திருவெம்பாவை பாடல் 5
மாலறியா நான்முகனுங் காணா
மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக்
கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
பொருள் :
“மாலறியா நான்முகனுங் காணா
மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்”
சிவனாரின் திருவடியை அறிய வேண்டுமென்று திருமால் முயற்சி செய்தும் கை கூடவில்லை. அவரது திருமுடியைக் காண வேண்டும் என்ற பிரமனது முயற்சியும் வெற்றி பெற வில்லை. இவ்வாறு, திருமாலும் பிரமனும் அறிய முடியாத அண்ணாமலையாரை நாம் அறிவோம் என்று, பாலும், தேனும் போல் சுவையுடைய பொய்களைப் பேசும் வஞ்சகீ, உன்வாசல் கதவைத் திறவாய்.
“ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக்
கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேஎன்
றோல மிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்”
இப்பூவுலகினரும், வானுலகினரும், பிற உலகினரும், அறிவதற்கு அரிதாக இருக்கின்றவர் எம்பெருமான். அவரது அழகையும், நம் மீது கொண்ட பெருங்கருணையினால் நமது குற்றங்களை எல்லாம் பொறுத்து ஆட்கொண்டருளும் தகைமையையும் வியந்து
பாடி, சிவனே சிவனே என்று நாங்கள் முறையிடினும், அதை உணராது துயில் நீங்காது இருக்கின்றாய். இதுவோ வாசம் வீசும்,
சாந்தினால் ஒப்பனை செய்யப்பட்ட கூந்தலை உடைய உனது தன்மை !!!.