திருவெம்பாவை பாடல் 12
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல்
வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான்
பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.
பொருள் :
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்
நம்மைப் பந்தித்த பிறவியாகிய துயர் நீங்குவதற்காக, நாம் சேர்ந்து, மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் இருப்பவன். இங்கு பிறவியாகிய துயர், வெப்பமாகக் கருதப்படுகின்றது .. அது நீங்க .. இறைவனாகிய தீர்த்தத்தில் மூழ்கி எழுதல் வேண்டும் என்பது பொருள்.
நற்றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்
சிற்றம்பலமாகிய தில்லையில், ஒரு திருக்கரத்தில் அனலேந்தி ஆடுகின்ற கூத்த பிரான்.
இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும்
படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய
விண்ணுலகு, மண்ணுலகு உள்ளிட்ட எல்லா உலகங்களையும், காத்தும், படைத்தும், நீக்கியும் விளையாடுபவனாகிய இறைவனது புகழைப் பேசி, வளையல்கள் ஒலிக்க, அணிந்திருக்கும் நீண்ட அணிமணிகள் அசைந்து ஓசை எழுப்ப,
அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும்
பொய்கை குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி
இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்
பொய்கையில் நிறைந்துள்ள, வண்டுகளால் மொய்க்கப் பெற்ற மலர்கள், நம் அழகிய கருங்கூந்தல் மேல் விளங்க, நீரைக் குடைந்து, நம்மை உடையவனாகிய இறைவனது பொற்பாதத்தைத் தொழுது ஏத்தி, பெரிய மலைச்சுனை நீரில் மூழ்கி நீராடுவாயாக. (குளத்துள் மூழ்கும் போது, பொய்கையின் மலர்கள் கூந்தலைச் சேருதல் இயல்பு. வண்டுகள் ஆர்க்கும் அந்த மலர்கள், கூந்தலைச் சேர்ந்ததை, ‘அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும்’ என்று வருணித்தார்.)