HomeBlogநட்சத்திர ரகசியங்கள்:பூரம் நட்சத்திரம்

நட்சத்திர ரகசியங்கள்:பூரம் நட்சத்திரம்

பூரம் நட்சத்திரம்

27 நட்சத்திரங்களின் வரிசையில் 11 வது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிரன். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ, டா, டி, டு ஆகியவை ஆகும். தொடர் எழுத்துக்கள் மொ,மெள ஆகியவையாகும்.

Also Read
Plugin developed by ProSEOBlogger. Get free gpl themes.

குண அமைப்பு

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திர அதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திருக்கும் கட்டழகு கொண்டவர்களாக இருப்பார்கள். அழகான ஆடை அணிகலன்களை அணிவதிலும், நெடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களேதான். காம உணர்வு அதிகம் இருப்பதால் மனம் அலை பாய்ந்து கொண்டே இருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். நல்ல அறிவும், அறிவுக்கூர்மையும், பகைவர்களை வெல்லக்கூடிய ஆற்றலும் அதிகம் இருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்துவிட்டால் கட்டுப்படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன்கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடும் இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.

குடும்பம்

காதலில் வெற்றி பெறக்கூடிய ஆற்றல் மிக்கவர்கள். இவர்களின் பேச்சாற்றலால் மனைவி, பிள்ளைகளை மட்டுமல்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்திருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடிக்கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வீடு, வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்கக் கூடிய நிலையும் உண்டாகும்.

தொழில்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஓயாத உழைப்பதில் ஆர்வமிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகம் இருக்கும். சுற்றுலாத்துறை, மக்கள் தொடர்பு துறை, வர்த்தகத்துறை போன்றவற்றில் பணிபுரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருள்களை விற்பனை செய்யக்கூடியவர்களாகவும், வாசனை திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாட்டத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம் ஆடல், பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.

நோய்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களின் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள். சிற்றின்பப் பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிப்படுவார்கள். மின்சாரம் தாக்கும். மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.

தசா பலன்கள்

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் தசையாக சுக்கிர தசை வரும் இதன் மொத்த வருடம் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம், ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உறவினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலம் இழந்து இருந்தால் இளமைக்கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.

இரண்டாவதாக வரும் சூரிய தசையின் மொத்த காலங்கள் 6 வருடமாகும். இந்த தசை காலங்களில் சிறுசிறு உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலமாக இருந்தால் கல்வியில் ஏற்றம், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

மூன்றாவதாக வரக்கூடிய சந்திர தசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இந்த தசை காலங்களில் தேவையற்ற மன குழப்பங்களும், முன்னேற்றத் தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும்.

நான்காவதாக வரும் ராகு தசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இந்த தசை காலங்களில் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும், பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.

விருட்சம்

பூர நட்சத்திரக்காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் 11 மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.

பூர நட்சத்திரத்தில் செய்யக்கூடிய நல்ல காரியங்கள்

பூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது, நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது, வழக்குகளை வாதாடுவது போன்றவற்றை செய்யலாம்.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயங்கள்

கஞ்சனூர்

கும்பகோணம் மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீஸ்வரர், கற்பகாம்பிகை அருள்பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.

நாவலூர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாட கோவிலில் எழுந்தருளியுள்ள பலாசவநாதர், பெரியநாயகி அருள்பாலிக்கும் ஸ்தலம்.

தலைச்சங்காடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1கிலோ மீட்டர் தொலைவில் கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவிலில் அருள்பாலிக்கும் சங்கரநாதேஸ்வரர், சௌந்தரநாயகி அருள்பாலிக்கும் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்தால் நற்பலன்களை பெற முடியும்.

கூற வேண்டிய மந்திரம்

ஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவ

தாம் தூம்ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்

பூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்

பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திரக்காரர்களை திருமணம் செய்யக்கூடாது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular