குரோதி வருட பலன்கள் 2024
ஏப்ரல் மாதம் (14.04.2024),ஞாயிற்றுக்கிழமை, சுக்லபட்ச திதியில், திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சஷ்டி திதி, அதிகண்ட யோகம், தைதுளை கரணத்தில் பிறக்கிறது குரோதி வருடம்.எல்லாத் தமிழ் வருட பிறப்பு சித்திரை மாதம் சூரியன் மேஷத்தில் உச்சமாகி அமர்ந்திருப்பார். இந்த வருடம் கூடவே தர்மத்துக்குரிய குருவும் அவருடன் அமர்ந்துள்ளார். இது மிகப்பெரிய அரிய கோச்சார அமைப்பு.
குரோதி வருட வெண்பா
காரக் குரோதிதனில் கொள்ளமிடும் கள்ளரினால் பாரினில் சனங்கள் பயமடைவர். கார்மிக்க அற்ப மழை பெய்யும்.அகம் குறையுமே சொற்ப விளைவு உண்டெனவே சொல். |
வியாழ வட்டம் என்னும் அமைப்பில் குரு இவ்வாறு உச்ச சூரியனுடன் 2012ல் அமர்ந்திருந்தார். ஆக இவ்விதம் குரு +உச்ச சூரிய சேர்க்கை என்பது அரிதான நிகழ்வுதான். இது 12 ஆண்டுக்கு ஒரு முறையே அமையும். இந்த குரு சூரியன் இணைவு நிறைய சூரிய சம்பந்தமான குறைகளை நீக்கிவிடும். ஏனெனில் சூரியன் கோவிலில் சூரியன், சாயா, உஷா தேவி எதிரில் குருபகவான் அமர்ந்து அவரது அதீத தீட்சயனத்தை ஏற்றுக் கொள்கிறார். இதனால் பக்தர்கள் சூரிய பகவானின் சாந்தமான பலன்களை மட்டும் பெற முடிகிறது.
சூரியன் காலபுருஷ வீட்டின் ஐந்தாம் அதிபதிகுரு ஒன்பதாம் அதிபதிஇந்த இரு பாவகர்களும் சேரும்போது அங்கு வியத்தகு யோக கிரக நிலை உண்டாகிறது.இந்த கிரக கோச்சாரப்படி 2024 குரோதி வருடம் தேர்தல் நடைபெற்றால், மிக நல்ல நேர்மையான அரசியல்வாதிகள் வெற்றி பெறுவர். இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் சம பலத்துடன் இருப்பர்.
ஆளும் கட்சியை சேர்ந்த செவ்வாய் பதினோராம் எனும் லாபத்தின் அதன் அதிபதியுடன் பலம் பெறுகிறார்.எதிர்க்கட்சியை குறிக்கும் புதன் நீசம் ஆகி வக்கிரம் பெற்று ராஜயோகம் பெறுகிறார். அதுமட்டுமல்ல அவர் விபரீத ராஜயோகமும் பெறுகிறார். எனவே அரசியல் தேர்தல் களத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி இரண்டும் சமமாக இருக்கும்.
குரோதி வருட குரு பார்வை
செல்வ செழிப்பை குறிக்கும் சுக்கிரன் விரயத்தில் உச்சம் பெறுகிறார். எனவே நிறைய வெளிநாட்டு பண வரவும் அதற்கு ஈடான செலவுகளையும் மக்கள் செய்வர். மக்களுக்கு ஆடம்பர செலவு மேல் பெரும் மோகம் ஏற்பட்டு, கண்டதையும் வாங்கி பணத்தை விரயம்செய்வர். கம்ப்யூட்டர், கைபேசி, சவுண்ட் சிஸ்டம், கடிகாரம் என அடிக்கடி புதிதாக வாங்குவர்.
இளைஞர்கள் வேலையும் மாதத்திற்கு ஒன்று என மாற்றுவர். புதிய வேலைகள் கிடைத்துக் கொண்டே இருக்கும். இது போல் கடன் வாங்கவும் அஞ்ச மாட்டார்கள் ஏனெனில் கடனை திருப்பி கட்டும் தகுதியும் இருக்கும். திருட்டு பயம் அதிகரிக்கும். இந்த வருடம் வேலைக்கு பிற இடங்களுக்கு செல்லும் பெண்கள் தனியாக வாழ நேரிடும். இந்த வருட திருமண நிகழ்வுகளை தங்கள் செல்வாக்கை காட்டும் காட்சி பொருளாக ஆக்குவர். வீண் ஆடம்பரமாக கல்யாணம் நடக்கும். கடன் வாங்கியாவது நிறைய செலவழிப்பர். நிறைய வியத்தகு வினோத கல்யாண நிகழ்ச்சிகள் நடக்கும்.
குரோதி வருட சனி பார்வை
இந்த வருடம் எட்டாம் அதிபதி செவ்வாய் 11ஆம் என்னும் அரசியல் வீட்டில் உள்ளார். எனவே ஒரு பழைய அரசியல்வாதிக்கு அடிபடும் வாய்ப்பு உண்டு. தொழில்கள் நல்ல லாபத்துடனும், சிறு இடர்பாடுகளுடனும் நடக்கும். கால புருஷனின் விரைய வீட்டில் உச்ச சுக்கிரன், நீச பங்க புதன், ராகு இருப்பதால் இந்த வருடம் அவசரம் அவசரமாக பிடிவாதமாக பிற மதத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்வர். அதே வேகத்தில் அவதி அவதியாக விவாகரத்தும் செய்து விடுவர். எனவே காதலிப்பவர்கள் இந்த வருடத்தை விட்டு விடுங்கள். அடுத்த வருடமும் அதே காதல் அன்பும் நீடித்திருந்தால் திருமணம் என்ற கட்டுக்குள் வாருங்கள்.
குரோதி வருட கிரகங்களின் பலன்கள்
சூரியன்: சூரியன் உச்சமாகி குருபகவான் உடன் உள்ளதால் ஆரோக்கியம் மேம்படும். அறிவு கூர்மையாகும். குழந்தை பேரு சிறக்கும். நிர்வாகத்திறன் மேம்படும். பித்தளை பொருட்களின் பயன்பாடு அதிலும் பூஜைக்கு அதிகரிக்கும். நிறைய வரி வசூலாகும். எனில் மக்கள் செழுமையாக இருப்பதாக அர்த்தம். வாரிசினால் கவுரவம் கிடைக்கும். இவரின் உச்ச நிலை நன்மை தருகிறது.
சந்திரன்: சந்திரன் கேமத்துருவ யோகம் பெறுகிறார். இதனால் வயதான பெண்களுக்கு பீடை உண்டாகும். எனினும் சந்திரனுக்கு கேந்திரத்தில் கிரகம் உள்ளதால் இந்த தோஷம் நீங்குகிறது. இதன் மூலம் இந்த வருடம் வயதான பெண்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக வேலை செய்யும் ஆட்களை கவனமாக தேர்ந்தெடுங்கள். கிருஷ்ணரை வணங்குவது பரிகாரமாகும்.
செவ்வாய் : இவர் எட்டாம் அதிபதியாகி 11 இல் அமர்ந்துள்ளதால் ஒரு நன்மை அரசியலில் உள்ளவர்கள் குறுக்கு வழியில் பதவியை பிடிப்பர். மற்றொன்று வயதில் மூத்த அரசியல்வாதி அடிபடுவர். இவர் சனியோடு இருப்பதால் பைரவ வழிபாடு பரிகாரமாகும்.
குரோதி வருட செவ்வாய் பார்வை
புதன் : புத்திசாலி மற்றும் வேலைக்குரிய இந்த கிரகம் நீசபங்கம் பெற்றுள்ளார். இதனால் இளைஞர்கள் ஒரு வேலையில் பொருந்தி இருக்க மாட்டார்கள். மாற்றிக் கொண்டே இருப்பர். நீங்கள் கூலி வேலை செய்தாலும், கம்ப்யூட்டரில் பெரிய பதவி வகித்தாலும் ஒரு இடமாக இருக்க மாட்டார்கள். அலைபாய்வீர்கள் இதற்கு திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி வணங்குங்கள்.
குரு : இவர் உச்ச சூரியனுடன் அமர்ந்துள்ளார். மற்றும் சனியின் பார்வை பெறுகிறார். ஆனால் இந்த வருடம் சனியின் பார்வையால் சூரியன் குரு ரொம்ப அவஸ்தைக்கு ஆளாக மாட்டார்கள். உச்ச சூரியன் மிக பலமாக வலுவாக இருப்பதால் சனி சற்று அடங்கி வாசிப்பார். எனவே குருவும் தன் பலம் இழக்காமல் இருப்பதால் தான தர்மம் பொருளாதார மேன்மை நிறைய கோவில் நிர்மாணம், கௌரவ பதவிகள் உண்டாதல் கல்வி, மேன்மை இவற்றை மக்கள் அனுபவிப்பார்.
சுக்கிரன் : சுக்கிரன் உச்சமாகி ராகுவுடன் உள்ளார். கலை உலகம் சிறக்கும். மக்கள் ஏனோ ஜாலியாக இருப்பர். மது விற்பனை அமோகமாக இருக்கும். அடுக்குமாடி விற்பனை அதிவேக வாகன விற்பனை செழிக்கும். சுக்கிர உச்சமாகி ராகுவுடன் சேர்ந்திருப்பதால் ஒழுக்கம் என்பது கேள்விகுறியாகிவிடும். இந்த ஒழுக்கக்கேடு நிறைய விவாகரத்தை கொண்டு வரும். திருமணம் என்பது ஒருவருக்கு லிமிட்டாக நடக்க வேண்டும். நாளுக்கு ஒரு திருமணம் நடந்தால் நன்றாகவா இருக்கும்! ஸ்ரீரங்கம் ரங்க நாச்சியாரை வணங்கி கருடனுக்கு விளக்கேற்றினால் வீடு அடக்க ஒடுக்கமாக அமையும்.
சனி:சனியின் இருப்பை இருவிதமாக கொள்ளலாம் ஒன்று அவர் கர்ம லாபாதிபதியாகி ஆட்சி. இன்னொன்று பாதகாதிபதியாகி வலுவாக உள்ளார். ஒரு வழியில் நன்மையும் மறுவழியில் சற்று மைனஸ் உண்டு. கூடவே இருக்கும் செவ்வாய் கெடுபலன்கள் செய்ய தூண்டுவார். தொழில் சம்பந்த தொல்லை இருக்கும். அனைவரும் ஏதோ ஒரு மறைமுக எதிரியால் தொல்லைக்கு ஆளாவார்கள். இந்த சனி செவ்வாய் இணைவு நிறைய காதல் உருவாக்கும். அந்த காதலில் உண்மை தன்மை குறையும். அனைவருமே இந்த ஆண்டு சனிக்கிழமைகளில் பைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். திருட்டு அதிகரிக்கும்.
ராகு பகவான் : கால புருஷனின் 12ஆம் இடத்தில் உச்ச சுக்கிரன் நீசபங்க புதனுடன் உள்ளார். இதனால் நிறைய முறையற்ற கள்ள உறவுகள் அதிகரிக்கும். கள்ளக் கடத்தல் கடல் வழியாக நடக்கும். இந்த வருடம் வெள்ளியின் நகை கடத்தல் அதிகரிக்கும். கற்பழிப்புகள் நிறைய நடக்கும். சட்ட புறம்பான ரகசிய நடவடிக்கைகள் அதிகமாகும். மது உபயோகம் மிக அதிகமாகும். ராகு சுக்கிர இணைவு நல்லதல்ல. பெண்களை வஞ்சகமாக ஏமாற்றி சீரழிக்கும். எனவே உங்கள் வீட்டு இளம் பெண்களை மிக பத்திரமாக காப்பாற்ற வேண்டும். துர்க்கையை வணங்கவும்.
கேது : கால புருஷனின் ஆறாம் வீட்டில் உள்ளார். நோய் பரவலை கட்டுப்படுத்துவார். வேர் சம்பந்தமான மூலிகை பயன்பாட்டினை பரவலாக்குவார். மக்களை உழைக்க விடாமல் சற்று சோம்பேறி ஆக்குவார். ஆனால் உழைக்காமல் பணம் குறுக்கு வழியில் சம்பாதிப்பது எப்படி என நிறைய ஐடியா கொடுப்பார். கடன்களை ரொம்ப வளர விட மாட்டார். உங்கள் ஊரில் உள்ள பிரசித்தமான விநாயகரை வணங்குங்கள்.