பூசம் நட்சத்திரம்
27 நட்சத்திரங்களின் வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும். இதன் அதிபதி சனிபகவானாவார் இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்சு எலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது. இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் ஹீ,ஹே,ஹோ,ட ஆகியவை தொடர் எழுத்துக்கள் கொ, கெள ஆகியவையாகும்.
- கணம்-தேவ கணம்
- யோனி-மேஷம்
- நாடி-மத்திம நாடி
- அதிபதி-சந்திரன்
- கிரகம்-சனி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு உண்டானால் அது குணமாக ஏழு நாட்கள் ஆகும். உடல் நலம் பெற குரு மந்திரத்தை கூற வேண்டும்.
- எண்ணை தானம் செய்தல் நன்று.
- அரச மரத்தை வழிபட வேண்டும்
- பிறக்கும்போது ஜாதகத்தில் சனி சந்திரனுடன் சேர்ந்து ஆறு எட்டில் இருந்தால் இரண்டரை வயது குழந்தையின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்
- அடிக்கடி காய்ச்சல் வரும் லக்னத்தில் சனி உச்சமாக இருந்தால் மன்னரைப் போல் வாழ்வார்கள்
- அந்த உச்ச சனியை குரு பார்த்தால் பலரும் மதிக்கத்தக்க வகையில் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்
- சனி 4-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்
- சனி தனித்து எட்டில் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அடிக்கடி அடிபடும் ஆனால் நீண்ட ஆயுள் உண்டு இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது குறை இருக்கும்
- சனி ராகுவுடன் லக்னத்தில் இருந்தால் இல்வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படும்
குண அமைப்பு
பூச நட்சத்திரத்தின் அதிபதி சனிபகவான் என்பதால் மனதில் ஏதோ ஒரு சோகம் எப்போதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடியையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர், புகழை எளிதில் பெறுவார்கள். மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும். மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொருத்தவரை மிகவும் எளிமையானதாக இருக்கும்.
நன்னெறியும், ஒழுக்கமும் தவறாதவர்கள். தயவு தாட்சண்யம் பார்ப்பதில் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விருந்தோம்பலுக்கும் இவர்களுக்கு நிகர் இவர்களேதான். வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள். சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன்கோபம் வந்து கெடுத்து விடும். சுய கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்தில் இருந்தாலும் ராஜ்யத்தை பிடிப்பார்கள். முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
குடும்பம்
காதல் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிகம் இருந்தாலும் பரிசுத்தமானவர்கள். தாத்தா, பாட்டி, தாய், தந்தை, மனைவி,பிள்ளைகள், பேரன், பேத்திகள் என கூட்டுக்குடும்பமாக வாழ விரும்புவார்கள். குடும்பத்தில் எந்த ஒரு விசேஷம் என்றாலும் அது தன்னால்தான் நடந்ததாக பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களைக்கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பார்கள். உற்றார், உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல் தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள். குடும்பத்தலைவன் என்ற பொறுப்பை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றாலும் அமிர்தம் என்றாலும் விஷம் என்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள். நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.
தொழில்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை, கவிதை, கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும். இளமை வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு. சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதை ஆசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள். எவ்வளவு சாதித்தாலும், சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனே இருப்பார்கள். இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடல், எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.
பூசம் நட்சத்திர கோவில்
நோய்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காசநோய், ரத்த சோகை, மார்பக புற்றுநோய், தோல் வியாதி, மஞ்சள் காமாலை, விக்கல், இருமல் போன்றவற்றால் உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.
தசா பலன்கள்
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சனி திசை வரும். சனி திசை மொத்தம் 19 வருடங்கள் ஆகும். என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதை அறியலாம். சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களுடைய கருத்து வேறுபாடு, கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் இருந்தால் நன்மை அடைய முடியும்.
இரண்டாவதாக வரும் புதன் தசை காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதன் தசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை பெற முடியும்.
மூன்றாவதாக வரும் கேது திசை காலங்களில் உடல்நிலை பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனை, எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை, எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
நான்காவதாக வரும் சுக்கிர திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது. சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி, வீடு, வாகனச் சேர்க்கை போன்றவை ஆகும். பொருளாதாரம் உயர்வடையும்.
சூரிய தசையும் சந்திர தசையும் ஓரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். சமுதாயத்தில் ஒரு உயர்வான நிலையிலேயே இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும்.
பூச நட்சத்திரக்காரர்களின் தலவிருட்சம் அரசமரமாகும் இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணி அளவில் வானத்தில் பார்க்க முடியும்.
பூச நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம், பெயர் வைத்தல், மொட்டை அடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி, வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோளுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துன்னல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள்
திருச்சேறை: கும்பகோணம் திருவாரூர் சாலையில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாரநாத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருத்தலம்.
ஒழுந்தியாபட்டு:திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழியில் உள்ள அரசி நாதர், பெரிய நாயகி குடிகொண்டுள்ள தலம்.
கோனேரிராஜபுரம்: கும்பகோணம் காரைக்கால் சாலையில் s.புதூர் என்ற ஊரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உமா மகேஸ்வரர், மங்களாம்பிகை அருள்பாலிக்கும் தலம்.
திருச்சி
விருதுநகர், அருப்புக்கோட்டைக்கு தென்மேற்கில் உள்ள திருமேனிநாதர், துணைமாலை நாயகி குடிகொண்டுள்ள தலம்.
மேற்கூறிய கோவில்களின் ஸ்தல விருட்சம் அரச மரமாகும். ஆதலால் இக்கோவில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்.
குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் பங்குகொண்டு வழிபாடு செய்வது சிறப்பு.
கூற வேண்டிய மந்திரம்
ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம்
மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச சுவாஹா
பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி, ஆகிய ஆண்-பெண் நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்யக்கூடாது.
