ராகு திசை பலன்கள்
ராகு திசை ராகு புத்தி பலன்கள்
ராகு தசாவில் ராகு புத்தி 2 வருடம் 8 மாதம் 12 நாட்கள் நடைபெறும்.
ராகு பலம் பெற்று சுய புக்தி நடைபெறும் காலங்களில் மனதில் கண்மூடித்தனமான தைரியமும், எடுக்கும் காரியங்களில் வெற்றி, செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகள் உண்டாகும். வீடு மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம், குடும்பத்தில் தீராத பிரச்சனை தீரும் அமைப்பு ஏற்படும்.
ராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும், உற்றார்-உறவினர்களை விட்டும், குடும்பத்தை விட்டும், அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். மன நிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப்படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கும் நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.
ராகு திசை குரு புத்தி பலன்கள்
ராகு தசாவில் குரு புத்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
குரு பலமாக அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தனலாபம் கிட்டும். சமுதாயத்தில் பெயர், புகழ், செல்வம் செல்வாக்கு உயர கூடிய பாக்கியமும் உண்டாகும். சொந்த ஊரிலேயே வீடு மனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக்கூடிய யோகம் அமையும். பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்.
குரு பலவீனமாக அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்கக் கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம், நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை, வறுமை தொழில், உத்தியோகத்தில் அவப்பெயர், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
ராகு திசை சனி புத்தி பலன்கள்
ராகு தசாவில் சனி புத்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.
சனி பலமாக இருந்தால் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, சுபநிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல்படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி பலவீனமாக இருந்து புத்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல்நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களுடன் பகை, சோர்வு, எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்கள் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ராகு திசை புதன் புத்தி பலன்கள்
ராகு தசாவில் புதன் புக்தியானது 2வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.
புதன் பலமாக அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும், கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். உற்றார்-உறவினர் நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரணம், வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு, புதுவீடு கட்டி குடி போகும் பாக்கியம் உண்டாகும்.
புதன் பலவீனமாக இருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, உடல் பலவீனம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண் விரயம், பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகு திசை கேது புத்தி பலன்கள்
ராகு தசாவில் கேது புக்தியானது 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
கேது பலமாக இருந்து கேது நின்ற வீட்டதிபதி நல்ல நிலையில் அமையப் பெற்றால் வண்டி வாகனம், ஆடை ஆபரணம் சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு, தெய்வ தரிசனங்களுக்காக பயணம் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும். என்றாலும் ராகு தசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்லற வாழ்வில் ஈடுபாடற்ற நிலை திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம், எதிலும் சுறுசுறுபற்ற நிலை, பூமி,மனை ,வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
ராகு திசை சுக்ர புத்தி பலன்கள்
ராகு தசாவில் சுக்கிரபுத்தி 4 வருடங்கள் நடைபெறும்.
சுக்கிரன் பலமாக இருந்தால் அரசு வழியில் உயர்பதவிகள்,உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை, வண்டி வாகன யோகம், திருமண சுப காரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், வீடு மனை வாங்கும் அமைப்பு ஏற்படும். கலைத்துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.
சுக்கிரன் பலவீனமாக இருந்தால் பெண்களால் அவமானம், மர்மஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத்தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பண நஷ்டம், வறுமை, வண்டி வாகனங்களால் வீண் விரையம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும்.
ராகு திசை சூரிய புத்தி பலன்கள்
ராகு தசாவில் சூரியபுத்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.
சூரியன் பலமாக இருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகிக்கும் அமைப்பு, அரசு வழியில் பல விருதுகளைப் பெற கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல், நல்ல தைரியம், துணிவு, எதிரிகளை ஓட ஓட விரட்டக் கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும்-தொழில் வியாபாரத்தில் உயர்வு போன்ற நற்பலன்கள் ஏற்படும்.
சூரியன் பலவீனமாக இருந்தால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், தலைவலி, இருதயக் கோளாறு, காய்ச்சல், கண்ணில் பாதிப்பு, தந்தை தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம், குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.
ராகு திசை சந்திர புத்தி பலன்கள்
ராகு தசாவில் சந்திரபுத்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.
சந்திரன் பலமாக இருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல், திருமணம், பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல்கடந்து அந்நிய நாட்டுக்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், நீர் தொடர்புடைய தொழிலில் ஏற்றம், தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரம் உயரும்.
சந்திரன் பலவீனமாக இருந்தால் தாய்க்கு கண்டம் தாய், தாய்வழி உறவுகளுடன் பகை, மனக்குழப்பம், எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், நீர் தொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம், கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் போன்றவை உண்டாகும்.
ராகு திசை செவ்வாய் புத்தி பலன்கள்
ராகு தசாவில் செவ்வாய் புத்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.
செவ்வாய் பலமாக இருந்தால் பூமி, மனை வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தானிய சேர்க்கைகள் அதிகரிக்கும். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாகம் சம்பந்தமான உயர்வுகள் கிட்டும். நல்ல உடல் ஆரோக்கியம், எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.
செவ்வாய் பலவீனமாக இருந்தால் உடல் நலத்தில் உஷ்ணசம்பந்தப்பட்ட பாதிப்புகள், தலைவலி, காய்ச்சல், காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்பப்பை கோளாறு, மாதவிடாய் பிரச்சனை, சகோதரர்களிடையே பகை, அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரையம், பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோகத்தில் வீண் பழிகளைச் சுமக்கக்கூடிய நிலை ஏற்படும்.
ராகுவிற்குரிய பரிகாரங்கள்:
ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன், சரபேஸ்வரர், பைரவர் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது.
மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்வது, பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுவது, ராகுவுக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது. கோமேதக கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும்படி அணிவது சிறப்பு.
சனி தசா சுக்கிர புத்தி