத்தில் சிறிது எள் எண்ணெய் சேர்த்து வந்தால் போதும். ஒவ்வொரு துளி எண்ணெய்க்கும் மகத்தான சக்தி உள்ளது. உடனுக்குடன் பலனளிக்கும்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி:3-6, 12-14, 18-20, 25-27, 30.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி: 9 மாலை முதல் 11 இரவு வரை.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)
குரு,சுக்கிரன், சனி மற்றும் கேது ஆகிய நான்கு கிரகங்களும் சுப பலம் பெற்றுள்ளனர். பணப் பற்றாக்குறை இராது. திட்டமிட்டு செலவு செய்தால், உங்கள் பொருளாதார நிலையை சீர்செய்து கொள்ள முடியும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றிலிருந்து மீள்வதற்கு ஏற்ற தருணமிது.
புரட்டாசி 17ம் தேதியிலிருந்து, செவ்வாயும் அனுகூலமாக மாறுகிறார். மேலும், மேஷத்தில் அமர்ந்துள்ள குருவின் சுபப்பார்வை உங்கள் ஜென்மராசிக்கு ஏற்படுவது, விசேஷ நன்மைகளை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும்.
அஷ்டம ராசியில் ராகு அமர்வதால், வீண் அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் ஏற்படும். கூடிய வரையில், வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்வது நல்லது.
ஜென்மராசிக்கு, குருவின் பார்வை ஏற்படுவதால், குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். முயற்சிகள் வெற்றி பெறும். திருமண முயற்சிகளுக்கு, ஏற்ற மாதம் இந்தப் புரட்டாசி! கூடியவரையில் உடல் உழைப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்.கேதுவின் நிலையினால், வீண் செலவுகளில் பணம் விரயமாகும். சொந்த வீடு, நிலம் வாங்குவதற்கும் கிரகநிலைகள் சாதகமாக அமைந்துள்ளன. குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் மன நிறைவையளிக்கும்.
பலன் தரும் பரிகாரம்
ராகுவிற்குப் பரிகாரம் அவசியம்!
1. திருநாகேஸ்வரம் ராகு தரிசனம் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
2. காளஹஸ்தி திருத்தல தரிசனமும் ராகுவினால் ஏற்படும் தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரமாகும்.
3. வசதியுள்ள அன்பர்கள். கர்நாடக மாநிலத்திலுள்ள நாகமங்களா க்ஷேத்திர தரிசனம் கண்கண்ட பரிகாரமாகும். தவறாமல் மண் அகல் விளக்கை எடுத்துச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றத் தவறிவிடாதீர்கள்!!
அனுகூல் தினங்கள்
புரட்டாசி : 1,5-10, 14-17, 21,26-28.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 11 இரவு முதல் 13 பின்னிரவு வரை.
கன்னி
(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)
வரவும் செலவும் சமமாகவே இருக்கும். சேமிப்பிற்குச் சாத்தியக்கூறு கிடையாது. சுக்கிரன், அனுகூலமாக சஞ்சரிப்பதால், கடன் வாங்கவேண்டிய அவசியமிராது! சென்ற சுமார் பதினைந்து மாதங்களாக அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து, பல உடல் உபாதைகளுக்குக் காரணமாக இருந்த ராகு, புரட்டாசி 21ம் தேதி அந்த இடத்தை விட்டு, மீனத்திற்கு பிரவேசிப்பது, மிக நல்ல கிரக மாறுதலாகும்.
ஆரோக்கியத்தில் சிறந்த அபிவிருத்தியைக் காணலாம். நிரந்தர நோயாளிக்கும், வயோதிகம் காரணமாக, மருத்துவ சிகிச்சை பெற்று வரும் கன்னி ராசியினருக்கு, உடல் நலனில் மிக நல்ல குணம் ஏற்படும்.
இதுவரை கும்ப ராசியில் சாதகமாக இருந்துவந்த சனி பகவான், வக்கிர கதியில் செல்வதால், அதிக அலைச்சலும், உழைப்பும், வீண் கவலைகளும், உடலிலும், உள்ளத்திலும் அசதியை ஏற்படுத்தும். குரு பகவான்அனுகூலமில்லாத நிலையில் உள்ளதால், விவாக முயற்சிகளில் முடிவெடுக்க இயலாத குழப்பங்கள் ஏற்படும். சில தருணங்களில், தவறான வரனை நிச்சயித்துவிடும் நிலையும் ஏற்படக்கூடும். ஆகையால், இம்மாதம் திருமணம் சம்பந்தமான முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. நீதிமன்ற வழக்குகள் இருப்பின், இழுபறி நிலை நீடிக்கும்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமைதோறும், அருகிலுள்ள ஆலயமொன்றில், மாலையில், மண் அகலில் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். அளவற்ற பலன் கிடைக்கும்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி:2-4,8-11, 16-19,24-26, 30.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி: 13 பின்னிரவு முதல்,15 வரை
துலாம்
(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)
சப்தம ஸ்தானமாகிய மேஷராசியில் குரு அமர்ந்திருப்பது, மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கையைக்குறிக்கிறது. ஆனால், புரட்டாசி 15ம் தேதி சுக்கிரனும் அனுகூல நிலைக்கு மாறுவது மேலும் பல நன்மைகள் உங்களுக்கு இம்மாதம் ஏற்படவிருப்பதை முன்கூட்டியே தெரிவிக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, சென்ற சுமார் 15 மாதங்களாக களத்திர ஸ்தானத்தில் நிலைகொண்டிருந்த ராகு, மீனராசிக்கு மாறுவது, மிக நல்ல கிரக மாறுதலாகும். மேலும், மேஷ ராசியில் உள்ள குரு பகவானின் சுபப் பார்வை உங்கள் ராசிக்கு ஏற்படுவது, சிறந்த யோக பலனைக் குறிக்கிறது.
மனைவியின் உடல் உபாதைகள் குறைந்து, ஆரோக்கியத்தில் சிறந்த முன்னேற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் பார்க்கலாம். நிதி நிலைமை திருப்திகரமாக உள்ளது. மனைவியின் உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். வெளிநாட்டில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண் பற்றிய மகிழ்ச்சியான செய்திஒன்று, குடும்பத்தை குதுகலத்தில் ஆழ்த்தும். திருமண வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், நல்ல வரன் அமையும். அர்த்தாஷ்டக ராசியில் சனி பகவான் வக்கிர கதியில் திரும்பியுள்ளதால், சிறு, சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால் குணமாகும். அலைச்சல் அதிகரிக்கக்கூடும்.
பலன் தரும் பரிகாரம்
திருநள்ளாறு,திருக்கொள்ளிக்காடு தரிசனம் பலன் தரும்.
சனிக்கிழமைகளில் மாலை நேரத்தில் ஆலயத்தில் தீபம் ஏற்றுதல்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி:1-3, 8-10, 14, 15, 19-21, 25-27, 30.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி: 16 முதல், 18 முற்பகல் வரை.
விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)
வரவும், செலவும் கிட்டத்தட்ட சரிசமமாகவே இருக்கும். சேமிப்பிற்கு வாய்ப்பில்லை! புரட்டாசி மாதம் 20ம் தேதிவரை ராகுவினால் அனுகூலங்கள் ஏற்படும். புரட்டாசி 21ம் தேதி ராகு, பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய மீனத்திற்கு மாறுவதால், கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலனில் கவனமாக இருத்தல் மிகவும் அவசியம்.
ராசிக்கு, ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில், மேஷத்தில் குரு வக்கிர கதியில் இருப்பதால், நண்பர்களுடன் பழகுவதில் எச்சரிக்கை அவசியம். புரட்டாசி 13ம் தேதி சுக்கிரன், சிம்ம ராசிக்கு மாறுவதால், நெருங்கிய உறவினருடன் பகையுணர்ச்சி உண்டாகும்.
வீண் செலவுகளைத் தவிர்க்க இயலாது. திருமண முயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். கணவர் மனைவியரிடையே அந்நியோன்யம் குறையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் காரணமாக, நீதிமன்றம் செல்ல நேரிடும்.
பலன் தரும் பரிகாரம்
ஒருமுறை சோளிங்கபுரம் அல்லது பூவரசன்குப்பம் சென்று, நெய் தீபம் ஏற்றிவைத்து, நரசிம்மப் பெருமானை தரிசித்தால் போதும், சோதனைகள் பறந்தோடும். அவையே சாதனைகளாக மாறுவதை அனுபவத்தில் காண்பீர்கள்.
அனுகூல தினங்கள்
புரட்டாசி:3-5, 10-13, 15-17, 21-24, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 18 முதல், 20 இரவு வரை.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)
இம்மாதம் முழுவதும் உங்கள் ராசி நாதனாகிய, குருவும், சுக்கிரனும் அனுகூல நிலைகளில் நீடிப்பதால், பண வசதி சற்று தாராளமாகவே இருக்கும்! சிக்கனமாகச் செலவு செய்தால், சேமிப்பிற்குச் சாத்தியமாகும். குடும்பத்தில், சுப நிகழ்ச்சிகள் நிகழ்வதால், எப்போ தும் குதூகலம் நிரம்பியிருக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு, சுகப் பிரசவம் ஏற்படும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், சாதகமான தீர்ப்பினை எதிர்பார்க்கலாம். முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.
வெளியூர்ப் பயணங்களினால் ஆதாயம் ஏற்படும். திருமண முயற்சிகளுக்கு, மிகவும் சாதகமான மாதம் இந்தப் புரட்டாசி! அதிகம் பாடுபடாமல், சிறு முயற்சியிலேயே நல்ல வரன் அமையும். திருமணமான பெண்கள், கருத்தரிப்பதற்கு மிகவும் சாதகமான மாதமாகும்! குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்.
தன ஸ்தானத்தில் சனி பக வான் வக்கிர கதியில் இருப்பதால், எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளன. புரட்டாசி 21ம் தேதி, ராகு, சுக ஸ்தானத்திற்கு மாறுவதால், அதிக அலைச்சல் மேலிடும். புத்திர ஸ்தானத்தில் குருபகவான் வக்ரகதியில் இருப்பதால், குழந்தைகள் நன்கு படிப்பார்கள். திருமண முயற்சிகள் எளிதில் நிறைவேறும்.
பலன் தரும் பரிகாரம்
ராகு, சனி இருவருக்கும் பரிகாரம் அவசியம் சனிக்கிழமைகளில் மாலையில், அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிலோ அல்லது உங்கள் வீட்டுப் பூஜையறையிலோ 9 எள் எண்ணெய் தீபம் ஏற்றிவந் தால் போதும், ஒவ்வொரு துளி எண்ணெய்க்கும் மகத்தான சக்தியுள்ளது. மிக மிக எளிய பரிகாரமாக இருக்கின்றதே! என்று எண்ணிவிடாதீர் கள். பல சூட்சும கிரந்தங்களிலும், மகரிஷிகளினாலும் அருளப்பெற்ற அளவிடற்கரிய சக்தி பொருந்தியது.
நன்மை தரும் தினங்கள்
புரட்டாசி: 1. 2.6-11, 18, 19, 23-26, 30.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி: 20 இரவுமுதல் 22 வரை.
மகரம்
(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)
வருமானம் எவ்வித ஏற்றத் தாழ்வுமின்றி, ஒரே சீராக இருக்கும். ஜென்ம ராசியில், வக்கிர கதியில் சனி சஞ்சரிப்பதால், சிறு விஷயங்களுக்குக்கூட அதிக அலைச்சலும், உழைப்பும் இருக்கும். திருதீயை குருவினால், குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு, ராகுவினால் ஏற்பட்ட நிலை அர்த்தாஷ்டக தோஷம் நிவர்த்தியாவதால், குடும்பத்தில் பல மாதங்களாக மனதை அரித்துவந்த பிரச்னை, நல்லபடி தீரும்.
மகரம், சனியின் ஆட்சிவீடாக இருப்பதால், அவரால் ஏற்படும் பிரச்னைகள் கடுமையாக இருக்காது. புரட்டாசி 13ம் தேதியிலிருந்து, சுக்கிரன், சுப பலம் பெறுவதால், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம்.
மாதத்தின் கடைசி வாரத்தில், கேது, கன்னி ராசிக்கு மாறுவதால், குடும்பத்தில் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகச் சிந்தனைகளில் மனம் ஈடுபடும். குரு பகவானின் வக்கிர கதியினால் குழந்தைகளின் நலன் பற்றிய கவலை அதிகரிக்கும்.
பலன் தரும் பரிகாரம்
சக்தியுள்ள அன்பர்கள், திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, காளஹஸ்தி ஆகிய திருத்தலங்களில் ஏதாவது ஒன்றிற்குச் சென்று தரிசித்துவிட்டுவருவது சக்திவாய்ந்த பரிகாரமாகும். மற்றவர்கள், திருக்கோயில் ஒன்றில் சனிக்கிழமைதோறும் தீபத்தில் நெய் சேர்த்துவருதல் நல்ல பலனையளிக்கும்.
நன்மை தரும் தினங்கள்
புரட்டாசி:1-4, 8-10,15-17, 21-22, 26-28.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 23 முதல், 25 இரவு வரை
கும்பம்
(அவிட்டம் 3ம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3ம் பாதம் வரை)
ஜென்ம ராசியில் நிலைகொண்டிருந்த சனி பகவான், ராசிக்கு விரயஸ்தானமா மாகிய மகரத்திற்கு மாறியிருப்பதால், உடல் உபாதைகள் விலகும். வீண் அலைச்சல்கள், கடின உழைப்பு தேவையற்ற பிரயாணங்கள் ஆகியவை நீங்கும்.
புரட்டாசி 21ம் தேதி ராகு, தனஸ்தானமாகிய மீன ராசிக்கு மாறுவது, நன்மை தராது. குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே வீண் வாக்குவாதமும், ஒற்றுமையின்மையும் ஏற்பட்டு கவலையளிக்கும்.
குரு பகவான், திருதீய ஸ்தானமாகிய மேஷ ராசியில் நிலைகொண்டிருப்பதால், கைப்பணம் எப்படிக் கரைந்தது என்பது தெரியாமல் விரயமாகும். தசா, புக்திகள் அனுகூலமில்லாமலிருப்பின், கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். சிறுவிஷயங்களுக்குக்கூட, அதிகமாகப் பாடுபடவேண்டியிருக்கும்.
திருமண முயற்சிகளில் ஏமாற்றமே மிஞ்சும். எவ்வளவுதான் முயற்சித்தாலும் நல்ல வரன் அமைவது கடினம். நீதிமன்ற வழக்குகளில், இழுபறி நிலை நீடிக்கும். அஷ்டம ஸ்தானத்திற்கு கேது மாறவுள்ளதால், முயற்சிகளில் வீண் அலைச்சலும், தோல்வியும் ஏற்படும்.
பலன் தரும் பரிகாரம்
அருகிலுள்ள நவக்கிரகங்களின் சந்தியில், செவ்வாய்க் கிழமை மற்றும் சனிக்கிழமை தோறும் முறையே நெய் மற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவந்தால், தினகரனைக் கண்ட பனிபோல் துன்பம் மறைந்தோடும்.
நன்மை தரும் தினங்கள்
புரட்டாசி: 1, 5-7, 11-13, 18-24, 28, 29.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 25 இரவு முதல், 27 வரை.
மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி வரை)
உங்கள் ராசிக்கு நாயகரான குரு பகவான், வாக்கு, தனம் மற்றும் குடும்பம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் மேஷ ராசியில் சஞ்சரிப்பது போதிய அளவு வருமானம் இருப்பதைக் குறிக்கிறது. வீண் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். கணவர் மனைவியரிடையே பரஸ்பர அந்நியோன்யம் அதிகரிக்கும்.
புரட்டாசி 21ம் தேதி ராகு ஜென்ம ராசிக்கும், கேது, களத்திர ஸ்தானத்திற்கும் மாறுவது, நன்மை தராது! ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. சிறு விஷயங்களுக்குக்கூட, அதிக அலைச்சலும், கடின உழைப்பும் இருக்கும்.
லாப ஸ்தானத்தில், வக்கிர கதியில் சனி நிலைகொண்டிருப்பதால், நீண்டகாலமாகக் கவலையளித்துவந்த மிக முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி திரும்!! விவாகம் சம்பந்தமான முயற்சிகளில்,வெற்றி கிட்டும். குடும்பத்தில், சுப நிகழ்ச்சியொன்று நிகழும்.
புரட்டாசி 21ம் தேதி கேதுவின் நிலையினால், மனைவிக்கு சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சையினால், குணமாகும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பினை இப்போது எதிர்பார்க்கலாம்.
பலன் தரும் பரிகாரம்
ஜென்ம ராசிராகுவிற்கு பரிகாரம் செய்ய வேண்டியது அவசியம். மீனராசி, குரு பகவானின் ராசியாக இருப்பதால், ராகுவின் தோஷம் குறைகிறது (ஆதாரம்: ஜோதிட அலங்காரம் மற்றும் பூர்வ பாராசர்யம் போன்ற பழைமையான கிரந்தங்கள்.)
காளஹஸ்தி, திருநாகேஸ்வர தரிசனம் மிகச் சிறந்தது. சனிக்கிழமை தோறும் பிரதோஷகாலமாகிய மாலை நேரத்தில் (5.30-7.30) ஐந்து எள் எண்ணெய் தீபம் ஏற்றி வைப்பதும் மிகச் சிறந்த பரிகாரமாகும்.
நன்மை தரும் தினங்கள்
புரட்டாசி:1,2,6-11, 15-17,22-25.
சந்திராஷ்டம தினங்கள்
புரட்டாசி 28 முதல், 30 பிற்பகல் வரை.