மாசி மாத கிரகநிலைகள் 2026
சூரியன்
சூரியன் எல்லா வருட மாசி மாதத்திலும் கும்ப ராசியில் தான் இருப்பார். சூரியன் அரசாங்கத்தை குறிப்பார். இந்த 2026 மாசி மாதத்தில் அவர் நிறைய கிரகங்களுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார். சூரியன் கூடவே சனி+புதன்+சுக்கிரன்+ராகு என கூட்டணியாக உள்ளனர். இதில் சூரியனுக்கும் சனிக்கும் ராகுவுக்கும் இடையே யுத்தம் நடக்கும் அளவிற்கு பகை உண்டு. எனவே அரசாங்கமும், அரசு அதிகாரிகளும், அரசு ஊழியர்களும், விழி பிதுங்கி தலைசுற்றி போய்விடுவர்.
இதில் குருவும் தன் பார்வையை இந்த கிரக கூட்டணியில் பதிக்க அரசாங்கம் நீதிமன்றத்தின் கேள்விக் கணைகளுக்கு உள்ளாவார்கள். அரசுக்கு எதிராக தீவிரமான போராட்டங்கள் நடக்கும். அரசு அதிகாரிகள் இந்த மாதம் எந்த முடிவுக்கும் தலையாட்டாமல் இருந்தால் பிழைத்தார்கள்.
செவ்வாய்
இவர் ஆளுங்க கட்சியை குறிப்பார். இவர் மாசி மாதம் 9ம் தேதி வரை மகர ராசியில் உச்சமாக மிக பலத்துடன் இருப்பார். எனவே இந்த நாட்களில் இவரை யாரும் அசைத்துப் பார்க்க இயலாது. இவர் வைத்தது தான் சட்டமாக இருக்கும். மாசி 9ம் தேதிக்குப் (பிப்ரவரி 21) பிறகு இவர் கும்ப ராசிக்குள் நுழைந்து அதி கிரக கூட்டணிக்குள் பிரவேசித்து விடுவார்.
அங்கிருக்கும் சனி ராகுவிடம் சற்றே அடங்கித்தான் போகவேண்டும். எனவே ஆளும் கட்சி அடக்கி வாசிக்கும். கூட்டணி கட்சிகளுடன் நட்பு கரம் கொடுத்தாக வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடும். அதுவும் மாசி 19ம் தேதி சுக்கிரன் எனும் கூட்டணி கட்சி கிரகம் உச்ச நிலைக்கு சென்று அமர்ந்து விடும் எனவே ஆளும் கட்சி வேற வழியே இல்லாமல் கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
எனவே இந்த மாதம் 9ம் தேதிக்குள் ஆளும் கட்சி தனது முடிவுகளை விருப்பங்களை எண்ணங்களை திட்டங்களை முடிவெடுத்து உறுதியாக்கி விட வேண்டும்.
புதன்
புதன் எப்போதும் எதிர்க்கட்சியைக் குறிப்பார். இவர் இந்த மாசி மாதம் முழுவதும் கும்ப ராசியில் நிறைய கிரகங்களோடு சேர்ந்திருப்பார். இதிலிருக்கும் ராகுவோடு சேர்வதால் நிறைய குயுக்தியான திட்டங்களை எதிர்க்கட்சி தீட்டும். கூட்டணி கட்சிகளை எவ்விதம் தங்கள் வசப்படுத்தலாம் என யோசித்து சில பல கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடித்துவிடும். கூடிய மட்டும் விரைவாக தங்கள் கட்சி விஷயங்களை முடித்து விட வேண்டும். ஏனெனில் ராகுவும் சனியும் எதிர்க்கட்சியான புதனுக்கு தவறான உருப்படாத யோசனைகளை கூறி குழப்பி அடிப்பார்கள்.
குரு
இவர் காலபுருஷனின் 3ம் இடத்தில் தனது சுயசாரத்தில் சென்று கொண்டு உள்ளார். இவர் தனது ஒன்பதாம் பார்வையால் இந்த கிரக சேர்க்கையை பார்ப்பதால் நீதிமன்றம் அரசியல் நிகழ்வின் போக்கிரித்தனங்களை கண்டித்து சற்று ஒழுங்குபடுத்துவார். இந்த மாதம் பணியாளர்கள், மாணவர்கள், மாத சம்பளம் பெறுவோர், சேவை அமைப்புகள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், திருமண முறிவுகள், கோவில்கள், தொழிற்சாலைகள், சமையல், வெளிநாட்டு விஷயம் என இவ்வித விஷயங்களில் தலையிட்டு பல நல்ல தீர்ப்புகளை கோர்ட் வழங்கும். தீவிரவாதிகளிடம் கடுமை காட்டும். இந்த மாதம் குருவின் பார்வை சனி சூரியன் ராகு புதன் சுக்கிரன் என இந்த கிரகங்களை பார்வையிடுவதால் பெரும் கடுமையான நிகழ்வுகள் தடுக்கப்படும்.
சுக்கிரன்
இது கூட்டணி கட்சியை குறிக்கும். இந்த மாதம் இது ஆளுங்கட்சிக்கு தலையையும் எதிர்க்கட்சிக்கு வாலையும் காட்டிக் கொண்டிருக்கும். அதிலும் மாசி 19ம் தேதி மீன ராசிக்கு நகர்ந்து உச்சமாகிவிடும். அப்புறம் கூட்டணி கட்சியை கையில் பிடிக்க முடியாது. தங்களது கோரிக்கையை எந்த கட்சி நிறைவேற்றுகிறதோ அவர்களுடன் தான் கூட்டணி என கரார் காட்டுவர். பிறகென்ன இவர்கள் சொல்வதற்கு ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் மண்டையை ஆட்டத்தான் வேண்டும்
சனி
இவர் 11 எனும் அரசியல் ஸ்தானாதிபதி இவர் கும்ப ராசியில் ஆட்சியாக உள்ளார். தனியாக இருந்தால் பரவாயில்லை, ஓடியா ஓடியா என எல்லா கிரகங்களையும் அழைத்து எல்லோரும் ஒன்னா சேர்ந்து கும்மியடிப்போம் என்று கூத்தாடுகிறார். ஆக இந்த கிரக இணைவுகளால் அரசியலில் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடக்கும்.
நினைத்தே பார்க்க முடியாத கட்சிகள் இணைந்து கொள்ளும்.இதுவரையில் நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம் என்று சொன்னவர்கள் பிரிந்து விடுவர். சேரவே சேர மாட்டார்கள் ஜென்ம பகை என்று கூறி வந்தவர்கள் ஒன்றாக சேர்ந்து விடுவர்.
ராகு
கால புருஷனின் அரசியல் ஸ்தானத்தில் ராகு எனும் எதிர்மறை தீவிரவாத வேண்டாத்தனம் செய்யும் கிரகம் உள்ளது. இவர் தனது சுயசாரமான சதய நட்சத்திரத்தில் செல்கிறார். கவனியுங்கள் இதே சதயம் எனும் ராகு சாரத்தில் இந்த மாதம் கிரகங்கள் நகருகின்றன.
செவ்வாய்
மாசி 18 முதல் 30 வரை சதயம் எனும் ராகு சாரத்தில் செல்கிறார். எனவே நிறைய எதிர்மறை ரகசிய தன்மையுடன் ஆளும் கட்சி நடந்து கொள்ளும்.
புதன்
மாசி 1 முதல் 23 வரை சதயம் எனும் ராகு சாரத்தில் செல்கிறார். எனவே எதிர்க்கட்சியான புதனும் நிறைய எதிர்மறை தன்மையோடு குயுத்தியாக நடந்து கொள்ளும்.
சுக்கிரன்
மாசி 1 முதல் 11ம் தேதி வரை சதயம் எனும் ராகு நட்சத்திரத்தில் பயணம்.எனவே கூட்டணி கட்சிகள் கொஞ்சமும் தர்ம நியாயம் இன்றி கொடூரமாக நடந்து கொள்ளும். .
கேது
இவர் தனது சுயசாரத்தில் காலபுருஷனின் ஐந்தாவது வீடான சிம்மத்தில் செல்கிறார். சிம்மம் என்பது கால புருஷனின் ஆரோக்கியஸ்தானம். அதில் நுண்கிருமிகளை குறிக்கும் கேது, தனது சாரத்தில் செல்வது சற்று யோசனையாக இருக்கிறது. மேலும் இந்த கேதுவை நிறைய கிரகங்கள் அதாவது சூரியன் சனி ராகு புதன் சுக்கிரன் என அனைவரும் பார்க்கிறார்கள்.இதன் தாக்கம் ரொம்ப மோசமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. மேலும் செவ்வாயின் பார்வையும் கேதுவுக்கு கிடைக்கிறது. இதனால் நிறைய இடங்களில் தொற்று கிருமிகளின் தாக்கம் வர கூடுமோ என அச்சம் ஏற்படுகிறது.
இந்த மாசி மாதம் கிரக நிலைகள் ரொம்ப பயமூட்டுவதாக தெரிகிறது. இறைவன் தான் இந்த உலகை காத்து ரட்சிக்க வேண்டும்.
எல்லோரும் துர்க்கையை, காளியை மகிஷாசுரமர்த்தினியை வணங்கவும். மற்ற மதத்தினரும் சிறப்பு வழிபாட்டை உலக நன்மைக்காக மேற்கொள்ளவும்.














