விபத்தை ஏற்படுத்தும் ஜாதக கிரக அமைப்புகள்
சனிதசை நடக்கும் காலங்களில் ராகு- கேது செவ்வாய் புக்தி, ராகு தசையில் கேது சனிபுக்தி, கேது தசையில் செவ்வாய், புதன் ராகு புக்திகளில் வாகனங்களைச் செலுத்துவதில் கவனத்துடன் இருக்க வேண்டும். ராகு தசையில் சனி புக்தி நடக்கும்போது எதிர்பாராத வாகன விபத்தும், மருத்துவச் செலவுகளும் ஏற்படக் கூடும்.
நம் வாழ்நாளில் ‘அக்னி மாருத யோகம்’ ஏற்பட்டாலும், ஜாதகத்தில் அந்த அமைப்பு இருந்தாலும் விபத்துகளால் பாதிப்புகள் உண்டாகலாம்.
ராகு- கேது, செவ்வாய், சனி, பலம் இல்லாத சந்திரன், பாவரோடு கூடிய புதன் ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதும் சேரும் போதும், துர்ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போதும் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும்.
இப்படியான விபத்துகளால் பாதிப்பு ஏற்படும் வகையில் கிரக நிலைகள் அமைந்த ஜாதகக் காரர்கள், ஒவ்வொருமுறையும் பயணம் கிளம்புமுன் குலதெய்வத்தை வழிபடுவது அவசியம் ஆகும். அதேபோல் பாம்பன் சுவாமிகள் அருளிய, சக்தி வாய்ந்த குமார ஸ்தவத்தை மூன்று முறை பாராயணம் செய்து வேலவனை வணங்கி விட்டுச் செல்லலாம்.
அதேபோல் சுதர்சன வழிபாடும், காளிதேவி வழிபாடும் நன்மைபயப்பதாகும். ஆஞ்சநேயரை மனதார வழிபட்டுச் சென்றால் பயணத்தில் வழித்துணையாக வந்து நம்மைக் காப்பார் அஞ்சனை மைந்தன்