பாரபவ தமிழ் புத்தாண்டு பலன்கள் 2026:விருச்சிக ராசி
பூமிகாரனாகிய செவ்வாயை ஆட்சி வீடாகக் கொண்ட விருச்சக ராசி அன்பர்களே! இந்த வருடம் உங்கள் ராசிக்கு அஷ்டமம் குருவாக 8ம் இடத்தில் இருந்த குருபகவான் ஜூன் 1ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 9ம் இடம் வருகிறார். அக்டோபர் 31ம் தேதி முதல் அதிசாரமாக குருபகவான் 10மிடம் வருகிறார். பிறகு வக்ரகதியில் ஜனவரி 24ம் தேதி முதல் மீண்டும் 9ம் இடம் வருகிறார்.
வருடம் முழுவதும் சனிபகவான் உங்கள் ராசிக்கு 5ம் இடம் சஞ்சாரம் செய்கிறார்.
டிசம்பர் 5ம் தேதி முதல் ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கும் கேது பகவான் பத்தாம் இடத்தில் இருந்து 9ம் இடத்திற்கும் செல்கிறார்கள்.
இதனால் இந்த வருடம் தொழில் துறையில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் உண்டு. உடல் உபத்திரங்கள் நல்ல மருத்துவத்தின் பெயரில் சரியாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண பாக்கியம் உண்டு. குழந்தைகள் நல்ல முன்னேற்றம் பெறுவர். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். படித்த மாணவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடத்தில் வேலை மாற்றம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல உறவுகள் ஏற்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கருவுற்ற பெண்கள் முடிந்தவரை ஆபத்தான பயணங்களை தவிர்க்கவும்.
வீடு, மனை, புது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. கடன் சுமை குறைய ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வழிபடவும்.
பலன் தரும் பரிகாரம்
செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கும் நெய் தீபம் வைக்கவும். மொத்தத்தில் இந்த வருடம் 70 சதவீதம் நற்பலன்களை நல்கும் வருடமாக இருக்கும்.