திவ்ய தேசம் – திருத்தேரழுந்தூர் கோவில்
மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் சுமார் 21 கிலோமீட்டர் தூரத்திற்கு திருவழுந்தூர் என்னும் புண்ணிய ஸ்தலம் உண்டு. அழுந்தூர் , கிருஷ்ணாரண்யம் என்று வேறு பெயர்களும் உண்டு.
பொதுவாக கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண பெருமான் இரண்டு கைகளுடன் தான் காட்சி தருவார். இந்தக் கோயிலிலுள்ள கிருஷ்ணன் ருக்மணி , சத்ய பாமாவுடன் பசுக்கன்றுடன் , நான்கு கைகள் உடையவராக திருக்கோலம் கொண்டுள்ளார்.
காவிரிக் கரையின் ஓரத்தில் மூன்று நிலைகளுடைய கோபுரம் . இரண்டு பிராகாரங்களை உடையது.
மூலவர் தேவாதிராஜன் நின்ற திருக்கோலம்.
உற்சவர் ஆமருவியப்பன் ,
தாயார் செங்கமலவல்லி.
தீர்த்தம் தரிசன புஷ்கரணி.
விமானம் கருடவிமானம்.
பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரத்தில் இதுவும் ஒன்று. தர்மதேவதை , உபரி , சரவசு , காவேரி , கருடன் , அகத்தியர் ஆகியோர் இறைவனை நேரடியாகக் கண்டவர்கள்.
அகத்திய முனிவர் இத்தலத்தின் கீழ் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்போது அவரது தவத்திற்கு இடையூறாக ஊர்த்து வரதன் என்னும் அரசன் வானவெளியில் தேரைச் செலுத்தினான். இதையறிந்த அகத்தியர் தன் தவ பலத்தால் தேரை மேலே செல்லாமல் அழுத்தினார். தேரும் வானிலிருந்து கீழே விழுந்து மண்ணில் அழுந்தியது. அதனால் தேர் அழுந்தூர் என்று இந்த ஸ்தலத்திற்குப் பெயர்.
கண்ணபிரான் ஆசையோடு மேய்த்துக் கொண்டிருந்த பசுக்களை நான்முகனான பிரம்மன் , கண்ணனுக்குத் தெரியாமல் அந்த பசுக்களை இந்த ஸ்தலத்திற்கு கொண்டு மறைத்து விட்டான். பிரம்ம தேவனின் இந்த செய்கையைக் கண்ட கிருஷ்ணன் , தன்னுடைய சக்தியினால் ஏராளமான பசுக்களை மாயையாகப் படைத்து விட்டான். இதனால் கதிகலங்கிப் போன பிரம்மா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டான் . அதோடு கிருஷ்ணனே நிரந்தரமாக இந்த தலத்தில் தங்கி அருள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதிற் கேற்ப , பகவான் கிருஷ்ணன் ஆமருவியப்பன் என்ற திருநாமத்தோடு இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த ஸ்தலத்தில் பிறந்தார். திருமங்கையாழ்வார் , மணவாள மாமுனிவர் ஆகியோர் இந்த திருத்தலத்தைப் போற்றி பாடியிருக்கிறார்கள்.
பரிகாரம் :
காணாமல் போன நபர்கள் மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதற்கும் கைவிட்டுப் போன பொருள்கள் மீண்டும் வந்து சேர்வதற்கும் , தலைகனம் மிகுந்த அதிகாரிகளால் ஏற்படும் தொந்தரவுகளிலிருந்து விடுபடுவதற்கும் தங்களது வாழ்க்கையில் புகுந்து குறுக்கிட்டு பல்வேறு இன்னல்களைத் தந்து கொண்டிருக்கும் கயவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் இங்குவந்து தேவாதிராஜப் பெருமாளை மனமுருகிப் பிரார்த்தனை செய்து கோயில் விதிப்படி செய்ய வேண்டிய பரிகாரங்களைச் செய்தால் அத்தனைக் கஷ்டமும் தூள் தூளாகி ஆனந்தப் பெருவாழ்வை வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் அவரவர்கள் பிரார்த்தனைகளுக்கேற்ப பெருமாளின் நேரிடைத் தரிசனமும் கிடைக்கலாம்.
கோவில் இருப்பிடம் :