இரவில் பிறந்த பெண்ணுக்கு லக்னம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்றின் இருப்பிடமும் பெண் நட்சத்திரமானால் ஜாதகிக்கு விசேஷமான நற்பலன்கள் உண்டாகும். பரணி, கிருத்திகை, ரோகிணி, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், உத்திராடம், அவிட்டம், ரேவதி ஆகியவை பெண் நட்சத்திரங்களாகும்.
ஒரு ஜாதகர் பகலில் பிறந்தவராகி பிறந்த நேரம் வளர்பிறையாகி, லக்னாதிபதி உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகர் சிறந்த கல்விமானாவார், பக்திமானாவார், சுபிட்சமும் சந்தோஷமும் பெற்று வாழ்வார். பதவி உயர்வும் உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இடங்களில் ராகு-கேது நீங்கலாக மற்ற 7 கிரகங்களும் இருந்தால் ஜாதகர் ஊக்கத்துடன் முன்னேறுவார். துணிவும், முண்டியடித்துக்கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளக் கூடிய திறமையும் பெற்றிருப்பார். (மேற்சொன்ன 6 வீடுகளிலும் இருந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை)
கும்பம், மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய வீடுகளில் ராகு-கேது நீங்கலாக மற்ற ஏழு கிரகங்களும் இருந்தால், அந்த ஜாதகர் சுபிட்சம் உடையவராகவும், அதிர்ஷ்டம் உடையவராகவும், மென்மைத்தன்மை வாய்ந்தவராகவும் இருப்பார். (மேற்சொன்ன 6 வீடுகளிலும் இருந்தாக வேண்டும் என்பது அவசியமில்லை)
எல்லாம் சுபக் கிரகங்களும், சுபக்கிரகங்களின் வீடுகளில், கேந்திர கோணங்களில் இருந்தால். ஜாதகர் செல்வம் குவிப்பார். மக்களுக்கு தலைமை தாங்குவார்.
பாபக் கிரகங்கள், பாபக் கிரகங்களின் வீடுகளில் இருந்தாலும் மேற்சொன்ன பலன்கள் உண்டாகும்.