ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 – தனுசு
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
குரு பகவானை ஆட்சி வீடாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே !!!!
4ல் ராகு -சுகஸ்தான ராகு
இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து எல்லோரையும் பகையாளியாக்கிப் பாடாய்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார்.
ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் குழந்தை இல்லாமல் தவிர்த்தவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் பிடிவாத குணம் விலகும். இனி உங்கள் பேச்சுக்குக் கட்டுப்படுவார்கள். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் இனிக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்தவர்களைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள், இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பக்குவமாய்ப் பேசி தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் இனி சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமாகிக் கொண்டிருந்த கல்யாணம், காதுகுத்து, சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் முடியும்.
ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு நரம்புக் கோளாறு, ரத்த அழுத்தம் ஏற்பட்டு குணமாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சலும், மனக்கசப்பும் வந்து நீங்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. கடன் பிரச்னை அதிகரிக்கும்.
10-இல் கேது -தொழில் கேது
இதுவரை உங்களின் ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்து ஓரளவு நல்ல பலன்களை தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் எதிலும் ஒரு பதட்டம், டென்ஷன் இருக்கும்.
நீங்கள் சும்மா இருந்தாலும் சிலர் உங்களைச் சீண்டிப் பாப்பார்கள். எடுத்த வேலையை நான்கைந்து முறை அலைந்து முடிக்க வேண்டியது வரும். அதனால் மன இறுக்கத்துக்குள்ளாவீர்கள். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள்.
குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் பெருமையடைவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சேமிக்க முடியாதபடி செலவுகளும் தொடரும்.
பலன்தரும் பரிகாரம்
தேய்பிறை அஷ்டமி அன்று கால பைரவரை வழிபடுங்கள்.
வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு நெய் விளக்கேற்றி எலுமி ச்சை மாலை சாத்தி வழிபடுங்கள். வாழ்வில் துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும்.
கும்பகோணம் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள ஆதிசேஷன் வழிபட்ட ஸ்ரீநாகேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீநாகேஸ்வரரையும் ஸ்ரீபெரிய நாயகியையும் வழிபட்டு வாருங்கள்.
மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள்; வாழ்வில் வெற்றி கிட்டும்.