திருவெம்பாவை பாடல் 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத்
தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
பொருள் :
இந்த பாடல் அன்பு மேலீட்டால் உருகி நின்ற பெண்ணொருத்தியை பார்த்து நீராடும் பெண்கள் தமக்குள் பாடுவதாக
அமைந்திருக்கிறது ..
வாருருவப் பூண்முலையீர்
கச்சணிந்த அணிகளுடன் கூடிய கொங்கைகளை உடையவர்களே !!!..
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
ஒவ்வொரு சமயம் எம்பெருமான் திருப்பெயரை உரைப்பதில் ஆரம்பித்தவள், இப்போது எப்போதும், சிவபிரானின் புகழை ஓயாது உரைக்கும் வாயினள் ஆனாள் … மனம் உருகி, ஆனந்தம் மேலிட, விழிகளிலிருந்து நீங்காது பொழியும் நீர்த்தாரைகளுடன், பூமியின் மேல் விழுந்து,எழாது சிவபிரானையே வணங்குவாள். வேறொரு தெய்வத்தை வணங்கியறியாள்.
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ
ரெம்பாவாய்.
பெரிய தலைவனாகிய சிவபிரானின் பொருட்டு, ஒருவர் பித்தாகும் விதம் இவ்வாறோ ?!!!.. இவ்விதம் ஒருவரைப் பேரானந்தத்தில் ஆழ்த்தி ஆட்கொண்டருளும் சிவபிரானது திருவடிகளைப் புகழ்ந்து பாடி, அழகிய தோற்றமுடைய மலர்களால் நிரம்பப் பெற்ற, பொய்கையில் குதித்து நீராடுவோமாக !!