மீன லக்னம்
ராசி மண்டலத்தில் 12வது ராசி மீன ராசி. இது கால புருஷனின் பாதங்களைக் குறிக்கும். இது இரட்டை சுபாவமுள்ள ராசி. அதாவது சிர-பிருஷ்டோ தயராசி.இரு மீன்கள் எதிரும் புதிருமாக இருப்பதைப் போன்ற அமைப்புள்ளதென்று சொல்லப்படுகிறது. இது நீர் தத்துவமானது. பெண் ராசி அல்லது இரட்டை ராசி,உபய ராசி, சத்வ குணம் கொண்ட ராசி. இதன் அதிபதி குருபகவான். இதில் அடங்கியுள்ள நக்ஷத்திரங்கள் பூரட்டாதி4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி ஆகியவை.
மீன லக்னத்தில் பிறந்தவர்களின் குணங்கள்
உணர்ச்சிவசப்படக்கூடியவர். திடீர் திடீரென்று சோர்வுறக் கூடியவர்கள், பிறருடைய மனதையும், உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்துகொள்வார்கள். இவர்களுடைய திறமை அமுங்கியே இருக்கும். வெளிப்படாது. ஆகையால் பல இன்னல்கள் அல்லது தோல்விகளுக்கு ஆளாவார்கள்.
கபடு சூதற்ற வெகுளிகள், தெய்வ பக்தியும் மதப்பற்றும் உள்ளவர்கள், தான தருமம் செய்வதில் ஆர்வமுள்ளவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காட்சி அளிப்பார்கள்.தைரியம் குறைத்தவர்கள். கலை தைரியம் ஆர்வமுள்ளவர்கள். முகஸ் துதிக்கு ஆளாவார்களாதலால் பிறர் எளிதில் இவரைப் புகழ்ந்து பேசியே தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
கிரகங்களின் ஆதிபத்திய பலன்
சூரியன்
ரண, குண, ரோக, சத்துருஸ்தானமான 6ஆம் இடத்திற்கு அதிபதியானதால் அசுப ஆதிபத்தியம் ஏற்படுகிறது. இவர் குருவுக்கு நண்பர். மேலும் விதி, மதி, கதி என்ற முறைப்படி கதியும் லக்னம் ஆவதால் இவர் வலுத்தால் கெடுபலன்கள் ஏற்படாது. ஆனாலும் இவர் வலுத்தால் பலம் பொருந்திய விரோதிகள் ஏற்படுவார்கள். ஆனாலும் அவர்களை வெல்லும் சக்தி ஏற்படும்.
இவர் 2ஆம் இடத்திலிருந்தால் ஆரோக்கியமும் பொருளாதாரமும் கெடும். சனியுடன் சேர்ந்தால் பலவிதக் கஷ்டங்களைக் கொடுப்பார். 6ல் ஆட்சி பெற்றால் வணங்காமுடி என்ற பெயரெடுப்பார். ஆனால் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வார். பெருமைக்காக நேரம், காலம், பொருள் ஆகியவற்றை வீணாக்குவார்.
சந்திரன்
பூர்வ புண்ணிய ஸ்தானாதிபத்தியம் பெறுவதால் சுபராகிறார். இவர் வலுப்பது நல்லது.தனம், புத்தி, மேதாவிலாசம், தீர்க்க தரிசனம், அதிர்ஷ் டம் ஆகியவை ஏற்றம் பெறும். அறிவுள்ள சத் புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வபக்தியும் தெய்வ பலமும் கிட்டும்.
இவர் கெட்டால் மேலே கூறிய நற்பலன்கள் கிடைக்காது; இவர் 2ல் இருந்தால் தன யோகமாகும்; இவரும் செவ்வாயும் கடகத்திலிருந்தால் சந்திர தசை யோகத்தை அளிக்கும்.
செவ்வாய்
தனஸ்தானமான 2ஆம் இடத்திற்கும் பாக்கியஸ்தானமான 9ஆம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய் யோகாதிபதியாகிறார்; இவர் வலுத்தால், பணவசதி, அரசாங்க ஆதரவு, அதிர்ஷ்டம், உத்தியோகம் ஆகிய ஏற்றமான பலன்களை அளிப்பார்;
இவர் கெட்டால் நஷ்டம், உத்தியோகத்தில் சரிவு, பிதுரார்ஜி தம் கெடல், தந்தை, கஷ்ட நஷ்டம், குடும்பத்தில் குழப்பம் ஆகிய கெடுபலன்களை அளிப்பார்; இவர் குருவுடனும் சந்திரனுடனும் அல்லது இவர்களில் யாராவது ஒருவருடன் சேர்ந்தால் ராஜயோகமாகும்.
புதன்
4,7 ஆகிய இரண்டு கேந்திரங்களுக்கும் அதிபதியாவதால் உபய கேந்திராதிபத்திய தோஷம் பெற்றுப் பாபியாகிறார்; லக்னாதிபதிக்குச் சத்துருவுமாகிறார்; ஆனால் சுகம் வித்தை, தாயார், வீடு. வாகனம் ஆகியவைகளையும் வாழ்க்கைத்துணை,தொழிலில் கூட்டாளி, திருமண வாழ்க்கை, சுகம் ஆகிய முக்கிய மானவைகளுக்குக் காரகராகிறார்:
இவர் குரு,செவ்வாய் போன்றவர்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்று வலுத்தால் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்; இவர் 2.6.8 ஆகிய இடங்களில் இருந்தால் ஆரோக்கியம் கெடும்; பொதுவாகக் கோணமேறினால் கேந்திராதி பத்திய தோஷம் நீங்கி, நன்மை செய்வார்; இவர் 1 அல்லது 7ல் இருப்பது நல்லதல்ல: தோஷம் வலுக்கும்; 10ல் இருந்தால் படிப்பும் உத்தியோகமும் சிறப்பாக அமையும்.
குரு
லக்னத்திற்கும் 10ஆம் இடத்திற்கும் அதிபதியான குரு 10ஆம் இட ஆதிபத்தியத்தால் உபய கேந்திராதிபத்திய தோஷம் பெறுகிறார் என்பது பொதுக் கருத்து. ஆனால் லக்னாதிபதியானதாலும் லக்னம், கேந்திரம்,கோணம் இரண்டுக்கும் பொதுவானதாலும் லக்னாதிபத்தியம் வலுத்துச் சுபராகிறார். தனகாரகர் ஆனதால் அதிகாரம், தனம் ஆகிய இரண்டையும் அளிக்கவல்லவர். இவர் வலுத்தால் நீண்ட ஆயுள், நல்ல பண்புகள். தனவசதி, அதிகாரம், அந்தஸ்து, உத்தியோகம், அரசால் கவுரவம் ஆகிய நற்பலன்களை அளிப்பார்.
இவர் கெட்டால் மேலே குறிப்பிட்ட பலன்கள். குறிப்பாகப் பெயரும் பொருளாதாரமும் கெடும். இவர் கேந்திரங்களில் இருக்கக்கூடாது. மற்ற இடங்களில் இருக்கலாம் என்பது பல மேதைகளின் கருத்து. இவர் 4ல் இருப்பது சிம்மாசன யோகம். உயர்ந்த பதவி அதிகாரம் அந்தஸ்து கிட்டும்.. உபய லக்னத்திற்கு 7ஆம் இடம் பாதகஸ்தானமும், மாரக ஸ்தானமும் ஆவதால் இவர் 7ல் அல்லது லக்னத்தில் இருப்பது நல்லதல்ல. கோணமேறுவது விசேஷம்.
அரசியல், அரசு அலுவலகம் கல்வி, நீதிமன்றம், கஜானா, வருவாய்த்துறை, வங்கி, மருத்துவம், சமயம் ஆகிய துறைகளில் உத்தியோகம் அமையக்கூடும். கடலை, வாழை, தேன். கரும்பு தங்கம் புஷ்பராகம் ஆகியவற்றின் வியாபாரம் விருத்திபெறும்.
சுக்கிரன்
லக்னாதிபதிக்குச் சத்துருவான சுக்கிரன் 3,8 ஆகிய இரண்டு கெட்ட ஸ்தானாதிபத்தியம பெற்றதால் பாபியாகிறார். ஆனால் 8, 3 ஆகிய இரண்டு இடங்களும் ஆயுள் பலத்தைக் குறிப்பவை ஆகையால் இவர் வலுப்பது நீண்ட ஆயுளுக்கு முக்கியமாகும்.
இவர் வலுத்தால் பொருளாதாரம் நன்றாக இருக்காது.இவர் 8ல் ஆட்சி பெற்றால் சரள யோகமாகும். இவர் லக்னத்தில் உச்சம் பெற்றால் நீண்ட ஆயுள், பெயர், புகழ் கூடும். கோணங்களில் இருந்தாலும் நல்லது. கேந்திரங்களும் ஏற்ற இடங்கள் ஆகும்.
சனி
விரயஸ்தானமான 12ஆம் இடத்திற்கும் உபய லக்னத்திற்கு மாரகஸ்தானமான 11ஆம் இடத்திற்கும் அதிபதியான சனி பாபியாகிறார். லாபஸ்தானம் முக்கியமான இடம். இவர் கெடக் கூடாது. இவர் வலுத்தால் வருமானம் கூடும்.
இவர் கெட்டால் வருமானக் குறைவும் உடல் நலக் குறைவும் ஏற்படும். இவர் 3, 5, 6, 8, 11ல் இருப்பது நலம். மேஷத்தில் சனி இருக்க, மகரத்தில் செவ்வாய் இருக்க தனயோகம். காரணம் தனலாபாதிபதி பரிவர்த் தனை மட்டும் அல்ல. சனிக்கு நீசபங்க ராஜயோகமும் ஏற்படுகிறது. தொழில் மேன்மை, வீடு, வாகனம், ஆளடிமை, அரசியலில் முன்னேற்றம் ஆகியவைகளை அளிப்பார்.
சுபர் அசுபர் விளக்கம்
சுபர்
சந்திரன் – பஞ்சமாதிபதியானதாலும், செவ்வாய் – 9ஆம் ஆதிபத்தியமுடையதாலும் சுபர் என்று எல்லா நூலாசிரியர்களும் ஒருமித்த கருத்தினைத் தெரிவித்துள்ளனர்.
யோகாதிபதி
சந்திரன் 5ஆம் ஆதிபத்தியத்தாலும், செவ்வாய் 9ஆம் ஆதிபத்தியத்தாலும், குரு 10ஆம் ஆதி பத்தியத்தாலும் யோகாதிபதிகளாகின்றனர்.
ஜாதக அலங்கார நூலரசிரியர்
“மேவும் செவ்வாய், மதி சுபராம் விளங்கு யோகம் குருவால்”
என்று சொல்லியதால் செவ்வாய், சந்திரன் இருவரும் சுபர் யோகம் குருவால் என்றாகிறது தாண்டவமாலை ஆசிரியரோ செவ்வாயும் குருவும் சேர்ந்தால் தர்மகர்மாதிபதி யோகமாகும் என்றும், குரு தனிப்பட்ட முறையில் யோகம் தரமாட்டார். செவ்வாயுடன் சேர்ந்தால்தான் யோகம் தருவார் என்கிறார்.
சந்திர காவிய நூலாரிசியரோ குருவைப் பாபியென்றும் செவ்வாயுடன் கூடில் நல்லவரென்றும் சொல்கிறார். பொதுவாக எந்த லக்னத்திற்கும் 9, 10-க்குடையவர்கள் கூடில் தர்மகர்மாதிபதி யோகமாகும். இவருடன் மற்றொரு கோணாதிபதியான 5-க்குடையவர் கூடி எங்கிருந்தாலும் யோகமாகும். இந்தப் பொது விதிப்படியும் சந்திரன், செவ்வாய், குரு மூவரும் சம்பந்தத்தால் யோகரதிபதிகளாவார்.
பாபிகள்
சுக்கிரன்: 3,8 ஆகிய கெட்ட ஆதிபத்தியம் பெற்றதால் முழுப்பாபியாகிறார்.
புதன்: 4,7 ஆகிய கேந்திரங்களுக்கதிபதியானதாலும் பாதக,மாரக ஸ்தானங்களுக்கு அதிபதியானதாலும் புதன் பாபியாகிறார்.
சூரியன் : ரண, சத்துரு ஸ்தானமான 6ஆம் இடஆதிபத்தியம் பெற்றதால் சூரியன் பாபியாகிறார்.
சனி : உபய லக்னத்திற்கு 11ஆம் இடம் விசேஷ மாரகஸ்தானமானதாலும் 11க்கும், விரயஸ்தானமான 12 க்கும் ஆதிபத்தியம் பெறும் சனியும் பாபியாகிறார்.
சந்திர காவிய நூலாசிரியர் குருவையும் பாபி என்கிறார். பெரும்பாலோர் இதனை ஏற்றுக் கொள்வதில்லை.
மாரகாதிபதிகள்
பாபிகள் என்று சொல்லப்பட்ட புதன், சனி, சூரியன் ஆகியோர் மாரகம் செய்யக் கூடியவர்கள்.
இரண்டாம் ஆதிபத்தியம் பெற்றாலும் பாக்கியாதிபதியான செவ்வாய் கொல்லமாட்டார் என்று தாண்டவ மாலை கூறுகிறது.
சனி 11ஆம் ஆதிபத்தியத்தாலும் புதன் 7ஆம் ஆதிபத்தியத்தாலும் வலுத்த மாரகாதிபதிகள் ஆகின்றனர் . மற்றவர்கள் தாங்களிருக்கும் இடத்திற்கேற்ப,மாரகம் செய்யும் வலிமையைப் பெறுவர். அதாவது மாரகஸ்தானம் அல்லது கொடிய ஸ்தானத்தில் இந்த நால்வரில் எவர் இருக்கிறாரோ அவர் மாரகம் செய்யும் வலிமையைப் பெறுவார்.
ஜாதக அலங்காரம் செவ்வாயை மாரகன் என்றும் மாரகாதிபதிகளில் எவர் வலிமை பெற்றுள்ளார் என் பதை முடிவு செய்ய வேண்டும் என்கிறார்.
சந்திரகாவிய நூலாசியர் செவ்வாய் கொல்ல மாட்டார் என்று சொன்னாலும் சனி, சூரியன், புதன் இவர்களுடன் பாபியான 3, 8க்குடைய சுக்கிரனையும் மாரகன் என்று சொல்லுகிறார்.
ஆக சனி, புதன், சூரியன், சுக்கிரன், ராகு ஆகிய ஐவரும் மாரகம் செய்யக் கூடியவர்கள். சனியைப்போல் பலன் கொடுக்கும் ராகுவும் மாரகம் செய்யக் கூடியவர்.
முக்கிய நிகழ்ச்சிகள் நிகழும் காலம்:
மாதுர் தோஷம்(தாய்க்கு கண்டம்)
- ராகு, கேது, குரு சனி இவர்களுக்கு 4,7,8,10-ல் உள்ளவர்கள் புக்திகள்.
- சந்திரனுக்கு 4,8ல் உள்ளவர்கள் புத்தி அல்லது சந்திரனுடன் கூடியவர் புக்தி.
- மிதுனம், கன்னியில் உள்ளவர்கள் புக்தி, மேற்படி தசாபுத்திக் காலங்களில் மாதாவுக்குக் கஷ்’- நஷ்டங்களோ அல்லது கண்டாதிபிணிகளோ அல்லது மரணமோ அல்லது மாதாவுடன் விரோதமோ, பிரிவினையோ ஏற்படும்.
பிதுர் தோஷம்(தந்தைக்கு கண்டம்)
- ராகு, குரு, சுக்ரன். சனி, சூரியன் இவர்களுக்கு 8. 9.10 ல் உள்ளவர்கள் புத்தி.
- ரிஷபம், கடகம், சிம்மம், விருச்சிகத்தில் உள்ளவர்கள் தசை.
- மேற்படி தசா புக்திக் காலங்களில் தகப்பனாருடன் விரோதமோ, பிரிவிளையோ அல்லது அவரால் கஷ்ட நஷ்டங்களோ அல்லது அவருக்கே கஷ்ட-நஷ்டங்களோ, கண்டாதிபிணிகளோ, மரணமோ கூடும்.
திருமணம் நடைபெறும் காலம்
- சந்திர தசை குரு, புதன், சுக்ரன், சூரிய புக்திகள்.
- குரு தசை குரு, புதன், சுக்ரன், சூரிய புக்திகள்.
- புத தசை புதன், சுக்ரன், சூரியன், ராகு, குரு புக்திகள்.
- ராகு தசை குரு. புதன், சுக்ரன், சூரியன் புக்திகள்
மேற்படி காலங்களில் திருமணம் நடப்பதோ, மனைவி மூலம் அனுகூலங்கள், ஆதாயங்கள் கிடைப்பதோ மனைவிக்குச் சுபபலன்களாக நடப்பதோ சொல்ல வேண்டும்.
களத்திர தோஷம்(திருமண தோஷம்)
- சந்திர தசை – ராகு,சனி,சுக்கிர புத்திகள்
- குரு தசை – ராகு,சனி,சுக்கிர புத்திகள்
- புதன் தசை – ராகு,சனி,சுக்கிர புத்திகள்
- ராகு தசை – ராகு,சனி,சுக்கிர புத்திகள்
மேற்படி தசா புக்திக் காலங்களில் மனைவியால் கஷ்ட நஷ்டமோ, மனைவியுடன் விரோதமோ அல்லது ‘பிரிவினையோ அல்லது மனைவிக்கே கஷ்ட நஷ்டங்கள் அல்லது கண்டாதி பிணிகள் அல்லது மரணமோ நேரலாம்.
புத்திர பாக்கியம்
- சந்திர தசை, ராகு தசை, குரு தசை,
- புத தசை- குரு,புதன்,சுக்கிரன், சூரிய புக்திகள்.
மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மீனத்தில் உள்ளவர்கள் தசை ஆகிய தசா புக்திகளில் புத்திரன் அல்லது புத்திரி பிறப்பதோ அல்லது அவர்களால் ஆதாய அனு கூலங்களைப் பெறுவதோ அல்லது அவர்களுக்கு யோகபலன்களோ, சுப நிகழ்ச்சிகளோ நேரும்.
புத்திர தோஷம்(குழந்தைகளுக்கு கண்டம்)
- சந்திர தசை, ராகு தசை, குரு தசை, புத தசை – ராகு சனி, சுக்ர புக்திகள்.
மேற்படி தசாபுக்திக் காலங்களில் புத்திரர்களால் கஷ்ட நஷ்டமோ. அல்லது அவர்களுடன் விரோதமோ பிரிவிளையோ அல்லது அவர்களுக்குக் கஷ்ட நஷ்டமோ அல்லது கண்டாதி பிணிகளோ அல்லது மரணமோ நேரலரம்.
சகோதர தோஷம்(உடன் பிறப்புகளுக்கு கண்டம்)
- 2, 6, 8, 10, 11ல் உள்ளவர்களின் தசாபுக்தி காலங்களில் சகோதர சகோதரிகளால் கஷ்ட நஷ்டமோ அவர்களுடன் விரோதம் அல்லது கண்டா திபிணிகளோ அல்லது. பிரிவினையோ அல்லது மரணமோ நேரும்.
மாரக காலம்(மரணம் சம்பவிக்கும் காலம்)
புததசை, ராகுதசை, சூரியதசை, சனிதசை,சுக்ர தசை-சூரியன், செவ்வாய், ராகு, குரு, சனி, சுக்ர புக்திகள்.
மேற்படி தசா புக்திக் காலங்களில் கஷ்ட நஷ்டங் கள், அல்லது கண்டாதிபிணிகள் அல்லது மரணம் போன்ற கெடுபலன்கள் நடக்கலாம்.
யோகம் தரும் கிரக அமைப்புகள்
- லாபாதிபதி சனி 12-ல் இருந்தாலும் சுப பலனை அளிப்பார்.
- சந்திரன், செவ்வாய் 2, 5ஆம் இடம் என்று பரிவர்த்தனையானால் சந்திர தசை யோகம்,
- சந்திரன், செவ்வாய், புதன் மூவரும் மகரத் தில் கூடினால் தன வாகன யோகம்.
- குரு தனுசில் ஆட்சியானால் யோகம்.
- சந்திரன் உச்சம், சூரியன் ஆட்சி. புதன் உச்சம், சுக்கிரன் துலாத்தில், குரு தனுசில் இருக்க, ராஜயோகம்.
- குருவும், செவ்வாயும் கூடினால் யோகமுண்டு.
- 3ஆம் அதிபதி 3, 6, 8ல் இருக்கயோகம்.
- சூரியன், புதன், சுக்ரன் மூவரும் 3,6,8ல்கூடில் யோகம்.
- சூரியன். சுக்ரன், சனி மூவரும் 3,6,8ல் கூடில் யோகம்.
- சந்திரன்,செவ்வாய், புதன்,குரு நால்வரும் 4ல் கூடில் யோகம்.
- லக்னத்தில் குரு, 9ல் செவ்வாய், 12ல் சனி என்று மூவரும் ஆட்சியானால் யோகம்.
- லக்னத்தில் சனியும் சந்திரனும், 11-ல் செவ்வாய் 6ல் சுக்ரன் இருக்க சுக்ர தசை யோகம்.
- கும்பத்தில் சனி, மகரத்தில் செவ்வாய் யோகம்.
- குரு, செவ்வாய், சந்திரன் மூவரும் எங்கு கூடினாலும் ராஜயோகம்,
- குரு கடகத்தில் இருத்தால் சுபபலன்களை அளிப்பர்
- குரு 4 அல்லது 9ல் இருந்தால் வித்தை, தனம்,அந்தஸ்து ஆகியவை வலுக்கும்.
- 2,9 அல்லது 11 இல் செவ்வாய் இருப்பது நல்லது.
- 3அல்லது 5ல் சந்திரன் இருந்தால் தனம், புத்திரம் இரண்டையும் அளிப்பார்.