ராகு கேது பெயர்ச்சி 2023 to 2025 – விருச்சிகம்
ஐப்பசி 13, அக்டோபர் 30ம் தேதி திங்கட்கிழமையில் திருக்கணிதப்படியும்,இதே ஐப்பசி 21, நவம்பர் 7 செவ்வாய்க்கிழமை வாக்கியப்படியும்,இராகுபகவான் மேஷ ராசியின் அஸ்வினியின் முதல் பாதத்திலிருந்து மீன ராசியின் ரேவதியின் 4 ஆம் பாத மீன ராசிக்கும்,கேது பகவான் துலாமிலுள்ள சித்திரை 3 ஆம் பாதத்திலிருந்து சித்திரை 2 ஆம் பாதமுள்ள கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாகின்றார்.
செவ்வாய் பகவானை ஆட்சி வீடாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே !!!!
5-இல் ராகு பகவான்
இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் அலைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடித்த ராகுபகவான்! இப்பொழுது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஐந்தாம் இடம் ராகுவுக்கு உகந்த இடமல்ல. என்றாலும் குரு வீட்டில் அமர்வதால் கெடுபலன்களை குறைத்து ஓரளவு நல்லதையே செய்வார்.
கணவன்-மனைவிக்குள் சந்தோஷம் நிலைக்கும். என்றாலும் தேவையற்ற சந்தேகங்களைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகளின் வருங்காலம் கருதிக் கொஞ்சம் சேமிக்கவும் செய்வீர்கள். அவர்களின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அநாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம்.
நாடாளுபவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவ்வப்போது மனதில் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். வீட்டில் அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். பயணங்களால் ஆதாயமுண்டு. கர்ப்பிணிகள் நெடுந்தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
11-இல் கேது பகவான்
இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவுகளையும், வீண் அலைச்சலையும், தூக்கமில்லாமலும் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றில் வந்தமருகிறார்.
வற்றிய பணப்பை நிரம்பும் கைமாற்றாக இருந்த கடனையும் தந்து முடிப்பீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வி.ஐ.பிகள், தொழிலதிபர்களின் நட்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். குடும்ப வருமானத்தை உயர்த்தக் கூடுதல் நேரம் ஒதுக்கி உழைப்பீர்கள். வேலை பார்த்துக்கொண்டே சின்ன முதலீட்டில் வியாபாரம் செய்ய முயல்வீர்கள். மனைவி நெடு நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்த தங்க ஆபரணம், ரத்தினங்களை வாங்கித் தருமளவிற்கு வசதியாக இருப்பீர்கள்.
இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். மூத்த சகோதரர் உதவுவார். அரைகுறையாக நின்று போன வீட்டைக் கட்டி முடித்து புது வீட்டில் புகுவீர்கள். பழைய பிரச்னைகளெல்லாம் ஒவ்வொன்றாகத் தீரும். போதிய காற்றோட்டம், இடவசதி, தண்ணீர் வசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்கள் இயற்கைச் சூழல்மிகுந்த வீட்டிற்குக் குடி புகுவீர்கள்.
பலன் தரும் பரிகாரம்
முருகப்பெருமானை செவ்வாய்க் கிழமைகளில் செந்நிற மலர்கள் சாத்தி வழிபட ராகுவால் ஏற்பட்ட தொல்லைகள் தீரும்.
பாதாளத்திலிருந்து தோன்றி ஆதிசேஷன் வழிபட்ட தலம் பாமணி. மன்னார்குடிக்கு வடக்கே 3 கி.மீ தொலைவிலுள்ள இத் தலத்தில், சுயம்பு லிங்கமாக அருளும் ஸ்ரீநாகநாதரையும் ஸ்ரீஅமிர்த நாயகியையும் தரிசியுங்கள்.
தாயை இழந்தவர்களுக்கு உதவுங்கள்; நல்லது நடக்கும்.
மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி எதையும் சாதிக்கும் வல்லமையை கொடுக்கும்.