குரு பெயர்ச்சி பலன்கள்-2021-2022-மிதுனம்
புதனின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!!!
இதுவரை உங்களுக்கு எட்டாம் இடமான மகரத்தில் இருந்து வந்த குருபகவான் இப்போது 9-ஆம் இடமான கும்ப ராசிக்கு பெயர்ந்து செல்கிறார்.
குருவின் விசேஷ பார்வைகளான 5, 7, 9-ஆம் பார்வை முறையே உங்கள் ராசியான மிதுனம், மூன்றாம் இடமான சிம்மம், ஐந்தாம் இடமான துலாம் ராசியில் பதியும்.
- மிதுன ராசியினர் நல்ல புத்திசாலிகளாக இருப்பர்.
- சிலர் ஒவ்வொரு சமயம் கோணங்கிபோல பேசுவர்.
- இவர்கள் குடும்பம் மிகவும் அமைதியாக இருக்கும்.
- இவருடைய இளைய சகோதரர் எதிலும் முதன்மையாகவும், அரசு செயல்கள் சார்ந்தும் இருப்பார்.
- தாய் நல்ல புத்திசாலியாக கணக்கு வழக்குகளில் வல்லவராக அமைவார்.
- பூர்வீகம் சற்று தள்ளி இருக்கும்.
- இவர்களில் பலர் சீருடை பணியாளர்களாக இருப்பர்.
- இவருடைய மனைவி தெய்வ பக்தி மிக்கவராக- வேலை செய்பவராக இருப்பார்.
- இவரது தந்தை வேண்டாத விளங்காத செயல் உடையவராக இருப்பார்.
கும்ப குருவின் பொது பலன்கள் :
மிதுன ராசிக்கு 7 மற்றும் 10 ஆம் அதிபதி. இதுவரையில் 8-ம் இடமான மகரத்தில் குரு மறைந்திருந்தார். இப்போது 9-ஆம் இடமான கும்பத்துக்கு மாறியுள்ளார்.
குரு 7, 10-ன் அதிபதியாகி ஒன்பதில் அமர்வது சிறப்பு! வெகு சிறப்பு!! 10-ம் அதிபதி 9-ல் இணையும்போது தர்மகர்மாதிபதி யோகம் தருவார்.
9-ஆம் இடம் என்பது தர்ம, ஆன்மீக ஸ்தானம்.அதில் குரு அமர்வதால், மிதுன ராசியினருக்கு தர்ம சிந்தனை மேலோங்கும் இதனால் தொழிலில் தங்கள் லாபத்தை குறைத்து, மலிவான விலையில் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்வர். அல்லது லாபத்தில் ஒரு பங்கை தர்மமாக வழங்குவர்.
இந்த கால கட்டத்தில் மிதுன ராசியினர் தங்கள் லட்சிய கனவு நிறைவேற தங்களின் அதிகபட்ச உழைப்பை கொட்டுவதன் மூலம் வியாபாரம் முன்னேற்றம் அடையும். மேலும் கொஞ்சம் நீக்கும் போக்காகவும் இருக்கப் பழகிக் கொள்வர். வியாபார ஸ்தலம், தொழிற்கூடத்தில் கண்டிப்பாக ஹோமம் செய்வீர்கள்.
இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த விஷயத்தையும் தெளிவான மனநிலையில் தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். தளராத முயற்சி எடுக்கும் புத்தி வரும்.ஒருவேளை அதிஷ்டானத்தில் குரு அமர்ந்திருப்பதால் அந்த யோகபலனே மனம், புத்தி ஆகியவற்றை கூர்மையாக்கும்.
குருவின் 5ம் பார்வை பலன்:
குரு தனது ஐந்தாம் பார்வையால் மிதுன ராசியை பார்க்கிறார். இது யோகமான அமைப்பாகும். குரு பார்வை பட்ட இடம் செழிக்கும்! கொழிக்கும்! துளிர்க்கும்! எனவே இதுவரையில் சோம்பித் திரிந்த மிதுன ராசியினர் குரு பார்வை பட்டவுடன் திடீர் உத்வேகம் பெறுவர். ஒரு பரபரப்பு, சுறுசுறுப்பு வந்து பற்றிக் கொள்ளும். உங்கள் ராசிநாதன் புதன் ஆதலால் முதலில் புத்திசாலித்தனம் கூர்மையாகும். எதையும் சட்டென்று கிரகித்துக் கொள்வார்கள். அதனால் படிப்பு ,வியாபாரம், எழுத்து, கணிதம் என எல்லாவற்றிலும் முன்னேற்றம் தெரியும். இதுவரையில் கணித பாடத்தில் சற்று பின்தங்கிய மிதுன மாணவர்கள் இப்போது நல்ல புரிதலோடு படிப்பர்.
மிதுன ராசியை குரு பார்ப்பதால் இவ்வளவு நாளும் இவர்களை வாட்டி வைத்துக்கொண்டிருந்த வியாதி நீங்கி, பொலிவு பெறுவர். முகத்தில் ஞான ஒளி பிரகாசிக்கும். இதற்கு காரணம் நீங்கள் எந்த துறையை சேர்ந்தவராக இருந்தாலும் உங்களை அந்த துறையில் தலைவராகி விடுவார்.எனவே உங்களையும் அறியாமல் முகத்தில் தனிக்களை தாண்டவமாடும்.
குருவின் ஏழாம் பார்வை பலன்:
மிதுன ராசியை கும்ப குரு தனது ஏழாம் பார்வையால் மூன்றாம் இடத்தை பார்க்கிறார். 3-ஆம் இடம் என்பது வீர,தீர, வீரிய, தைரிய, உபஜெய ஸ்தானம்.
இதனால், மிதுனராசியில், இதுவரையில் அரசியலில் மூழ்கி காணாமல் போய், பிறரால் மிதிக்கப்பட்ட தோல்வி வாழ்வில் இருந்தவர்கள் சட்ட உத்வேகம் பெற்று, ஒரு தம் பிடித்து அரசியல் உலகின் ‘லைம் லைட்டுக்கு’ வருவார்கள். இது சூரியனின் வீடு என்பதால் முதலில் அரசியல் எழுச்சியை கொடுக்கும்.
அரசுத் துறையில் வேலை மட்டுமே பார்த்துக்கொண்டு, மரியாதை இல்லாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். அதிகம் இல்லாவிட்டாலும், தங்கள் தகுதிக்கேற்ப மரியாதை, சன்மானம், புகழ், ஏற்றம், ஒரு கம்பீரம் என எல்லாம் கிடைக்கும்.
குருவின் 9-ஆம் பார்வை பலன்
குரு தனது 9ம் பார்வையால் மிதுன ராசியின் ஐந்தாம் வீட்டை பார்க்கிறார்.
இது மிகநல்ல பார்வை அமைப்பு.
இந்த அருமையான பார்வை மிதுன ராசியினருக்கு அருமையான குழந்தை பாக்கியம் தரும். கூடியமட்டும் நல்லவிதமாக பிரசவமாகும். தாய்-சேய் நலம் நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகள் அடம் பிடிக்காமல் சமர்த்தாக இருப்பர். குழந்தைகளின் ஆரோக்கியம் அருமையாக இருக்கும்.
ஆரோக்கியம், மருத்துவமனை, சத்துணவு, ஆரோக்கிய உணவு, குழந்தைகள் உணவு தயாரிப்பது என வேலைக்கு செல்வீர்கள். பங்கு வர்த்தகம் எதிர்பாராத நன்மைகளையும், மேலும் முதலீடு செய்வதையும் நடக்கச் செய்யும். பங்கு வர்த்தக அலுவலகத்தில் சிலருக்கு வேலை கிடைக்கும். பல மிதுன ராசியினர் காதல் வலையில் விழுவார்கள். சிலர் மதம், இனம் மாறியும் விரும்புவார்கள். எனினும் குரு பார்வை அழகாக, அம்சமாக திருமண பந்தத்தில் ஒருங்கிணைக்கும். இதுதான் குரு பார்வையின் விசேஷம்..
பரிகாரம்:
- ஒருமுறை திருக்கொள்ளிக்காடு சென்று பொங்கு சனி பகவானை வணங்கி வாருங்கள்.
- சனி கிழமைகளில் விநாயகரை வணங்குங்கள்.
- ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.
- குரு பெயர்ச்சி உங்களுக்கு குறைவில்லா நன்மையை தரும்…