குரோதி வருட பலன்கள் 2024-தனுசு
குரு பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!! பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால் விறுவிறுப்பாக முன்னேறக்கூடிய ஆண்டாக இந்த வருடம் உங்களுக்கு அமையும். அலுவலகத்தில் அனுகூலக்காற்று வீச தொடங்கும். அது தொடர வேண்டுமென்றால் முழுமையான திட்டமிடலும் நேரம் தவறாமையும் அவசியம். ஏற்றம் என்பதே ஏக்கமாக இருந்த நிலை மாறும். சிலருக்கு அலுவலகப் பணியாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் மூக்கை நுழைப்பதோ, உங்கள் விஷயத்தில் பிறரை அனுமதிப்பதோ வேண்டாம். கோப்புகளை கையாள்வதிலும் பணத்தை கையாள்வதிலும் கவனம் முக்கியம்.
குரோதி வருட கிரகநிலைகள்
இல்லத்தில் உங்கள் வாக்கு செல்வாக்கு பெறும்.குலதெய்வத்தை மனதார கும்பிட்டால் தடைபட்ட விசேஷங்கள் தடை நீங்கி கைகூடும். குடும்பத்து பெரியவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாரிசுகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த இடைவெளி மறையும். வாழ்க்கைத் துணையால் வசந்தம் வரும். சிலருக்கு பிரிந்திருந்த நிலை மாறி சேரும் சந்தர்ப்பம் அமையும்.
வீடு, மனை ,வாகனம் வாங்கும் சமயத்தில் பத்திரங்களில் கவனமாக இருங்கள். பொது இடத்தில் குடும்ப விஷயங்கள் எதையும் பேச வேண்டாம். செய்யும் தொழிலில் வளர்ச்சி நிலை உருவாகும். அது நிலைக்க தளர்ச்சி இல்லாத உழைப்பு முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் புதிய முதலீடுகள் லாபம் தரும். கூட்டுத் தொழிலில் வீண் சந்தேகம் வேண்டாம். பங்கு வர்த்தகத்தில் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம். தொழில் சார்ந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்வாகும்.
குரோதி வருட குரு பார்வை
அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பொறுப்பு பதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. அதே சமயம் சலிக்காத செயல்களும் கவனமாக இருப்பது முக்கியம். மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும் போது உங்களுக்கு கீழான யாரையும் பழிவாங்க நினைக்க வேண்டாம். கூடா நட்பு கேடாக முடியும், சஞ்சலமும் சபலமும் சற்று எட்டிப் பார்க்காம கவனமாக தவிருங்கள்.
கலை படைப்பு துறையினருக்கு திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் ஒவ்வொன்றாக வரும். பெருமை, புகழ், அந்தஸ்து வரும் சமயத்தில் தீய சவகாசம் தீயாக சுடும் உடனே விலகிடுவது நல்லது.
வாகனத்தில் சிறு பழுது இருந்தாலும் உடனே சரி செய்து விடுங்கள். இரவில் தொலைதூரம் தனியே செல்வதை தவிருங்கள். உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். வறுத்த பொறித்த உணவுகளை இயன்றவரை தவிருங்கள்.
வயிறு, கழிவு உறுப்பு, ரத்த நாளம், நரம்பு உபாதைகள் வரலாம்.
பரிகாரம்
இந்த வருட முழுக்க நரசிம்மரை வழிபட்டு வாருங்கள். உங்களுக்கு வரும் இன்னல்கள் அனைத்தும் தூள் தூளாகிவிடும்.