சந்திர தசா பலன்கள்
ஒருவரை கவிஞர் ஆக்கும் திறனும் கற்பனை வளத்தை அளிக்க கூடிய ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு.சந்திரன் மட்டுமே கண்ணால் காணக்கூடிய கிரகமாகும். சந்திரனின் அழகில் மயங்காதவர் யாவரும் இல்லை. பவுர்ணமியின் ஒளி கண்களுக்கு குளிர்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் சந்திரனுக்கு உரியதாகும். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திர தசை(Chandra Dasa) நடைபெறும் காலங்கள் 10 வருடங்களாகும்.
மாதுர்காரனாகிய சந்திரன் தாயார், பராசக்தி, சுவையான விருந்து உபசரிப்புகள், ஆடம்பரமான ஆடைகள், உடல்நிலை, சீதள நோய்கள், இடது கண், புருவம், உப்பு, மீன், கடல் கடந்து செல்லும் பயணங்கள், தெய்வீக பணி, மனநிம்மதி, கற்பனைவளம், நிம்மதியான உறக்கம் போன்றவற்றிற்கு காரகனாகிறார்.
சந்திரனானவர் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்து சந்திர தசை(Chandra Dasa) நடைபெற்றால் நல்ல மன வலிமை, தைரியம், துணிவு, அழகான உடலமைப்பு, மற்றவரை கவரும் பேச்சாற்றல், தாய்க்கு நல்ல உயர்வுகள் உண்டாகும். அதிலும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று தசா நடந்தால் சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து கௌரவம் உயரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
சந்திரன் 3,6,9,12-ல் இருந்தாலும், 3,6,9,12-ம் அதிபதிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும், வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ,பயணங்களால் அனுகூலம், பொருளாதார ரீதியாக மேன்மை உண்டாகும்.
சந்திரன் பகை, நீசம் பெற்று அமைர்ந்து சர்ப கிரகங்களான ராகு அல்லது கேதுவின் சேர்க்கை பெற்றிருந்தால் தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். தன்னிலை மறந்து வாழக்கூடிய சூழ்நிலை, ஜல தொடர்புடைய நோய்களால் மருத்துவ செலவுகள், எதிலும் துணிந்து செயல்பட முடியாத நிலை, பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். தாய்க்கு கண்டம். தாய் வழி உறவுகளிடையே பகை ஏற்படும். பயணங்களால் அலைச்சல், டென்ஷன் உண்டாகும்.
சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் திரிகோண ஸ்தானங்களான 1,5,9 கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10ல் அமைந்தால் நற்பலன்கள் ஏற்படும்.
தேய்பிறை சந்திரனாக இருந்தால் 3, 6 ,10 ,11ல் அமைந்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.
சந்திரன் தனக்கு நட்பு கிரகங்களான குரு, சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று தசா நடைபெற்றாலும், இக்கிரகங்களின் நட்சத்திரங்களில் அமைந்து தசா நடைபெற்றாலும் அனுகூலமான நற்பலன்களை அடைய முடியும்.
சந்திரன் பலமாக அமைந்து குழந்தை பருவத்தில் சந்திர தசா (Chandra Dasa) நடைபெற்றால் நல்ல ஆரோக்கியம், குடும்பத்தில் சுபிட்சம், தாய்க்கு அனுகூலங்கள் உண்டாகும்.
இளமை பருவத்தில் நடைபெற்றால் நல்ல அறிவாற்றல், கல்வியில் சாதனை, பெரியோர்களை மதித்து நடக்கும் பண்பு, சிறந்த பேச்சாற்றல் ஏற்படும்.
மத்திம வயதில் (Chandra Dasa) நடைபெற்றால் சிறப்பான குடும்ப வாழ்க்கை, சமுதாயத்தில் நல்ல கௌரவம், அந்தஸ்து, பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் நல்ல உடலமைப்பு, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு, மகிழ்ச்சி யாவும் அதிகரிக்கும்.
சந்திரன் பலவீனமாக இருந்து குழந்தை பருவத்தில் தசா நடைபெற்றால் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்பு, தாய்க்கு கண்டம் ஏற்படும்.
இளம் வயதில் நடைபெற்றால் கல்வியில் மந்தம், மனக் குழப்பம் ஏற்படும்.
மத்திம வயதில் நடைபெற்றால் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, வீண் குழப்பங்கள் உண்டாகும்.
முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கிய பாதிப்பு, நீர் சம்பந்தப்பட்ட நோய்கள், எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத நிலை, நீரால் கண்டம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
சந்திரன் 12 பாவங்களில் அமர்ந்து தசா நடக்கும் போது ஏற்படும் பலன்கள்:
- சந்திரன் லக்னத்தில் அமையப் பெற்று தசா நடைபெற்றால் சிறப்பான ஆரோக்கியம், சுவையான உணவு வகைகளை சாப்பிடும் அமைப்பு, நல்ல தூக்கம் உண்டாகும். நவீன ஆடை ஆபரணம் சேரும். புகழ், பெருமை, செல்வம் ,செல்வாக்கு மேலோங்கும்.
- சந்திரன் 2-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் அதிகமான பணவரவுகள், சுகமான குடும்ப வாழ்வு, சொன்ன சொல்லைக் காப்பாற்றும் அமைப்பு, நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அனுகூலம் உண்டாகும்.
- சந்திரன் 3-ல் அமையப் பெற்று தசா நடைபெற்றால் நல்ல சுகம், தைரியம் உண்டாகும். சகோதரி யோகம், ஆடை, ஆபரண சேர்க்கை, இசையில் ஈடுபாடு உண்டாகும்.
- சந்திரன் 4-ல் அமையப்பெற்று தசா நடைபெற்றால் வீடு, பூமி, மனை, வண்டி,வாகன சேர்க்கை ஏற்படும். தனலாபம் கிட்டும். மற்றவர்களுக்கு உதவி செய்வது, உற்றார்-உறவினர்களால் உதவி பெறுவது போன்றவை சிறப்பாக அமையும். கல்வியில் நல்ல மேன்மை ஏற்படும். என்றாலும் சந்திரன் பலமிழந்து தசா நடைபெற்றால் தாய்க்கு கண்டம், மன சஞ்சலம் உண்டாகும்.
- சந்திரன் 5-ல் இருந்து தசா நடைபெற்றால் சுபகாரியம் நடைபெறும். பெண் குழந்தை பாக்கியம் ஏற்பட கூடிய அமைப்பு, குழந்தைகளால் அனுகூலங்கள் உண்டாகும். கல்வியில் மேன்மை, நல்ல அறிவாற்றல் ஏற்படும். மனைவி வழியில் சிறப்பான அனுகூலம் கிட்டும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.
- சந்திரன் 6-ல் இருந்து தசா நடைபெற்றால் நீர் தொடர்புடைய உடல் உபாதைகள், வாதநோய், புத்தி தடுமாற்றம், தாயுடன் வீண் பிரச்சனை, தாய்க்கு கண்டம் போன்றவை உண்டாகும்.
- சந்திரன்7-ல் இருந்து தசா நடைபெற்றால் மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உற்றார் உறவினர்களுடன் சந்தோசமாக வாழும் அமைப்பு உண்டாகும். ஆலயங்களுக்கு சென்று தெய்வ தரிசனம் செய்யும் வாய்ப்பு, திருமண சுப காரியம் கைகூடும் யோகம், யாவும் அமையப் பெறும்.
- சந்திரன் 8-ல் இருந்து தசா நடைபெற்றால் உடல்நலம் பாதிப்படையும், மனதில் குழப்பமான நிலை, எடுத்த காரியங்களில் தடை, தாமதம் உண்டாகும். மனைவி புத்திரர்களால் வீண் பிரச்சனைகள், ஜலத்தால் கண்டம், வயிற்று உபாதை ஏற்படும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். பண வரவுகளில் தடை நிலவும்.
- சந்திரன் 9-ல் இருந்து தசா நடைபெற்றால் அதிகமான தர்ம காரியங்களை செய்யும் வாய்ப்பு, தோட்டம் வாங்கும் அமைப்பு, தெய்வங்களை தரிசிக்கும் யோகம், விவசாயத்தில் மேன்மை, ஜல தொடர்புடைய தொழில்களில் அபிவிருத்தி, வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் அமைப்பு போன்றவை உண்டாகும்.
- சந்திரன் 10-ல் இருந்து தசா நடைபெற்றால் செய்யும் தொழில் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். உடல்நலம் மிக சிறப்பாக அமையும்.யாகம்,ஹோமம் போன்ற தெய்வ காரியத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும்.
- சந்திரன் 11-ல் இருந்து தசா நடைபெற்றால் பொருளாதாரம் மேன்மை அடையும். புத்திர விருத்தி ஏற்படும். உற்றார் உறவினர்களுடன் சிறப்பான உறவு அமையும். கவுரவம், புகழ் கூடும். புதிய ஆடை ஆபரணம் சேரும்.
- சந்திரன் 12-ல் இருந்து தசா நடைபெற்றால் உடலில் நீர் தொடர்பான உபாதைகள், எடுக்கும் காரியங்களில் தடை, வீடு, மனை வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் போன்றவை ஏற்பட்டாலும், பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …