திருவெம்பாவை பாடல் 10
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப்
பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந்
துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப்
பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
பாவை நோன்புக்காக ஒருங்கு கூடிய மகளிர், நீராடலுக்காக நீர்த்துறையைச் சென்று அடைந்து, அங்கு தமக்கு முன்பாக வந்திருந்த,
திருக்கோயிலில் பணி புரியும் மகளிரைக் கண்டு, அவர்களோடு சேர்ந்து, இறைவன் புகழைக் கூறித் துதிப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது.
பொருள்:
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப்
பொருள்முடிவே’
திருப்பாத கமலங்கள், கீழ் உலகங்கள் ஏழினுக்கும் கீழாக, சொற்களால் அளவிட முடியாதவையாக இருக்கின்றன .. அவனது
திருமுடியும், மேலுள்ள எல்லாப் பொருட்களுக்கும் மேலான, முடிவான இடமாய் விளங்குகிறது.
‘பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்’
அவன் திருமேனி ஒரு வகையானதல்ல .. மாதொரு பாகன் அவன்.
‘வேதமுதல் விண்ணோரும் மண்ணுந்
துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
வேதங்கள் முதலாக, விண்ணுலகத்தார், மண்ணுலகத்தார் யாவரும் துதித்தாலும், அவன் பெருமையை ஓதி முடிக்க இயலாது. நமக்குச் சிறந்த தோழன். தொண்டர்கள் நடுவில் இருப்பவன்.
‘கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப்
பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்’
குற்றமொன்றில்லாத குலத்தினராகிய, கோயில் பணிசெய்யும் பெண்களே !!. அவன் ஊர் எது?, பேர் எது?, உற்றவர் யார்?, அயலவர் யார்?, அவனைத் தக்கவாறு புகழ்ந்து பாடும் வகை என்ன ?..