சனி பெயர்ச்சி பலன்கள் 2025: மிதுனராசி
(மிருக சீரிடம் 2,4-ம் பாதம் ,திருவாதிரை 1,2,3,4ம் பாதம் ,புனர்பூசம் 1,2,3ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம், மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
மிதுன ராசி
இதன் அதிபதி: புதன்.
உருவம்: இரட்டையர்கள்
வகை: உபய ராசி.
குணம்: அமைதி
தத்துவம்: காற்று
திசை:மேற்கு.
நிறம்: பச்சை
கடவுள்: விஷ்ணு
குறிப்பு :எந்த கிரகமும் உச்சம் நீசம் அடைவதில்லை.
மிதுன ராசியும் சனியும்
மிதுன ராசிக்கு சனிபகவான் 8 மற்றும் 9-ம் அதிபதி ஆவார். அவர் இதுவரையில் மிதுன ராசியின் 9-ஆம் வீட்டில் இருந்து வந்தார். இப்போதைய பெயர்ச்சியில் 10-ம் வீட்டிற்கு மாறி அமர்ந்துள்ளார்.
சனி அமர்ந்த இடத்தின் பலன்கள்
சனி மிதுன ராசியின் தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். இதனால் தொழிலை விருத்தி செய்வார். சனி கொடுக்கும் தொழில் அபிவிருத்தி என்பது ஆர்ப்பாட்டமாக இராது.காதும் காதும் வச்ச மாதிரி, சைலண்ட் மோடில்தான் இருக்கும்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
இப்போது, மிதுன ராசியின் 10-ஆம் இடத்தில் பூரட்டாதி நட்சத்திரம் எடுத்துக் கொள்வார். உங்கள் யோசனை முழுவதும் தொழில் மேன்மைக்கு யாரை அனுகலாம்.அல்லது யாரை பிடித்து கொஞ்சம் லஞ்சம் கிஞ்சம் கொடுத்து தொழிலை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தலாம். இல்லை ஒரு ஐயரை பிடித்து பரிகார பூஜை போட்டுவிடலாமா வீட்டுக்கும் ஒரு ஹோமம் நடத்த சொல்லமா. பெரிய அதிகாரிகளை கூப்பிட்டு, ரிப்பனை கட் பண்ணச் சொன்னால் வியாபாரம் பிச்சுக் கொண்டு ஓடுமா.நமக்கும் ஒரு கெத்து கிடைக்குமா, சட்டத்திற்கு உட்பட்டு தொழிலை தொடரலாமா அல்லது சட்டத்தை ஏமாற்றிவிட்டு தொடரவா அல்லது ஒரு சூமந்திரகாளியை கூப்பிட்டு இத்தனை மை போடச் சொல்லலாமா என ஓராயிரம் யோசனைகள் உங்கள் சின்ன மண்டைக்குள் ஓடும். யோசனை செய்தே, இந்தக்கால நேரத்தை கடத்திவிடுவீர்கள்
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 27 வரை
இப்போது, மிதுன ராசியின் 10-ஆமிடத் தில் சனி உத்திரட்டாதி நட்சத்திரம் எடுத்துக் கொள்வார். யோசனைகளை முடித்து, இப்போது நிஜமாகவே தொழில் விஷயத்தில் கவனம் செலுத்துவீர்கள். எனினும் உங்கள் சிந்தனைகள், திட்டங்கள், நடைமுறைகளுக்கு வரும்போது ரொம்ப சொதப்பி விடும்.
அப்புறம் அட.. அது கொஞ்சம் தவறான யோசனையாக போய்விட்டதே என மிக வருந்துவார். எதையும் பிளான் பண்ணி பண்ணனும் என தன்னைத் தானே தேற்றிக்கொணடு அடுத்த யோசனைக்கு தாவுவார். ஒரு கட்டத்தில் தொழிலை வெற்றி கரமாக நடத்துவது எப்படி என கிளாஸ் எடுக்க ஆரம்பித்து விடுவார். மேலும் சயதொழில் முன்னேற ஆயிரம் குறுக்கு வழிகள் எனும் புத்தகம் போட்டுவிடுவார். வாடிக்கையாளரிடம் இனிமையாக பழகுவது எப்படி, அவர்களை தக்க வைத்துக்கொள்வது எவ்விதம் என தினுசு தினுசாக வீடியோ போடுவர். சில அரசியல் வாதிகள் தங்களுக்கென அரசியல் தொழிலை ஆர்ப்பரிக்கச் செய்வர்.

2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை
இக்கால நேரத்தில் மிதுன ராசியின் 10-ஆம் வீட்டில் சனிபகவான் ரேவதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார். அரசியல் தொழில் செய்பவர்கள் தங்களின் பிறந்த இடத்துக்கு, அரசியலை மாற்றி, அங்கு வேட்பாளராக நிற்பர் பழைய வீட்டை எடுத்து அங்கு தங்குவார். தொழில் செய்பவர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் நுழைவார்கள். தோட்டம், பண்ணை. வயல் இவை சார்ந்த இனங்களில் தங்கள் ஈடுபாட்டை செயல்படுத்துவர். நிறைய ஜாதகர்கள் நமக்கு வாகனம்தான் லாயக்கு என பெரிய, சிறிய வாகனம் சார்ந்த தொழிலில் ஆர்வம் கொள்வீர்கள். வயல், பண்ணை சார்ந்த கருவிகள், விற்பனை அமோகமாக அமையும். பள்ளி ஆட்டோ, வேன் இவற்றை இயக்க ஆரம்பித்து விடுவீர்கள். இந்த கால கட்டத்தில், உங்களுக்கு இரும்பு வாகன பொருட்கள் அது சார்ந்த இனங்களில் ஆர்வம் பன்மடங்காகும். சிலர் சாலையோரம் மரம் நடும் தொழில் செய்வீர்கள், வாகன ஏற்றுமதி – இறக்கு மதி செய்ய இயலும் மண் அள்ளும் தொழில் செய்வீர்கள். மிதுன ராசியின் 10-ஆம் இடத்தில் செல்லும் சனி நிறைய வாகன சம்பந் தத் தொழிலை ஜாதகருக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சனியின் 3-ம் பார்வை பலன்
சனி தனது 3-ஆம் பார்வையால், மிதுன ராசியின் 12-ஆமிடத்தைப் பார்க்கிறார். 12மிடம் விரய அலைச்சல் ஸ்தானம். சனி பார்த்த இடத்தை சுருக்கும் குணம் உடையவர். எனவே மிதுன ராசியாரின் செலவை குறைத்து விடுவார். வீண் அலைச்சலை நீக்குவார். உங்கள் வீட்டில் அல்லது தொழிற்சாலையில் உள்ள வீட்டில் அல்லது தொழிற்சாலையில் உள்ள அதிகப்படியான பணியாளர்களை அகற்றுவார். காசு பணத்தை யோசித்து செலவழிக்கச் செய்வார். அட நீங்கள் பேசுவதுகூட சுருக்கமாக பேசுவீர்கள் உங்கள் தாயாரை அங்கிங்கு அலையவிடாமல், ஓரிடத்தில் இருக்கச் செய்வார். உங்கள் தந்தையின் காது சற்று மந்தமாகும். சதா ஊர் சுற்றிக் கொண்டிருந்த உங்கள் மாமனார், அலைச் சலை குறைப்பார். பங்கு, வர்த்தகம் பக்கம் ரொம்ப போகவிடமாட்டார். உங்கள் ஒப்பந்தங்களை, நீடிக்க விடமாட்டார். வீடு விற்பதில் தாமத்தை உண்டாக்குவார். உங்கள் சைக்கிள் காணாமல் போகும். மிதுன ராசியின் 12-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, அதன் பலன்களை குறுக்குகிறார். சிலர் தூக்கம் வராமல் அவதிப்படுவர்.
சனியின் 7-ம் பார்வை பலன்
சனி தனது ஏழாம் பார்வையால், மிதுன ராசியின் 4-ஆமிடத்தை நன்றாக பார்க்கிறார். 4-ஆமிடம் என்பது வீடு, மனை, வாகனம் சார்ந்த இடம். அதனை நோக்கும் சனி, அதன் பலன்களை சுருக்குகிறார்.வீட்டு ஒப்பந்தம் நீங்கும். இதனால் சிலருக்கு வீடு மூலம் வந்து கொண்டருந்த பண வரவு நின்றுவிடும். வீடு கட்டும் அரசு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்படும். வாகன டீலர்ஷிப் வேறுவிதமாக மாறும். குடும்பத்தில் உங்கள் தாயாரின் பேச்சுக்கு மதிப்பிருக்காது. வீட்டுக்கடனை தவிர்ப்பார்.
அரசியல்வாதிகளை சொந்த இடத்திற்கு வரவழைப்பார். உங்கள் மூத்த சகோதரன், தாய்,தந்தை வீட்டில் வசிக்க வருவார். வீடுபற்றி உங்களின் லட்சியம் எண்ணம் மாற்றம் பெறும். வாகன பழுது நீக்கும் வேலை கிடைக்கும். காவல் துறையினரின் பதவி உயர்வு சற்று மெதுவாக நடக்கும். பக்கத்து வீட்டில் மலரும் காதல், செம சண்டையில் முடியும். மாணவர்களின் கல்வி விஷயம் சற்று மெதுவாகும். வீட்டுக்கடன் பிராசஸ் ரொம்ப தாமதப்படும். 4-ஆமிடத்தை பார்க்கும் சனி, அதன் காரக பலன்களை தாமதம் செய்கிறார்.
சனியின் 10-பார்வை பலன்
சனி தனது பத்தாம் பார்வையால், மிதுன ராசியின் 7-ஆமிடத்தை எட்டிப் பார்க்கிறார். 7-ஆமிடம் என்றவுடன் திருமணம்தான் ஞாபகத்துக்கு வரும். அந்த பாவத்தை பார்க்கும் சனி, திருமணத்தை தாமதமாக நடத்தச் செய்வார். அல்லது திருமணம் ஏறுக்கு மாறாக நடக்கும். பெண், பையனைவிட மூத்தவராக இருக்ககூடும். மணமக்களில் ஒருவர் தங்க நிறமாகவும், ஒருவர் நிலக்கரி நிறத்திலும் இருப்பார். சில காதல் திருமணங்கள் வெகு கண்றாவியாக நடக்கும் வாய்ப்புள்ளது.
திருமண மைய அமைப்பாளர்கள் திருமணத்தில் தங்களது இயலாமையைக் காட்டிவிடுவர். நீங்கள் சந்திக்கும் நபர்கள், உங்களிடம் வெறுப்புணர்வு காண்பிப்பர். உங்கள் வியாபார கூட்டாளி, உங்களை எப்போதும் ஏமாற்றி, உங்கள் காலை வாரி விடலாம் என்று காத்துக் கொண்டிருப்பார். பிறரிடம் செய்யும் விவாதம், உங்களுக்கு எதிராக திரும்பிவிடும். உங்கள் பெண்ணுக்கும் உங்களுக்கும் இடையே அவளின் காதல் சம்பந்தமாக சண்டை வரும். உங்கள் வாரிசு ஊனமுற்ற ஒருவரை திருமணம் செய்ய பிடிவாதம் பிடிப்பார். சனி 7-ஆமிடத்தைப் பார்த்து, அதன் செயல்களை தாறுமாறு ஆக்குகிறார்.
மிதுன ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்!
சனி இந்த பெயர்ச்சி காலத்தில் ரேவதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்! இதுவரை சனி பெயர்ச்சியால் ஏற்பட்ட நன்மைகளை தக்க வைத்துக்கொள்ள மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பாராத திருப்பங்களால் நஷ்டம் அடையும் தன்மையும் காணப்படுகிறது. ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நன்மை போலவே பல தீய விஷயங்கள் மிக அருகிலேயே வந்து உங்களை தொந்தரவு செய்யக்கூடும். நல்லது இது கெட்டது என்று தீர்க்கமாக ஆராய்ந்து முடிவு செய்யும் உங்களது ஆழ்ந்த அறிவு இந்த சமயத்தில் வேலை செய்யாமல் & அறிவு உங்களுக்கு உதவாமல் பாதுகாப்பு இல்லாத தன்மை உருவாகும். ஆகவே கவனமாக இருக்கவும்.
மிதுன ராசியில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
உங்களை பலகாலம் இழுத்தடுத்திக் கொண்டிருந்த ஒரு வழக்கு இப்போது உங்கள் பக்கம் தீர்ப்பாகும். உங்களுக்கு இதுவரை மறுக்கப்பட்டு கொண்டு இருந்த நீதி ஓரளவு உங்கள் பக்கம் கிடைத்துவிடும். ஆனால் இதற்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும். மனநிம்மதியை பணம் கொடுத்து பெற வேண்டிய சூழலை சனி இந்த பெயர்ச்சி காலத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது உருவாக்குவார். மனதில் ஒரு பெரிய குறையுடனே நீங்கள் உங்கள் நிம்மதியையும் அனுபவிக்க வேண்டிய ஒரு சூழல் இருக்கும் இரட்டை மன நிலைமையில் உங்களை வைத்திருக்கும்.
சனி உத்திரட்டாதி சாரத்தில் மாறும்போது நீங்கள் சண்டை கோழி போல் மாறிவிடுவீர்கள். எதற்கு எடுத்தாலும் சண்டை எதைத் தொட்டாலும் வம்பு எதை நினைத்தாலும் அது சிக்கலாகும் என்ற நினைப்பு உங்கள் மனதில் மேலோங்கி நிற்கும் காலம் சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலம்.
ஒரு வருட காலம் இந்த சண்டை போடும் மனநிலை உங்கள் மனதில் மேலோங்கி இருக்கும் சண்டை போட்டால் வெற்றி உங்கள் பக்கமா என்று கூட உங்களுக்கு தெரியாமல் யாருடன் சண்டை போடுவது எதற்காக சண்டை போடுவது என்ற பாகுபாடு இல்லாமல், உங்களை விட அனுபவத்தில், வயதில், பதவியில் பெரியவர்களுடன் கூட சண்டை போட்டு விடுவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த காலகட்டத்தில் பிறரை சண்டைக்கு தூண்டும் அமைப்பை கொண்டிருப்பார்கள் அதாவது பெண்ணாக இருந்தால் தனது கணவரை சண்டைக்கு தூண்டுவது ஆணாக இருந்தால் தனது மனைவியை சண்டைக்கு தூண்டுவது என்று முன்யோகனை இல்லாமல் நடந்து கொள்வார்கள்
இப்படி இருந்தாலும் புதிய சொத்து வாங்குதல் சொத்துக்களை விரிவாக்கம் செய்தல் நல்ல காரியங்களில் ஈடுபடுதல், மங்களகரமான விஷயங்களை செய்து கொடுத்தல் போன்ற நல்ல காரியங்களிலும் சனி பகவான் திருவாதிரை நட்சத்திர அன்பர்களை ஈடுபடுத்துவார் அதற்குரிய வெற்றியையும் கொடுப்பார்
ஆனால் இப்படி நல்ல காரியங்கள் செய்யும்போதும் மனஸ்தாபத்துடன் சண்டை சச்சரவும் சேர்ந்து செய்ய வேண்டிய ஒரு சூழலை சனி உருவாக்கிக் கொண்டே இருப்பார்
வார்த்தைகளின் எண்ணங்களின் செயல்களில் பிறருடன் நாம் கொண்டிருக்கும் பழக்க வழக்கங்களில் திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம்
உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரை முதுகு, முதுகுத்தண்டு வடம் போன்றவற்றின் மீது மிகுந்த அக்கறை திருவாதிரை நட்சத்திர அன்பர்கள் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு எலும்பு முறிவு போன்ற விபத்துக்கள் ஏற்பட்டிருந்தால் அதன் பாதிப்புகள் இந்த காலகட்டத்தில் மிக அதிகமாக காணப்படும் ஆகவே மருத்துவ சிகிச்சை தவறாமல் தாமதம் செய்யாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்
தடைகளை உருவாக்கினாலும், மேற்கல்வி கல்வி முயற்சி புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல் போன்றவற்றில் சனி சாதகமாக நடந்து வளர்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார் என்று நிச்சயம் சொல்லலாம்.
மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்பவர்கள் அல்லது புதிய மருத்துவ சிகிச்சை அதாவது சர்ஜரி போன்ற மிக முக்கியமான சிகிச்சை தேவைப்படுகின்றவர்கள் இந்த காலகட்டத்தில் அதிகமான பாதிப்புகளை சந்திக்க வேண்டிய அமைப்பாக சனி பெயர்ச்சி காணப்படுகிறது ஆகவே ஒன்றுக்கு பலமுறை ஆலோசித்து யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
திருமணம் தொடர்பான முடிவு எடுப்பவர்கள், கவனக் குறைவினால் தவறான முடிவு எடுப்பதற்கு வாய்ப்பு உண்டு ஆகவே வரன் பார்த்தல், பெண் பார்த்தல் விவாகரத்து வழக்குகள் இவற்றை மிகவும் கவனமாக கையாள வேண்டும்
மிதுன ராசியில் புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் இவற்றில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சனி பகவான் இந்த காலகட்டத்தில் முதல் பகுதியின் அதாவது பூரட்டாதி மற்றும் உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது உங்களுக்கு பெருமளவில் நன்மைகள் கிடைக்கும்,
இந்த நன்மைகள் கைக்கு வருவதற்கு தாமதமாகும் ஆனால் நன்மையான சூழல் அதிகம் உருவாகும். வேலை பார்க்கும் இடத்தில் புதிய வாய்ப்புகள் சனி உருவாக்கி தருவார் ஆனால் அவை உடனே கை கூடும் என்று சொல்ல முடியாது நிறைய முயற்சிகளை எடுத்து தக்க வைத்துக் கொள்ள வேண்டிய போட்டிகளையும் சனி உருவாக்கித் தருவார்
சனி ரேவதி நட்சத்திர சாரம் அடைவதற்குள் கிடைத்திருக்கும் அனைத்து நன்மைகளையும் தக்க வைத்துக் கொள்ளும்படி ஏனைய கிரக அமைப்புகள் கை கூட வேண்டும் அல்லது தசா புக்தி அதற்கு சமமான அளவில் பலன் தர வேண்டும் இல்லையென்றால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது என்ற அளவில் வாய்ப்புகள் தட்டிப் போகும் .ஆனால் நிறைய வாய்ப்புகளும் நிறைய பலன்களும் உருவாகிக் கொண்டே இருக்கும். வெளிநாட்டு பயணம் வாய்ப்புகள் அதன் மூலம் பெரிய அளவில் லாபம் அனுகூலம் பதவி உயர்வு அவசியம் உருவாகும்
வேலை பார்க்கும் இடத்தில் மட்டுமல்ல சொத்து வாங்குதல் பணம் சேமித்தல் புதிய முதலீடுகள் செய்தல் என்று பல வாய்ப்புகளை சனி கதவுகளை திறந்து வைத்து அழைப்பார். ஆனால் அவற்றை ஓரளவு தடைகளும் சேர்த்தே வழங்குவார் அதனால் கவனமாக முயற்சி செய்து மிதுன ராசி புனர்பூச நட்சத்திர அன்பர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில. திடீர் தகவல்கள் வந்து மனதை குழப்பம் அவசியம் இல்லாத செலவுகளை உருவாக்கும் ஆனால் உயிர் பாதிப்பு உடல் மோசமாவது என்று ஆகாது . விரயம் அதிகமாக நிகழும் அதாவது பயத்தில் சிகிச்சை செய்து பின்னர் ஒன்றுமே இல்லை பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும் ஆனால் சிகிச்சையும் செலவுகளும் தவிர்க்க இயலாத அளவில் கட்டுப்படுத்த இயலாத அளவில் நிகழும்
மிதுன ராசி புனர்பூச நட்சத்திர அன்பர்கள் இந்த காலகட்டத்தில் கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் சொத்து நிலவரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்தால் நல்லபடியாக அதை செய்து முடிக்க முடியும். அதேபோல் நிதி ஆதாரத்தை அதிகமாக பெருக்கிக் கொள்ள முடியும் பல திறமைகள் கொண்ட மிதுன ராசி புனர்பூச அன்பர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வழியில் பணம் சேர்ப்பதற்கு வருவாய் ஈட்டுவதற்கு வாய்ப்புகளை சனி உருவாக்கித் தருவார்
சனிபகவான் அருளை பெற்றுத்தரும் சனைச்சர ஸ்தோத்திரம்!
மிதுன ராசிக்கு சனியின் மொத்த பலன்
மிதுன ராசியின் 10ம் இடத்தில் அமர்ந்த சனி ரொம்ப மன குழப்பம் தருகிறார் ஏனெனில் அவர் உங்களின் 8ம் அதிபதியும் ஆவதால் ஒரு செயலை நிறைக்கச் செய்ய விடமாட்டார். பார்க்கும் பலன்களும் ஓரளவு சுமாராக இருக்கிறது. உங்கள் வேலை விஷயமாக ஒரு முடிவுக்கு வருவதற்கே இந்த சனிப்பெயர்ச்சி சரியாகிவிடும்.
சனி வக்கிர பலன்கள்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார் இப்போது வேண்டாத யோசனை குறைந்து உருப்படியாக ஏதாவது செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரமடைகிறார் தொழிலில் மேற்கொண்டு இருக்கும் செயல் முடிவுகள் பற்றி சந்தேகம் கொள்வீர்கள் அகலக்கால் வைத்துவிட்டோமோ என பயப்படுவீர்கள் தொழில் வேகத்தை சற்று நிதானப்படுத்துவீர்கள் எனினும் வக்கிர நிவர்த்தி அடைந்தவுடன் சரியாகிவிடும்.
வக்ரசனி காலத்தில் திருக்குவளை ஸ்ரீ கோழினி நாதரை வணங்கவும்.
பரிகாரங்கள்
- திருநாரையூர் சனி மனைவி குழந்தைகளுடன் உள்ளவரை வணங்குவது நல்லது.
- சேந்தமங்கலம் பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கலாம்.
- சனி காயத்ரி மந்திரம் கூறலாம்.
- ஆஞ்சநேயர் அஷ்டோத்திரம் கூறவும்.
- அருகில் உள்ள சனீஸ்வர கோவிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதுடன் அங்குள்ள அர்ச்சகர் தம்பதிக்கு தேவை கேட்டு உதவும்.
- ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வாங்கி காணிக்கை ஆக்கவும்.
- பக்தி புத்தகம் விநியோகிக்கலாம்.
- தொழில் செய்யும் இடத்தில் உள்ள ஊனமுற்றவருக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்.