‘அம்பரீஷன்’ என்ற மன்னன் பெருமாளின் மீது மிகவும் பற்று கொண்டவர். அவர் கனவில் தோன்றிய திருமால், ‘எனது சுதர்சன சக்கரத்தை வழிபடு; அவர் எந்த நேரத்திலும் உனக்கு நல்ல பலனை கொடுப்பார்’ என்று கூறி மறைந்தார். அன்று முதல் ‘சுதர்சன சக்கரத்தை’ வழிபட ஆரம்பித்து ஏகாதசி விரதமும் இருந்து மறுநாள் துவாதசி அன்று காலை உணவு உட்கொண்டு விரதத்தை முடிப்பார் மன்னர்.
அவருடன் மக்களும் இவ்விரதத்தை செவ்வனே மேற்கொண்டனர். இந்த மன்னனை சோதிக்க விரும்பிய ‘துர்வாச முனிவர்’ ஒருநாள் அரண்மனைக்கு வந்து மன்னனுடைய ஏகாதசி விரதத்துக்கு இடையூறு செய்தார். அதோடு, ஒரு பூதத்தை தோற்றுவித்து மன்னனை விழுங்க உத்தரவிட்டார்.
ஆனால், அம்பரீஷன் தினமும் வணங்கிவரும் சுதர்சனர் மன்னரைக் காப்பாற்ற சீறிப் பாய்ந்து பூதத்தைக் கொன்றுவிட்டு அதை அனுப்பிய துர்வாச முனிவரையும் துரத்தினார். அதைக் கண்டு வெகுண்ட முனிவர் ஓடிச்சென்று பெருமாளை சரணடைந்தார். நாராயணன் அவரை அம்பரீஷிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்.
அதன்படியே முனிவர் செய்ய, அம்பரீஷன் சுதர்சனரை போற்றி பதினொரு சுலோகங்கள் பாடினார். அதைக்கேட்டு சுதர்சனர் அமைதியானார்.
திருமாலின் பஞ்ச ஆயுதங்களான சுதர்சனம், பாஞ்ஜசன்யம், கௌமோதகீ, நந்தகம், சார்ங்கம் போன்றவை அவர் பணிகளை செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கும். இந்த ஐந்தும் ஐந்துவிதமான ஆயுதங்களாகும்.
இந்த ஐந்து ஆயுதங்களில் முதன்மையானது சுதர்சனமாகும், பஞ்சாயுதங்களில் முதன்மையான சுதர்சனத்தை சக்கரத்தாழ்வார் என்றும் அழைக்கப்படுகின்றன.
எனவே ‘சுதர்சன சக்கரம்’ அல்லது சக்கரத் தாழ்வாரை தொடர்ந்து வழிபட்டு வந்தால், மானிடப் பிறவியில் ஏற்படும் நோய்கள், மன அமைதியின்மை எதிலும் தோல்வி, மரணபயம், பில்லி, சூனிய பாதிப்புகள், வியாபாரத்தில் நஷ்டம், கண் திருஷ்டி, முன்னேற்றத் தடை போன்றவை சட்டென விலகிச் செல்லும் என்பார்கள்.