திருக்கண்ண மங்கை
திவ்ய தேசம்-16
மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த ஸ்தலம் கும்பகோணம் – திருவாரூர் மார்க்கத்திலிருந்து சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. திருச்சேறையிலிருந்து 24 கிலோமீட்டர் தூரம். பகவான் திருவடியை அடைந்தால் மோட்சம் கிடைக்கும் என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்த திருக்கண்ணமங்கை கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தாலே மோட்சம் கிடைத்துவிடும் என்பது பெரியோர்களது வாக்கு.
வெட்டாற்றின் தென் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து நிலை இராஜகோபுரம் மூன்று பிராகாரங்களுடன்
மூலவர் பக்தவத்ஸலப் பெருமாள் நின்ற திருக்கோலம்.
தாயார் பூமிதேவி,(அபிஷேகவல்லி) என்று மற்றொரு பெயர்.
விமானம் உத்பல விமானம்.
தீர்த்தம் தர்சண புஷ்கரணி.
தலவிருட்சம் மகிழமரம்.
வருண பகவானுக்கும் ரோமச முனிவருக்கும் நேரிடையாகக் காட்சி கொடுத்த ஸ்தலம். எப்பேர்ப்பட்டவர்களும் தங்களுக்கு மோட்சம் கிட்ட வேண்டுமானால் இந்த ஸ்தலத்தில் ஒருநாள் இரவு முழுவதும் தங்கி , மறுநாள்பெருமாளைத் தரிசித்தால் போதும் என்பது ஐதீகம்.
சந்திரன் தனது குருவின் மனைவியோடு தொடர்பு கொண்டதால் குருவின் சாபத்திற்கு ஆளாகி தன் ஒளியெல்லாம் இழந்து கவலைப்பட்ட பொழுது பிரம்மதேவன் சந்திரனிடம் வந்து பூலோகத்திலுள்ள திருக்கண்ணமங்கை ஸ்தலத்திற்குச் அங்குள்ள தர்சண புஷ்கரணியில் நீராடி பக்தவத்ஸலப் பெருமாளைச் சரணடைந்தால் இழந்து கொண்டிருக்கும் ஒளியை மீண்டும் பெற முடியும் என்று வழிகாட்டினார்.
சந்திரனும் பிரம்மதேவர் சொன்னபடி இங்கு வந்து தங்கி பெருமாளைத் தரிசித்து குரு சாபம் நீங்கப் பெற்றான்.
நாதமுனிவரின் சீடரான திருக்கண்ண மங்கையாண்டான் இந்த ஸ்தலத்தில் ஆனிமாதம் திருவோணத்தன்று அவதரித்தார். லெக்ஷ்மி தேவியும் பகவானை நோக்கித் தவம் செய்த ஸ்தலம் என்பதால் ‘ லெஷ்மிவனம் ‘ என்ற பெயரும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு.
சிவபெருமான் இங்கு நான்கு பக்கங்களிலும் நான்கு உருவம் கொண்டு பக்தவத்ஸலப் பெருமாளைக் காவல் காத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. தாயார் சன்னதியில் தேன்கூடு ஒன்று உண்டு.அதற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது. கோயிலுக்கு அழகுபடுத்தும் விமானம் , மண்டபம் அரண்யம் , ஸரஸஸு , க்ஷேத்ரம் , ஆறு நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் இங்கு ஒன்று சேரக் கிடைப்பதால் இந்த ஸ்தலம் ‘ ஸப்தாபம்ருத க்ஷேத்ரம் ’ என்று புராணங்களில் மிகப்பெருமையாகச் சொல்லப்படுகிறது.
பரிகாரம் :
வாழ்க்கையின் பயனே மறுபிறவி வேண்டாம் என்பதுதான். மோட்சத்திற்குச் சென்று விட்டால் மறுபிறவி இல்லை. எனவே மோட்சத்தை வேண்டுபவர்கள் , குடும்பத் தொல்லைகளால் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழந்து கொண்டிருப்பவர்கள் , மறைமுக நோயினாலும் மற்றவர்கள் வெறுக்கத்தக்க நோயினாலும் பாதிக்கப்பட்டு திண்டாடிக் கொண்டிருப்பவர்கள் , யாருக்கும் தெரியாமல் , மனச்சாட்சிக்கு துரோகம் செய்து விட்டு பாவத்தைச் செய்கிறவர்கள் அத்தனைபேரும் இந்த ஸ்தலத்திற்குவந்து ஓர் இரவு தங்கி , மறுநாள் விடியற்காலையில் பக்தவத்ஸலப் பெருமானைத் தரிசித்தால் அவர்கள் ‘ மோட்சம் ‘ நிலைக்கு மரியாதையோடு சென்றடைவார்கள் என்பதுதான் இத்தலத்தின் பெருமை.
கோவில் இருக்கும் இடம்