மகரம் -உழைப்பே உயர்வு
(அவிட்டம் 1,2,திருவோணம் ,உத்திராடம் 2,3,4)
சனிபகவானை ஆட்சி வீடாகக் கொண்ட மகர ராசி அன்பர்களே!!! இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம சனியாக அமர்ந்திருந்த சனிபகவான் இனி உங்கள் ராசிக்கு 2-ம் இடத்திற்கு பாத சனியாக இடம் பெயர்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளாக கடுமையான பணிச்சுமையால் பல சோதனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள். சிலர் வேலை இழப்பால் செய்வதறியாது பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து வந்திருப்பீர்கள். பொருளாதாரப் பிரச்சினையால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு இருக்கும். பணப்பிரச்சினை ஒரு பக்கம் என்றால் ஆரோக்கிய பாதிப்பால் மருத்துவ செலவுகள் மறுபக்கம் என வீண் விரயத்தை தந்து கொண்டு இருந்திருக்கும். அது மட்டுமல்லாமல் குழந்தைகளின் படிப்பு, வண்டி, வாகனம், வீட்டு பராமரிப்பு செலவு என வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் மன விரக்தியில் இருந்திருப்பீர்கள். ஆனால் அந்த நிலை நீ மாறப்போகிறது. நிச்சயம் முன்பை விட நல்ல மாற்றத்தை இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு தரும் என நம்பலாம்.
உங்கள் ராசிநாதனாகிய சனி பகவான் ஆட்சி பெற்று இரண்டாம் இடத்தில் வலுவாக அமருவதால் பொருளாதாரம் உயரும். அதே சமயம் செலவும் அதிகரிக்கும்.உங்களை கண்டும் காணாமல் போனவர்கள் எல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த பயம் நீங்கும். உடல்நிலை சீராகும்.
வாக்கு ஸ்தானத்தில் சனி வருவதால் வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள்.முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்து இட வேண்டாம். அரச சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்கு பிறகுதான் முடியும். வண்டி, வாகன செலவுகள் வரலாம். சிலர் பழைய வண்டியை கொடுத்துவிட்டு புது வண்டி வாங்குவீர்கள்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு சிலருக்கு அமையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பிள்ளைகளுக்கு திருமணம் நிச்சயமாகும். கடன் பிரச்சனை தீரும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எதை செய்தாலும் சற்று யோசித்து செய்தால் வெற்றியை பெறலாம். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும்.
இல்லத்தரசிகளை பொறுத்தவரை மனக்குறைகள் நீங்கும். இதுவரை பிரிந்திருந்த கணவன் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு சமாதானமாகி வருவார். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை பணிச்சுமை குறையும். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களை பொறுத்தவரை கல்வி, வேலை என அனைத்திலும் வெற்றி கிட்டும்.
தொழில் செய்வோர் இனி உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி, வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கடையை விரிவுபடுத்தி நவீன மயமாக்குவீர்கள். தள்ளிப்போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். அரிசி பருப்பு, பாத்திரக்கடை, சலூன், ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன், கண்ணாடி கடை ,துணிக்கடை வைத்திருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி நல்ல பலனை தரும்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பெயர்ச்சி திருத்தலங்கள் -திருக்கொள்ளிக்காடு
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலை மாற்றம் ஏற்படும். அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களுக்கு மன நெருக்கடி தந்த மேலதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். நீதிமன்ற தீர்ப்பு சாதகமாகும். வேறு சில புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும், ஆனால் அலுவலகத்தில் எப்பொழுதும் தேவையில்லாத பேச்சை குறைப்பது நல்லது. சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். யாரையும் நம்ப வேண்டாம். கணினி துறையினருக்கு வேலை பளு அதிகரிக்கும். மெண்டல் ஸ்ட்ரெஸ் ஏற்படலாம்.
சனி பகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 4 ,8 ,11 இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டை பார்ப்பதால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .
சனிபகவான் உங்கள் ராசிக்கு 8ம் இடத்தை பார்ப்பதால் தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம். சில நேரங்களில் வேலையில் அலைச்சலும் மன உளைச்சலும் உண்டாகும். கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
சனிபகவான் உங்கள் 11ம் வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். திடீர் ஷேர் மூலம் அதீத லாபம் வரும்.
பலன் தரும் பரிகாரம்
தேய்பிறை அஷ்டமி நாளில் சேலம் தலைவாசல் அருகே ஆறகளூர், அஷ்ட பைரவர் ஆலயம் சென்று பைரவருக்கு அபிஷேகம் செய்து எட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.