ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 – துலாம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே !!!
இதுவரையில் 7-ம் இடத்தில் இருந்த “ராகு பகவான்” தற்போதைய பெயர்ச்சியில் 6-ம் இடத்திற்கு வருகிறார். உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்த ‘கேது பகவான்‘ தற்போதைய பெயர்ச்சியில் 12-ம் இடத்திற்கு செல்கிறார். இதனால் ஏற்படும் சுப அசுப பலன்களை பற்றி விரிவாக காண்போம்.
6-ல் ராகு
ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களை திக்கு திசையறியாது திணற வைத்ததுடன், பாடாய்படுத்திய ‘ராகுபகவான்’ இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்வதால் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். வீண் சந்தேகம், ஈகோவால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் மேம்படும்.
கடனில் ஒரு பகுதியைப் பைசல் செய்வீர்கள். புதிய டிசைனில் ஆபரணங்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும்.
12-ல் கேது
இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து விரக்தியின் விளிம்பிற்கே அழைத்துச் சென்ற ‘கேது’ இப்போது பனிரெண்டில் சென்று அமர்கிறார். இனி அந்த நிலையெல்லாம் மாறும். கோபம் குறையும். முகம் மலரும். இனி உடம்பு லேசாகும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். இனி இடம், பொருள், ஏவலறிந்து பேசுவீர்கள். பேச்சில் முதிர்ச்சித் தெரியும். ஆரோக்கியம் மேம்படும்.
முன்கோபம் விலகும். குடும்பத்தினரின் தேவைகளைப் புரிந்து கொள்வீர்கள். மகனுக்குத் தடைப்பட்ட திருமணம் முடியும். உடல் சோர்வு, அசதி நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தீர்களே! இனி அனைத்திலும் ஆர்வம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடையே சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போனாலும் ஒற்றுமை குறையாது. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும். குலதெய்வ பிராத்தனைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
ஸ்ரீ வராகர் மூலவராக இருக்கும் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்து வர சுப காரிய தடைகள் நீங்கும்.மேலும் நரசிம்மர் ஆலயத்துக்கு பிரதோஷ நாளில் சென்று வழிபாடு நடத்தினால் வாழ்வில் நிம்மதி கிடைக்கும்.
இந்த ராகு கேது மாற்றம் அதிரடி முன்னேற்றங்களை அள்ளி தருவதாக அமையும்.